ஹிஸ்பிட் முயல்!
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதி புல்வெளிகளில் வாழும் அரிய வகை உயிரினம் ஹிஸ்பிட் முயல். இது, அசாம் காட்டுமுயல் என்றும் அழைக்கப்படுகிறது. தனித்துவமான தோற்றத்துடன் காணப்படும். மெதுவாக ஓடும்; ஆனால் எளிதாக மறைந்து கொள்ளும். கரடுமுரடான ரோமங்கள், இயற்கையாக மறைந்து கொள்ள உதவும். உடல் மஞ்சள்-, பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். நீண்ட காதுகள், குறுகிய வால், பெரிய பற்கள், இதன் அடையாளம். இது, 50 செ.மீ., வரை வளரும். வளர்ந்த முயலின் எடை 2.5 கிலோ வரை இருக்கும். உயரமான புல்வெளி, சதுப்பு நிலம், ஆற்றங்கரைகளில் வாழும். அசாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் நேபாளம், வங்கதேசம், பூடான் வரை பரவியிருந்தது. இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது. உலக அளவில் மிக அரிதான முயல் இனங்களில் ஒன்றாக வகைபடுத்தப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும். புல், இலை, தளைகளை உணவாக உட்கொள்ளும். தனித்து புல்வெளிகளில் மறைந்து வாழும் பண்புள்ளது. ஆண்டுக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். வேட்டை, வாழிட இழப்பு, விவசாய நில விரிவாக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளகியுள்ளது. இந்த விலங்கினத்தை பாதுகாக்க சிறப்பு பூங்காக்களில் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. - விஜயன் செல்வராஜ்