உள்ளூர் செய்திகள்

மொட்டைக் கடிதம்!

நாகர்கோவில், சேது லட்சுமிபாய் உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 11ம் வகுப்பு படித்தேன். முந்திய ஆண்டு பொதுத்தேர்வில் தோல்வியுற்றோருக்கு சப்ளிமென்ட்ரி தேர்வு அன்று எங்கள் பள்ளியில் நடக்கவிருந்தது. அதனால், மாணவ, மாணவியரை வேறு பகுதியில் அமர வைத்திருந்தார் வகுப்பாசிரியர் போனிபாஸ். மறுநாள், மொட்டையாக காதல் கடிதம் ஒன்று வந்திருப்பதாக வகுப்பாசிரியரிடம் தந்து, புகார் கூறினாள் ஒரு மாணவி. உடன்படித்தவன் நோட்டுப் புத்தகத்தில் அந்த கடித காகிதம் கிழிக்கப்பட்டிருந்தது. எனவே, அவனே எழுதியிருந்ததாக குற்றம் சுமத்தினாள். மாணவன் எவ்வளவோ மன்றாடியும் மறுப்பை ஏற்கவில்லை. பெற்றோரை அழைத்து விசாரிக்கும் அளவு நிலமை தீவிரமானது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவன் சிறப்பாக படிப்பான். மாணவியருடன் சகஜமாக பழகும் அவன் அஞ்சி நடுங்கியபடி, 'என் அப்பாவிற்கு தெரிந்தால் படிப்பு அவ்வளவு தான்...' என புலம்பினான்.நிர்வாகம் விசாரித்த போது, 'மேஜைக்குள் புத்தக பையை வைத்து போய் விட்டேன். சப்ளிமென்ட்ரி தேர்வு எழுத வந்தவர் தான் நோட்டில் பேப்பரை கிழித்திருக்க வேண்டும். என் கையெழுத்தை வேண்டுமானால் கடிதத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்...' என தெளிவு படுத்தி மருகினான். அவனிடம் தவறு இல்லை என நிரூபணமானது. என் வயது, 80; இல்லத்தரசியாக இருக்கிறேன் நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறேன். பள்ளி நிகழ்வுக்கு பின், அந்த மாணவனுடன் நட்பை தொடர்கிறேன். நல்ல சகோதரனாக கண்ணியம் குறையாமல், 65 ஆண்டுகளாக பழகி வருபவன் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.- ராமி செல்லக்குமாரசாமி, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !