இளஸ் மனஸ்! (280)
அன்புள்ள அம்மா...என் வயது, 16; தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படிக்கும் மாணவி. உலகில், ஜனத்தொகை கூடி வருகிறது. இதனால், பொதுப் பயன்பாடு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. காற்றில் மாசும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில், சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாமல் தீர்ந்து விடுமோ என அச்சப்படுகிறேன். என் பயம் நியாயமானதா என்று அறிய விரும்புகிறேன். ஒருவேளை, இப்போது இல்லா விட்டாலும், இன்னும், ஐம்பது, நுாறு ஆண்டுகளில், ஆக்சிஜன் தீர்ந்து போக வாய்ப்பு உள்ளதா... இது பற்றிய கவலை, என்னைப் போல் உடன் படிக்கும் பலருக்கும் இருக்கிறது. வகுப்பெடுக்கும் ஆசிரியர்களிடம் கேட்டோம். தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. என் சந்தேகத்துக்கு, தகுந்த விளக்கம் தாருங்கள்.-இப்படிக்கு,ஆர்.மகேஸ்வரி நாகராஜன்.அன்பு செல்லம்...தமிழ் மொழியில், உயிரியம், உயிர்மம், உயிர்வளி, பிராணவாயு என அழைக்கப்படுகிறது ஆக்சிஜன். இது, ஒரு தனிம வேதிப்பொருள். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் பிரிஸ்ட்லி, 1774ல் கண்டுபிடித்தார். இந்த தனிமத்துக்கு ஆக்சிஜன் என பெயர் சூட்டியவர் அன்டோய்ன் லாவொய்சர்.பூமியில், 420 கோடி சதுர கி.மீ., அளவில் காற்று உள்ளது. ஒருவர், ஒரு நாளில், 11 ஆயிரம் லிட்டர் காற்றை உள்ளிழுத்து வெளியிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில், ஆக்சிஜன் தோன்றி, 280 கோடி ஆண்டுகள் ஆகின்றன. காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்கள் பற்றி பார்ப்போம்...● நைட்ரஜன் - 78 சதவீதம்● ஆக்சிஜன் - 21 சதவீதம்● மற்றவை - 1 சதவீதம். ைஹட்ரஜன், நியான், ஆர்கான், செனான், ஹீலியம், கிரிப்டான், ரேடான் போன்ற வாயுக்களும் காற்று மண்டலத்தில் உள்ளன.முதன்முதலில், சயனோ பாக்டீரியா உயிரிகள் தான் ஆக்சிஜனை உற்பத்தி செய்தன.புவியின் வாயு மண்டலத்துக்கு பல்வேறு வழிகளில் ஆக்சிஜன் கிடைக்கிறது.பூமிக்கு, 50 சதவீத ஆக்சிஜனை கடல் தான் உற்பத்தி செய்கிறது. இது தவிர, பச்சை புல்வெளிகள், அடர்ந்த காடுகளும் தருகின்றன. ஒளிசேர்க்கைக்காக கார்பன் - டை ஆக்சைடு வாயுவை எடுத்து, ஆக்சிஜனை வெளியிடுகின்றன மரங்கள்.பிரபஞ்சத்தில், மூன்றாவது பெரிய எடை உடைய தனிமம் ஆக்சிஜன். துாய ஆக்சிஜனுக்கு நிறமோ, வாசனையோ, சுவையோ இல்லை. திரவ வடிவில், ஆக்சிஜன் மங்கிய நீல நிறத்தில் இருக்கும். மனித உடலில், மூன்றில் ஒரு பங்கு எடை ஆக்சிஜனாக இருக்கிறது. நுாறு சதவீதம் சுத்தமான ஆக்சிஜனை, மனிதனால் சுவாசிக்க இயலாது. அப்படி சுவாசிக்க முயன்றால், ரத்த இருமல் வந்து விடும். பூமிக்கு அருகே, மெர்க்குரி கிரகத்தில், ஆக்சிஜன் இருப்பதாய் கூறுகின்றனர், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.இப்போது, உன் கேள்விக்கு வருவோம்...ஒவ்வொரு ஆண்டும் வாயு மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு, 0.001 சதவீதம் மாறுபாடு அடைகிறது. இதே நிலை, 10 ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தாலும், வாயு மண்டலத்தில் ஆக்சிஜன் அளவில் பெரிய மாறுதல்கள் ஏற்படாது. எனவே, அது பற்றி கவலைப்பட தேவையில்லை. படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றத்துக்கான வழிகளை தேடவும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.