உள்ளூர் செய்திகள்

கலைவாணி அருள்!

சென்னை, அடையார் தியாசாபிகல் சங்க பள்ளியில், 1965ல், 5ம் வகுப்பு படித்த போது விடுதியில் தங்கியிருந்தேன். வகுப்பு ஆசிரியர் ருக்மணி தேவி அருண்டேல், பிரபல பரத நாட்டிய கலைஞர். கருணையே வடிவானவர். தவறு செய்தால் மென்மையாக கண்டிப்பார். கண்ணியமாக வாழும் முறைகளைக் கற்றுத் தந்தார்.கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, நேர்மையின் சிறப்பை எடுத்துரைப்பார். தீய பழக்கங்களை தவிர்க்கும் வழிமுறைகளை போதிப்பார்.உடன் படிக்கும் மாணவியரை சகோதரியாக மதிக்க கற்றுத் தந்தார். வகுப்பு முடிந்த பின், நீதிபோதனை கதைகளை சுவையாக கூறுவார். இனிமையாக பாடி மகிழ வைப்பார். அதிகாலை குளிர்ந்த நீரில் குளிக்கும் வழக்கத்தை கடைபிடிக்க வைத்து, உடலை ஆரோக்கியமாக பேண வழிகாட்டினார்.அன்று சிறிய தவறு செய்து விட்டேன். அதை கண்டித்தார். பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்ட பின்னும் பேசுவதை தவிர்த்து வந்தார். கெஞ்சியும் மனம் இறங்கவில்லை. அது மிகப்பெரிய தண்டனையாக இருந்தது. ஒரு வாரமாகியும் நிலைமை சீராகவில்லை. மனம் வருந்தி அழுத என்னை, தட்டி கொடுத்து தேற்றி, இயல்பு நிலைக்கு வந்தார்.என் வயது, 70. பெயின்ட் நிறுவன அதிபராக உள்ளேன். கோவில் சிற்பங்கள், தேர்களுக்கு, எளிதில் அழியாத வண்ணப் பூச்சுகளை தயாரித்து வருகிறேன். அன்பு, கருணை, கனிவால் என் இளமை பருவத்தை செம்மையாக்கிய அந்த ஆசிரியையின் பெருங்கருணைக்கு ஈடாக எதுவும் இல்லை. உயர்வுக்கு வழிகாட்டி நடமாடும் கலைவாணியாக திகழ்ந்தவரை போற்றி வாழ்கிறேன்.- பா.ஜெய்சங்கர், மதுரை.தொடர்புக்கு: 77080 44557


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !