உள்ளூர் செய்திகள்

படிக்கட்டுகள்!

சென்னை, தியாகராய நகர், ஸ்ரீராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 9ம் வகுப்பு படித்த போது, கணக்கு ஆசிரியராக இருந்தார் பாலகிருஷ்ணன். எப்போதும், வெள்ளைச் சட்டை, பஞ்சகச்ச வேஷ்டியுடன் காட்சி தருவார்.கையில், சாக்பீஸ் எடுக்கும் அழகே தனித்துவமாக இருக்கும். கையெழுத்தை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் தோன்றும். எளிமையாக பாடங்களை விளக்கி, தணியாத ஆர்வத்தை உண்டாக்கி விடுவார்.ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுத்தவர் சையது. நான் கொஞ்சம் விஷமம் செய்பவன்.ஒரு நாள் வகுப்பறையின் வெளியில் நிறுத்தி விட்டார். அவர் இலக்கண பாடம் நடத்தியதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தேன். வகுப்பில் கேள்வி கேட்ட போது, வெளியில் நின்ற நான் முந்தி விடை சொன்னேன்.மிகவும் பாராட்டி, 'வகுப்பில் வந்து நீ உட்காரலாம். ஆனால், முழு பாடத்தையும் நாளை ஒப்பிக்க வேண்டும்...' என கட்டளை பிறப்பித்தார்.அதை ஏற்று தவறின்றி ஒப்பித்ததும் மிகவும் பாராட்டினார். ஆங்கில மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வதால் விளையும் நன்மைகளை எடுத்து கூறினார். பின்நாட்களில், என் பணியில் அது மிகவும் பயன்பட்டது.எனக்கு, 67 வயதாகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தலைமை பொதுமேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். என் கணித மற்றும் ஆங்கில அடிப்படை அறிவை வளர்க்க உதவிய ஆசிரியர்களை, நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்.- வெ.விஸ்வநாதன், கோவை.தொடர்புக்கு: 70326 51003


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !