உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ! (293)

அன்பு அம்மாவுக்கு...எனக்கு, 17 வயதாகிறது. அரசு பள்ளி ஒன்றில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஒருநாளைக்கு, மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும் என்ற விதியை யார் கொண்டு வந்தது. இந்த எழுதப்படாத விதி நல்லதா, கெட்டதா... ஒருநாளைக்கு எத்தனை வேளைகள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக வாழலாம். இது குறித்து விளக்குங்கள்.இப்படிக்கு,ஜீவநந்தன்.அன்பு மகனே...பழந்தமிழ் புலவர் திருமூலர், 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்...' என்று அழகாக பாடுகிறார். ஒருமுறை சிவபெருமானிடம், 'ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடலாம்...' என யோசனை கேட்டிருக்கின்றனர் பக்தர்கள். அப்போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்த சிவன், நந்தியிடம், 'தினமும் ஒருமுறை உணவு... மூன்று வேளை குளியல்...' என கூறி அனுப்புகிறார்.வரும் வழியில் சிவன் கூறியதை மறந்து குழம்பிய நந்தி, 'தினமும் மூன்று வேளை சாப்பாடு; ஒரு வேளை குளியல்...' என்று பக்தர்களிடம் சொன்னது. இதையறிந்து சிவன் நந்தியை சபித்தது எல்லாம் புராண கதை சுருக்கமாக உள்ளது.ஹிந்து மதத்தில்...* ஒருவேளை உண்பவன் யோகி* இருவேளை உண்பவன் போகி அதாவது உல்லாசி* மூன்று வேளை உண்பவன் ரோகி. அதாவது, நோயாளி என வரையறுக்கப்பட்டுள்ளது. இரைப்பையில் மூன்றில் ஒரு பங்கு உணவு, ஒரு பங்கு வெற்றிடம், ஒரு பங்கு நீர் நிரம்ப சாப்பிட வேண்டும் என, இஸ்லாம் கூறுகிறது.மனித இரைப்பையில் ைஹடிரோகுளோரிக் அமிலம், பொட்டாஷியம் குளோரைடு அமிலம், சோடியம் குளோரைடு அமிலம் கலந்திருக்கும்.ஐரோப்பாவில் நடந்த தொழில்புரட்சி வெற்றி பெற்று பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதே, தினமும் மூன்று வேளை உண்பதின் துவக்கமாக அமைந்தது.இரவு துாக்கத்துக்கும், காலை சிற்றுண்டிக்கும் இடையே, ஏழு மணி நேர இடைவெளியும், மதியம் - இரவு உணவுகளுக்கு இடையே, நான்கு மணி நேரமும் இடைவெளியும் இருப்பது நலம் என்கிறது ஒரு ஆய்வு.ஒரு நாளைக்கு, ஒரு ஆணுக்கு, 2,400 கிலோ கலோரியும், பெண்ணுக்கு, 2,000 கிலோ கலோரியும் உணவு தேவை. காலை சிற்றுண்டி, 400 கலோரி; மதிய உணவு, 700 கலோரி. இரவு உணவு 700 கலோரி மற்றும் மாலை நொறுக்குத்தீனி 200 கலோரி என்ற அளவிலும் இருக்க வேண்டும்.இரவு உணவை, சூரியன் மறையும் முன் சாப்பிடுவது நல்லது என்கின்றனர். குறைந்தபட்சம் துாங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது ஆரோக்கியமானது. சாப்பிட்டவுடன் துாங்கினால் அமில எதுக்கலிப்பு ஏற்படும். உணவியல் நிபுணர் ஆலோசனையுடன், உடல் நிறை குறியீட்டு எண் மற்றும் உடல் வளர் சிதை மாற்ற விகிதத்தை கணக்கிட்டு, ஒரு நாளைய உணவு வேளையை திட்டமிடலாம்.தனிமனிதனுக்கு உள்ள விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை முறை, ஆரோக்கிய தேவைகளைப் பொறுத்து, ஒரு நாளைய உணவு அளவு மாறலாம்.நீரழிவு நோயாளிகள் தினமும் ஆறு வேளை சிறு சிறு கலோரிகளில் உணவை பிரித்து உண்பது நலம். கேஸ் அடுப்பை சிம்மில் வைத்திருப்பது போல எப்போதுமே சிறு பசியுடன் உலாவுவது ஆரோக்கியம் தரும். அதை கடைபிடிப்பது எல்லா வகையிலும் நன்மை தரும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !