இளஸ் மனஸ்! (295)
அன்புள்ள ஆன்டி...என் வயது, 13; அரசு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி. வண்ண பலுான்களில், கூடை கட்டி, அதில் மக்கள் ஏறி பறப்பதை, 'டிவி'யில் பார்த்திருக்கிறேன். பலுானின் அடியில் நெருப்பு பொறி பறக்கும். இது போன்ற பலுான் பயணங்கள் பாதுகாப்பனதா... திடீரென்று இந்த பலுான் வெடித்து விட்டால் அல்லது காற்று போய் விட்டால் என்ன செய்வது... அந்த காட்சிகளை பார்க்கும் போது இது போன்ற எண்ணமே வந்து அலைக்கழிக்கிறது. இது பற்றி சரியான விளக்கம் தாருங்கள்.இப்படிக்கு,எஸ்.கனக துர்கா.அன்பு மகளே...எந்த காட்சியை பாக்கும் போதும் எதிர்மறையாக எண்ணக்கூடாது. அதை வேடிக்கையாக பார்த்து பழக வேண்டும். உலகில் முதன் முதலில், செப், 19, 1783ல், பிலேட்டர் டி ரோசியர் என்பவர், ஒரு சேவல், ஒரு வாத்து, ஒரு ஆட்டுடன், 15 நிமிடம் நேரம் பலுானில் சவாரி மேற்கொண்டார். நவீனமாக இப்போது பயன்படுத்தும் காற்று பலுானை, அமெரிக்காவை சேர்ந்த பால் எட்வர்ட் யோஸ்ட் வடிவமைத்தார்.சூடான காற்று நிறைந்த பலுானில் பறக்கும் விளையாட்டு, 1906ல் அங்கீகரிக்கப்பட்டது. பலுானில் பறப்பதில் சாம்பியன்ஷிப் போட்டி முதன் முதலில் 1973ல் நடத்தப்பட்டது. பலுான் பயணம் இரு வகைப்படும். அவை...சூடான காற்று பலுான்; வாயு பலுான்.பலுான்களில் ஹீலியம் அல்லது ைஹடிரஜன் வாயு நிரப்பப்படுகிறது. ஹீலியம் வாயு நிரப்பிய பலுான் வெடிக்காது; விஷத்தன்மை இருக்காது. காற்றை விட அடர்த்தி குறைந்தது.அமெரிக்கா, நியூமெக்சிகோவில் ஆன்டர்சன் அப்ரூசோ என்ற சர்வேதச பலுான் அருங்காட்சியகம் உள்ளது. பலுானில், 33 மணி நேரம் பறந்த ரிச்சர்ட் பிரான்சன், பெர் லின்ட் ஸ்ட்ரான்ட் ஆகியோர், அட்லாண்டிக் கடலை, 1987ல் கடந்தனர். இவர்கள் பறந்த துாரம் 4667 கி.மீ., அதே நபர்கள் கிழக்காசிய நாடான ஜப்பான், வட அமெரிக்க நாடான கனடா இடைப்பட்ட, 10,782 கி.மீ., துாரத்தை, 47 மணி நேரத்தில் பலுானில் பறந்து கடந்து சாதனை புரிந்தனர்.பலுானை செலுத்துபவரை, பைலட் என்பர். வாயுவை விடுவித்தும், சேர்த்தும் பலுான் பறக்கும் உயரத்தை நிர்வகிப்பர். பலுான் ஒரு நிமிடத்தில், 1,000 அடி வரை உயரும். இரண்டு மணி நேரத்தில், 12 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். மணிக்கு, 16 கி.மீ., வேகம் வரை போகும். பலுானுக்கு உள்ளே காற்றை எரிகருவி என்ற 'பர்னர்' துணையுடன் சூடாக்குவர். பலுானுக்கு வெளியே உள்ள காற்றின் அடர்த்திக்கும், உள்ளே சூடாக்கப்பட்ட வாயுவின் அடர்த்திக்கும் உள்ள வித்தியாசமே, 'பறத்தல்' என்ற செயலுக்கு பயன்படுகிறது.பலுான் பைலட் உரிமம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில், பலுான் பைலட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்கள் உள்ளன. பைலட் பயிற்சி பெற, 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். தெளிவான உச்சரிப்புடன் ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். பலுான், ரப்பர், லேடெக்ஸ், பாலிக்ளோரோபிரின், மெட்டலைஸ்ட் பிளாஸ்டிக், நைலான் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. புறஊதா கதிர் தாக்கத்தை தடுக்க பலுானின் உட்புறம் நியூயோபிரின் பயன்படுத்தப்படுகிறது.க்ளவுட் ஹோப்பர்ஸ் என்ற பலுானில், ஒருவரும், சுற்றுலா பலுானில், 24 நபர்களும் பயணிக்கலாம். மேலும், 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து பலுான்கள் தட்பவெப்பநிலை பற்றிய தகவல்களை சேகரிக்கின்றன.வான்பயண நிர்வாக கூட்டமைப்பு என்ற உலக அளவிலான அமைப்பு, கார் பயணத்தை விட, பலுான் பயணம் மிக மிக பாதுகாப்பானது என அறிவித்துள்ளது.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.