உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (275)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 13; பிரபல தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் வகுப்புத் தோழி ஒருத்தி, சர்வதேச நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை பொழுதுபோக்காக சேகரித்து வருகிறாள்; அவளிடம் இருக்கும் நாணயங்களை எடுத்து, ஒரு முறுக்கு கூட வாங்கி தின்ன முடியாது. இது ஒரு 'பயனற்ற வேலை' தானே என்று கேட்டால், என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறாள். நம், 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை சேர்த்தால் கூட விரும்பியதை வாங்கி மகிழலாம்; ஆனால், அது பற்றி எந்த உணர்வும் இன்றி செயல்படுகிறாள். அவளுக்கு தகுந்த அறிவுரை கூறுங்கள்.இப்படிக்கு,ஆர்.எஸ்.நியத்தி கடம்பி.அன்பு மகளுக்கு...உனக்குத்தான் தக்க அறிவுரை தேவையாக இருக்கிறது. உன் தோழி, ஒரு ஆர்வமிக்க நாணயவியல் சேகரிப்பாளர். அவரது ஆர்வம் மேலும் வளர வாழ்த்துகிறேன். எல்லா வகைகளிலும் நாணயம் சேகரிப்பது சிறப்பானது. அதன் வரலாற்றை அறிவியல் ரீதியாக அறிந்து கொள்வது நாணயவியல் துறை ஆகும்.இதில் நாணயங்களை சேகரிப்பதும், ஆய்வுகள் செய்வதும் அடங்கும். ஒரு பிரதேசத்தின் வரலாறு தொடர்பான தகவல்களை கண்டறிவதில் பெரும் பங்கு வகிக்கின்றன நாணயங்கள்.நாணயவியலின் தந்தை என்று போற்றப்படுபவர் ஜோசப் எக்கல். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா வியன்னா நகரில், 1739- முதல், 1798 வரை வாழ்ந்தவர். இந்திய நாணயவியலின் தந்தை என புகழ் பெற்றவர் பரமேஸ்வரிலால் குப்தா. தமிழகத்தில் சங்க கால நாணயவியலின் தந்தை என்று போற்றப்படுபவர் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இவர் கண்டுபிடித்து, ஆய்வு செய்த நாணயங்கள் குறித்த தகவல்கள், தமிழ் மொழியை, செம்மொழியாக தகுதி உயர்த்த உதவியுள்ளது.நாணயங்களை ஆராய்ந்தால், ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அறியலாம். பழங்காலத்தில் சந்திர குப்தன் ஆட்சியில் தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. ஸ்கந்த குப்தன் என்பவர் ஆண்ட காலத்தில், தங்க முலாம் பூசிய செம்பு நாணயங்கள் புழங்கின; இதனால், அவன் ஆட்சி காலத்தில், பொருளாதாரம் நசிவடைந்திருந்தது என்ற முடிவுக்கு வரலாம்.ரோம பேரரசர்களின் பொழுதுபோக்காய் நாணய சேகரிப்பு இருந்தது. உலகின் தொன்மையான நாணயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இது, கி.மு., 650ல் லிடிய அரசால் புழக்கத்தில் விடப்பட்டிருந்தது. இந்த நாட்டின் பகுதி, தற்போது மத்திய கிழக்கு நாடான துருக்கியில் உள்ளது. இந்தியாவில் தொன்மையானது, சவுராஷ்டிரா ஜனபடா நாணயம் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் தொன்மையான பணத்தாள், ஐரோப்பிய நாடான பிரிட்டிஷ் வெளியிட்ட, பவுன்ட் ஸ்டெர்லிங் ஆகும்.தமிழக நாணயவியல் சங்கத்தை, கடந்த, 1986ல், தினமலர் நாளிதழ் பங்குதாரராக இருந்த அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி நிறுவினார். தென்னிந்திய நாணயவியல் கழகத்தையும் அவரே நிறுவினார்; அவரது சிறந்த கண்டுபிடிப்புகளும், ஆய்வுகளும் நுால்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் சங்கம், 1998ல் அவரை புத்தாய்வு மாணவராக அதாவது, பெல்லோவாக அறிவித்து கவுரவித்தது.இந்தியாவில் பழங்கால நாணயங்கள் ஆறு வகைப்படும். அவை...* இந்தோ கிரீக் மவுரிய குப்த நாணயங்கள்* முகலாயர் காலத்து நாணயங்கள் * கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள் * அபூர்வ உலோகங்களால் ஆன நாணயங்கள்* அச்சு பிழை, வார்ப்பு பிழை உள்ள தனித்துவமான நாணயங்கள் * சுதந்திர இந்திய நாணயங்கள். நாணயங்களை சேகரித்து, ஆய்வு செய்வது மிகவும் சிறந்த பழக்கம். உன் தோழியை பின்பற்றி, நீயும் இதை கடைபிடித்தால் வாழ்வில் உயரலாம்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !