உள்ளூர் செய்திகள்

கரம் பற்றி...

நாகர்கோவில், எஸ்.எல்.பி. உயர்நிலைப் பள்ளியில், 1975ல், எஸ்.எஸ்.எல்.சி.,படித்தேன். தமிழாசிரியராக இருந்தார் பிரான்சிஸ். மாணவர்களிடம் பாரபட்சமின்றி பாசமாக பழகுவார். முன்னுதாரணமாக நடந்து கொள்வார்.அன்று பிரம்பு இல்லாத வகுப்பே கிடையாது என்ற நிலையில், அவர் அதை தொட்டதில்லை. கண்ணியமாகவும், நெகிழ்வாகவும் அறிவுரைப்பார். படிப்பில் கவனம் செலுத்தாவிட்டாலோ, சேட்டை செய்தாலோ தவறை உணர்ந்து, வருந்தி மன்னிப்பு கேட்க வைப்பார். நல்ல தந்தையின் செயல் போல, அவரது நடவடிக்கைகள் இருக்கும்.கல்வி ஆண்டு இறுதியில், 'சோஷியல் டே!' என்ற நிகழ்வை வகுப்பில் நடத்தினோம். அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற தமிழாசிரியருக்கு திடீரென புரையேறியதால் தடுமாறினார். என்னை அறியாமல் ஒரு உத்வேகத்தில் வேகமாக சென்றேன். குடும்பத்தில் என் பாட்டி செய்வது போல, அவரது தலையில் தட்டி, குடிக்க தண்ணீர் கொடுத்தேன்.என் கையை பற்றி, 'போதும்... ரொம்ப நன்றிப்பா...' என நெகிழ்ந்தார் ஆசிரியர். இதைக் கண்டதும் நா தழுதழுக்க, 'ஆசிரியர், மாணவர் உறவு இப்படித்தான் இருக்க வேண்டும். உங்களை எல்லாம் பாசத்தால் கட்டிப் போடும் அவரது பண்பை எண்ணி பெருமிதப்படுகிறேன்...' என, என்னை பாராட்டினார் தலைமையாசிரியர். அந்த நிகழ்வு நெகிழ்வால் நிறைந்திருந்தது.என் வயது, 68; சொந்தமாக தேனீர் விற்பனை நிலையம் நடத்தி வருகிறேன். வகுப்பறையில் நெகிழ்வைக் கற்றுத்தந்த தமிழாசிரியரை எண்ணும் போதெல்லாம், ஆனந்த கண்ணீர் பெருக்கெடுப்பதை தடுக்க இயலவில்லை!- எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !