இளஸ்... மனஸ்... (279)
அன்புள்ள அம்மா...என் வயது, 32; இல்லத்தரசியாக இருக்கிறேன். எட்டு வயதில் மகன் இருக்கிறான்; தனியார் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறான். ஆள் பார்க்க, உருண்டு திரண்டு, தமிழ் சினிமா சிரிப்பு நடிகர் இளம்பருவத்து தோற்றத்தில் இருப்பான். பள்ளியில், சக மாணவர்களுடனும், தெருவில், அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியருடனும் சண்டை இழுப்பான். அவனை விட, வயதில் பெரியவர் யார் எது கூறினாலும் கேட்க மாட்டான்; எவ்விதமாய் கண்டித்தாலும் அடங்க மறுக்கிறான்.இதற்கு உரிய காரணம் புரியவில்லை. அவன் மனதில் தவறான எண்ணங்கள் வந்து பிடித்து, ஆட்டுகிறதோ என, சந்தேகப்படுகிறேன்; அவனை அமைதிப்படுத்தி, சமூகத்தில் வாழும் ஒழுங்கை கற்பிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்... தகுந்த வழிமுறைகளை கூறி, என் மன பதற்றத்தை போக்குங்கள்.இப்படிக்கு, சங்கீதா முத்துக்குமார்.அன்புமிக்க சகோதரி...முதலில், மனதில் ஏற்பட்டுள்ள பதற்றம் வீணானது. அதை அகற்றுங்கள். உங்கள் மகனுக்கு, 'அப்போசிசனஸ் டீபியன்ட் டிசாடர்' என்ற ஓ.டி.டி., பிரச்னை இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கிறேன். இது ஒரு வகை மனநோய் என்று எடுத்துக் கொள்ளலாம். தமிழில் இதை, 'எதிர்வு பணியாமைக் குறைபாடு' என நிபுணர்கள் குறிப்பிடுவர்.இந்தியாவில், ஆண்டுக்கு, 10 லட்சம் சிறுவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை இருப்பதாய், மருத்துவ பதிவு ஏடுகள் தரும் புள்ளி விபரத்தில் உள்ளது. இதுபோன்ற பிரச்னையால், சிறுமியரை விட, சிறுவர்களே அதிகம் பாதிக்கின்றனர். இந்த நோய் உடைய சிறுவர்கள், தங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொள்வர். தன்னை விட, மூத்தவருக்கு எதிராக பகைமை கொள்வர். எந்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பர். கோபத்துடன், கீழ்ப்படியாமையை அரங்கேற்ற முயற்சிப்பர்.இதுபோன்ற பாதிப்பு மரபியல் ரீதியாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. சுற்றுசூழலால் உருவாவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பிரச்னை உடையோருக்கு உள்ள அறிகுறிகளை பார்ப்போம்...எப்போதும் எரிச்சலான மனநிலையே இருக்கும்தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவர்வலிய சென்று தீங்கு செய்ய எண்ணுவர்எங்கும் கலகக் குரல் எழுப்புவதாக நினைப்பர்பழி வாங்கும் குணம் மேலோங்கியிருக்கும்தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வதும் நடக்கும்சமூக விரோத செயல்பாடுகளிலும் ஈடுபடுவர்எப்போதும் மனபதற்றமாய் இருப்பர்.பெற்றோர், ஆசிரியர், மூத்த சகோதர சகோதரியர், தெரு மக்கள் என, யாருடனும், இந்த பாதிப்பு உடைய சிறுவர்கள் இணங்கி போக மாட்டர். சிலருக்கு, இப்பிரச்னை சில ஆண்டுகள் வரை நீடிக்கும். சிலருக்கு ஆயுட்காலம் வரை தொடரும்.ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேனிங் போன்ற, நவீன லேபரட்டரி பரிசோதனை முறைகள் இப்பிரச்னையை உறுதி செய்ய தேவைப்படாது.விழிப்புணர்வு, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மற்றும் சில மருந்துகள் வழியாக மகனை முழுமையாக குணப்படுத்தலாம். குடும்ப அங்கத்தினர்களும் தக்க ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.முறைப்படி கற்று தரும் யோகாசனம், தியானம் வகுப்புகளுக்கு அனுப்பலாம். வீட்டில் அனுசரனையான சூழலை ஏற்படுத்தி சாந்தப்படுத்தலாம். அவ்வப்போது, மகனுக்கு எளிமையான நீதிக்கதைகள் கூறி, நன்நெறிகளை பின்பற்ற தெளிவாக எடுத்துக் கூறவும். விரைவில், மன பதற்றம் நீங்கி, அறிவில் தெளிவு பெற வாழ்த்துகிறேன்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.