உள்ளூர் செய்திகள்

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (18)

முன்கதை: வளர்ப்பு மிருகம் மீதான ஆர்வத்தால், காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தந்தை உதவியுடன் தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்து, அன்பை பெற்றது. அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன் பிரிய மனமின்றி அதை கடத்தி பணிய வைக்க முயன்றான். அவனுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் நாயை சுட்டுக்கொல்ல குறி வைத்தான். இனி -துப்பாக்கியை கையில் பிடித்தபடி குறி பார்த்து அழுத்த முயன்றான் காண்டீபன்.எங்கிருந்து அந்த அசுர பலம் வந்ததோ... கட்டியிருந்த இரும்பு செயினை அறுத்து, காண்டீபன் மீது அசுரத்தனமாக பாய்ச்சல் நிகழ்த்தியது செங்கிஸ்கான்.காண்டீபன் கையில் இருந்த துப்பாக்கியை தட்டி விட்டது. அது, திசை மாறி சுட்டதால் நிலை தடுமாறி செங்கிஸ்கானுடன் மல்லாக்க விழுந்தான் காண்டீபன். பின்தலை, 'னங்கார்...' என தரையில் மோதியது. தன் மீது கவிழ்ந்த செங்கிஸ்கானின் கழுத்தை பிடித்தான் காண்டீபன்.''துப்பாக்கிக்கு தப்பித்து விட்டாய். ஆனால், உன் கழுத்தை நெரித்து கொல்லாமல் விட மாட்டேன்...''பற்களை, 'நற... நற...'வென கடித்தபடி, செங்கிஸ்கானின் கழுத்தை பற்றி இறுக்கினான். அவனை உந்தித் தள்ளியது செங்கிஸ்கான்; அதை கட்டிப் புரண்டான் காண்டீபன்.துப்பாக்கி தோட்டா சத்தம் கேட்டு ஓடி வந்தார் காண்டீபனின் மனைவி.''ஐயோ... இங்கு என்ன நடக்கிறது...''கழுத்தை நெரித்த காண்டீபன் கைகளை தட்டி விட்டது செங்கிஸ்கான்.''கீழே கிடக்கும் துப்பாக்கியை எடுத்துக் கொடு... ஒருமுறை குறி தவறியது. இரண்டாவது, தவறாது... நடு நெஞ்சை துளைக்கும்...'' என மனைவியிடம் கட்டளையிட்டான் காண்டீபன்.எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது பாய்ந்தது செங்கிஸ்கான். அதை கடித்து குதறி நொறுக்கியது.'இனி, இந்த துப்பாக்கியால் யாரையும் சுட முடியாது...' என்றது செங்கிஸ்கான்.ஒரு கட்டையை துாக்கியபடி செங்கிஸ்கான் மீது பாய்ந்தான் காண்டீபன். சற்று ஒதுங்கி அவனை வீழ்த்தியது; கீழே விழுந்த காண்டீபன் நடு நெஞ்சில் ஏறி நின்று, குரல்வளையை கவ்வ வாயை திறந்தது செங்கிஸ்கான்.''அவரை கடித்து விடாதே... நீயும், அவரும் ஒரே துறையில், வேலை செய்தவர்கள் தானே...''தலையில் அடித்து கதறி அழுதார் காண்டீபனின் மனைவி.காண்டீபன் கண்களை, நேருக்கு நேர் ஆழமாக உறுத்தது செங்கிஸ்கான்.'குருவே... உன் வெறித்தனமான அன்பு, வன்முறையாக மாறி விட்டது. சண்டையை கை விடுவோம்; நான், உன்னை ஒரு நாளும் கடிக்க மாட்டேன்...'''கடிடா... என் குரல்வளையை கடிச்சு குதறி விடு... உன்னை பிரிந்து வாழ்வதற்கு பதில் இறப்பது மேல்...'''பைத்தியம் போல் பேசாதே... உன் குடும்பத்தை கவனி...'''என்னால், உன்னை மறக்க முடியாது...'''நமக்குள் இருந்த எல்லாத்தையும் முடித்து கொள்வோம். உன் மனைவியுடன் ஊருக்கு திரும்பி வேலைக்கு செல்...'நான் மீண்டும் மகிழ் வீட்டுக்கு செல்கிறேன். மாதத்துக்கு ஒருமுறை தெரு முனையில் நின்று குசலம் விசாரிக்கலாம்...'காண்டீபனின் நெஞ்சில் இருந்து தரைக்கு குதித்தது செங்கிஸ்கான்.காண்டீபனின் தலை காயத்தை அவன் மனைவிக்கு சுட்டிக் காட்டி, 'மருந்து போடு...' என்றது.காண்டீபனின் மனதிற்குள் குதியாட்டம் போட்ட மிருகத்தனம் ஓடி ஒளிந்தது. செங்கிஸ்கான் உடலை தடவிக் கொடுத்தான்.''உனக்கு காயம் பட்டிருக்கா... உன்னை மிகவும் கொடுமை படுத்திட்டேன்...'''அதெல்லாம் இல்லை. நமக்குள் நடந்தது பாச சண்டை. நீரடிச்சு நீர் விலகுமா... கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா...'''நீ கொலை பட்டினி கிடப்பதை கண்டு தாங்கிக் கொள்ள முடியவில்லை...'''நாம் ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொள்வோம். மகிழ் வீட்டுக்கு செல்ல அனுமதித்தால், இப்போதே என் உண்ணாவிரத்தை முடித்து சாப்பிடுறேன்...'''சாப்பிடு... நாளைக்கு காலையில், உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன்...'''என்னை விட வேண்டாம்; நானே செல்கிறேன்...'''மூணாறுக்கும், கோயம்புத்துாருக்கும் இடையே துாரம், 160 கி.மீ., கடக்க இயலுமா...'''நான் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் ஓடுவேன். மூன்றரை மணி நேரத்தில், மகிழ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடுவேன்...'''சரி... பாதுகாப்பாய் பயணி...'''உன் கையால் ஊட்டு; சாப்பிடுறேன்...'செங்கிஸ்கானை கட்டி அழுதார் காண்டீபனின் மனைவி.''எவ்வளவு அறிவுமிக்க உன்னை, தத்து எடுத்து வளர்க்க, எங்களுக்கு தான் கொடுப்பினை இல்லை...''மாமிசத் துண்டை எடுத்து ஊட்டினான் காண்டீபன். அழகாய் தின்றது செங்கிஸ்கான்.கழுத்தில் இருந்த அறுந்த சங்கிலியை கழற்றி வீசினான் காண்டீபன்.'நான் புறப்படுகிறேன். நீங்களும், ஊருக்கு செல்லுங்கள்; நாளையில் இருந்து, வேலைக்கு சென்று விடு...'''மகிழ் குடும்பம், காவல்துறையில் புகார் கொடுக்காமல் இருக்கணும்...'''புகார் கொடுத்திருந்தால் கூட வாபஸ் வாங்கிடலாம்...'உடலை ஒரு சிலுப்பு சிலுப்பியது. காட்டுப் பகுதியில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது செங்கிஸ்கான்.- தொடரும்...- ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !