உள்ளூர் செய்திகள்

குறள் போற்று!

சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் பள்ளியில், 1974ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...தமிழாசிரியை கமலம் மொழி உச்சரிப்பை, 'ல, ள, ழகர' வேறுபாட்டுடன் பேசி பழக வலியுறுத்துவார். அதற்கு தக்க பயிற்சிகள் தந்தார்.அந்த ஆண்டு, 108 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி சென்னை, சாரதா பள்ளியில் நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க என் பெயரை பதிவு செய்தார். குறளில், முதல், இறுதி வார்த்தை என எதை சுட்டினாலும், முழுமையாக உடனே சொல்ல வேண்டும். இது தான் போட்டியின் விதியாக இருந்தது.குறள்களை நோட்டில் எழுதி மனப்பாடம் செய்தேன். மூன்றாம் பரிசு கிடைத்தது. குலோப்ஜாமூன் வாங்கி தந்து பாராட்டினார் ஆசிரியை. அந்த சுவை நாவில் இனிக்கிறது.மறுநாள் இறை வணக்க கூட்டத்துக்கு பின், மேடைக்கு அழைத்து பெரும் கரகோஷம் தந்து பெருமைப்படுத்தினர். மிக மகிழ்ச்சியாக இருந்தது. பின், எப்போது திருக்குறள் போட்டி என்றாலும், என் பெயரை பதிவு செய்வார். முயன்று பரிசுகள் வாங்கினேன். பள்ளியில், 'திருக்குறள் சுபா' என்ற மதிப்புயர்வான பெயரும் பெற்றேன்.தற்போது, என் வயது, 60; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளி பருவத்திலே முறையான அங்கீகாரம் கிடைக்க ஊக்குவித்து பயற்சி தந்த அந்த தமிழாசிரியையை வணங்கி வாழ்கிறேன்!- எஸ்.சுபா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !