உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (306)

அன்புள்ள அம்மா...என் வயது, 32; கணவருடன் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நாங்கள் காதல் திருமணம் செய்து 11ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு, 10 வயதில் மகன் இருக்கிறான். அவன் வாழ்வில் பிறந்தது முதல் நடப்பு நொடி வரை, 'ஸ்டெப் பை ஸ்டெப்' செயல்பாடுகளை, ஒளிப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவாக்கி பாதுகாப்பாக வைத்துள்ளோம். மகன் பிறந்தநாளை இன்னும் சில மாதங்களில் ஆடம்பரமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளோம். அந்த நிகழ்வில் நாங்கள் இதுவரை பதிவுசெய்துள்ள அனைத்து ஒளிப்படங்களையும் வைத்து, பிரமாண்டமான கண்காட்சி நடந்த ஆசைப்படுகிறோம். எங்கள் ஆசை நியாயமானதுதானே... தெளிவுபடுத்துங்கள்.இப்படிக்கு,எஸ்.மிருதுளா சாரங்கபாணி.அன்பு சகோதரிக்கு...முதலில் நீங்கள் இருவரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் காதலித்த காலம் வேறுவகையானது. அந்த உலகத்திலிருந்து, இன்றைய யதார்த்தத்திற்கு இன்னும் நீங்கள் இறங்கி வரவில்லை. உங்களிடம் மாயை, பதட்டம், பரிபூரணவாதம் மற்றும் அந்தரங்கத்தை காட்சி படுத்தும் சுயதம்பட்ட செயல்பாடு பொங்கி வழிகிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் எடுத்த ஒளிப்படங்களில் உங்கள் மகன்...-● சகிக்க முடியாத வகையிலான முகபாவத்தில் அழுது கொண்டிருப்பான் ● மலஜலம் கழித்த போது அவனை சுத்தம் செய்வீர்● எதன் மீதாவது ஏறி உங்கள் மகன் எக்கு தப்பாய் விழுந்திருப்பான்● குறட்டை விட்டு துாங்கிக்கொண்டிருப்பான்.இது போல் ஏராளமாக இருக்கும். மொத்தத்தில் உங்கள் மகன் பார்க்க விரும்பாத லஜ்ஜையான காட்சிகள் குவிந்து கிடக்க வாய்ப்பு உண்டு.இவற்றில் சில நினைவு காட்சிகள் மட்டுமே தித்திக்கும் அனுபவமாய் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு.நீங்கள் இருவரும் விஞ்ஞானியராக இருந்து, ஆராய்ச்சிக்காக உங்கள் மகன் வாழ்வின் முதல் பத்து வருட காலத்தை முறையாக ஆவணப்படுத்தி இருந்தால் உங்கள் விருப்பத்தை வரவேற்கலாம். ஆனால் நீங்கள் இருவரும் அமெச்சூர் பதிவராக உள்ளீர். மகன் மீது பாசத்தை கொட்ட வேண்டிய தருணங்களில் கூட ஒளிப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு இருந்திருப்பீர் என எண்ணத் தோன்றுகிறது.கண்திருஷ்டி ஒரு மூடநம்பிக்கை என்பதை முழுமையாக நம்புகிறேன். ஆனால், கண் திருஷ்டியை நம்பும் கோடி பேர் இந்த உலகில் உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.நான் சொல்வதை கடைபிடித்து பாருங்கள்... முதலில் உங்கள் மகனிடம் செல்லுங்கள். அவனை, 360 டிகிரி சூழ்ந்து எடுத்த ஒளிப்படம், வீடியோக்கள் என ஒன்று விடாமல் காட்டுங்கள். இப்போதைய குழந்தைகள் இடது கையில் முகநுாலையும், வலது கையில் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தையும் வைத்துக்கொண்டே பிறக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்திருக்கும் ஒளிப்படங்களும், வீடியோக்களும் உங்கள் மகனுக்கு பிடித்து போக வாய்ப்பு உண்டு. ஒருவேளை அவற்றை வைத்து கண்காட்சி நடத்த அவன் பச்சைக்கொடி காட்டுவான். இன்னென்ன ஒளிப்படம், வீடியோக்களை அகற்ற அவன் தணிக்கையில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. எது நடந்தாலும் மனதை தயார் நிலையில் வைத்திருங்கள்.உங்கள் மகனுக்கு, 18 வயது நிரம்பியவுடன் மீண்டும் ஒரு தடவை இது போல் எடுத்துள்ள ஒளிப்படக் காட்சிகளை காட்டி அபிப்ராயம் கேளுங்கள். அப்போது அவன் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. நீங்கள் எடுத்துள்ள ஒளிப்படங்களை இப்போது காட்சி படுத்த வேண்டாம் என்பதே என் முடிவு. - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !