நூதன தண்டனை!
மதுரை, சோழவந்தான் அரசு ஆரம்ப பள்ளியை, அந்த காலத்தில் 'சத்திரம்' பள்ளி என்பர். அங்கு, 1962ல், 4ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்தார் கருப்பையா. ஒழுக்கம் தவறினால் கடுமையாக தண்டிப்பார்.அன்று, பள்ளி அருகே வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் இறங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை மீறி, நண்பர்களுடன் இறங்கி குளித்து ஆட்டம் போட்டேன். வகுப்பாசிரியருக்கு தகவல் தெரிய வந்தது. போதாத குறைக்கு, தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தேன்.இதனால், உச்சக்கட்ட கோபத்தில், 'விலங்கு கட்டை' என்ற தண்டனையை தந்தார். அதன்படி, சுமக்கும் அளவு எடையுள்ள மரக்கட்டை ஒன்றை, இரும்பு சங்கிலியில் கட்டினார். அதன் மறுமுனையை, என் காலில் வளையம் மாட்டி அதில் பிணைத்தார். மரக்கட்டையை துாக்கியபடி தான் நடக்க முடியும்.ஒருநாள் முழுதும் அதை அனுபவிக்க வேண்டும். தண்டனை பெற்று வீடு சென்ற என் கோலம் கண்டதும், கோபத்தில் அடி உதை தந்தனர் பெற்றோர். மறுநாள் வகுப்பறைக்கு வந்ததும், தண்டனையை முடித்து வைத்தார் ஆசிரியர். விடுதலைப் பெற்றது போல் உணர்ந்தேன்.தற்போது என் வயது, 72; தனியார் நிறுவன ஏற்றுமதி, இறக்குமதி பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அந்த காலத்தில், பள்ளியில் நடைமுறையில் இருந்த கடுமையான தண்டனை முறைகளை எண்ணும் போதெல்லாம், மனதை அச்சம் சூழ்ந்து விடுகிறது.- கி.வெங்கடகிருஷ்ணன், சென்னை.தொடர்புக்கு: 97909 56566