இளஸ் மனஸ்! (307)
அன்புள்ள அம்மா...என் வயது, 25; தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண். மகனுக்கு இரண்டரை வயதாகிறது. சிவந்த முடி; சுருள்கேசம்; கை, கால்கள் குச்சி போல் வளர்ந்து இருக்கும். வயிறு மட்டும் பானை மாதிரி பெருத்திருக்கும். அது மிகுந்த அவலட்சணமாக இருக்கிறது. என் கணவரிடம் இது குறித்து கூறினால், 'கவலையை விடும்மா...' என கேலி பண்ணுவார். பக்கத்து வீட்டு குழந்தைகள் என் மகன் வயிற்றின் மீது சுண்டி சப்தம் எழுப்பி விளையாடுவர். இது எனக்கு சொல்ல முடியாத சங்கடத்தை ஏற்படுத்துகிறது. என்ன செய்து என் மகனின் தொப்பையைக் குறைக்கலாம். நல்ல அறிவுரையும் ஆலோசனையும் தாருங்கள்.இப்படிக்கு,சித்ரதுர்கா ராஜேஷ்.அன்பு சகோதரிக்கு...குழந்தைகளுக்கு வயிறு துருத்திக் கொண்டிருப்பது இயல்பான விஷயம்தான். வயிற்றுத்தசை முழுமையாக வளர்ச்சி அடையாததே இது போன்ற தொப்பைக்கு அடிப்படைக் காரணம்.குழந்தையின் தொப்பையை தொட்டு பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும்; கல் போல் இறுகியதாக இருக்கக் கூடாது.தொப்பையுடன் வலி, காய்ச்சல், எடை கூடுதல், குறைதல் போன்ற உபாதைகள் சேரக்கூடாது. காற்று பிரிதல், மலச்சிக்கல் மற்றும் சவலைநோய், தொப்பையின் அளவைக் கூட்டும்.பெரிய தொப்பை உருவாக அடிப்படைகள் சில உள்ளன. அவை...* அவசர அவசரமாய் நிறைய உணவு உண்ணுதல்* உண்ணும் போது காற்றை விழுங்குதல்* வாயுவை பெருக்கும் உணவு வகைகள்* தற்காலிக திரவ தேக்கம்* விரல் சூப்பும் பழக்கம்* கை, கால்களில் நகம் வெட்டாதிருத்தல் போன்றவை தொப்பை பெரிதாக சில காரணங்கள். வயிற்றில் பூச்சி இருந்தாலும் தொப்பை பெரிதாக காணப்படும்.தொப்பையை குறைக்க சில உபாயங்கள் மேற்கொள்ளலாம். அது பற்றிய விபரம்...* நார்சத்தும், புரதசத்தும் மிகுந்த சரிவிகித சத்துணவை கொடுக்கலாம்* உணவை போதுமான அளவு மென்று விழுங்க கற்றுத்தரலாம்* போதுமான தண்ணீர் குடிக்கக் கொடுக்க வேண்டும்* உடல் தாங்கும்படியுள்ள வெப்ப துணியை வயிற்றில் கட்டலாம்* வயிற்றில் பூச்சி இருந்தால் குழந்தைநல மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரை கொடுக்கவும்* விரல் சூப்பினால் கட்டைவிரலில் வேப்பெண்ணெய் தடவி கட்டுப்படுத்தலாம்* வைட்டமின் - டி சத்து குறைபாடு, பெரிடோனிட்டிஸ் பாதிப்பு இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று செயல்படலாம்* குழந்தைக்கு உணவு கொடுக்கும் நேரத்தை அட்டவணைப்படுத்தவும்* இனிப்பு கலந்த பானம் அடிக்கடி குடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்* வாயு பிரச்னையை போக்க மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து தரலாம்.குழந்தையின் வயதுக்கேற்ற சிறுசிறு உடற்பயிற்சிகள் சொல்லி தரலாம். குழந்தை மணல், சுவர்காரை, பலப்பம், பிளாஸ்டிக் என எவற்றையும் விழுங்காமல் கண்காணிக்கவும். குழந்தை ஒரே இடத்தில் அமராமல் ஓடி ஆட அனுமதிக்கவும். சுயசுத்தத்தை பாவிக்க விளையாட்டு வழியில் சொல்லிக்கொடுக்கவும். இரு வாரங்களுக்கு ஒருமுறை, கை, கால் விரல் நகங்களை பாதுகாப்பாய் வெட்டவும். காலையிலும், இரவிலும் மலஜலம் கழிக்க பழக்கவும். இது போன்ற செயல்களை தொடர்ந்தால் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்கும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.