உள்ளூர் செய்திகள்

பள்ளியில் கிடைத்த பயிற்சி!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, செவல்குளம் ஆர்.எஸ்., துவக்கப்பள்ளியில், 1969ல், 5ம் வகுப்பு படித்தேன். அப்போது தலைமையாசிரியராக இருந்தவர் ஜோசப். கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவிற்கு ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். பள்ளியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை, 3:30 மணிக்கு, 'மாதிரி சட்டமன்ற கூட்டம்' நடைபெறும். கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர் ஜோசப் கண்டிப்பு காட்டுவார். இந்த கூட்டத்தில், மாணவர்கள் தங்கள் வகுப்பறையின் நிலை குறித்த புகார்களை கூறலாம். வகுப்பறையில் குப்பை இருந்தது என்றும், பள்ளியின் முதல் மணி தாமதாக ஒலித்தது என்றும், மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டுவர். இதற்கு பொறுப்பானோர் அழைக்கப்பட்டு, அவர்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும். இதன் மூலம் குறைகளை தைரியமாக வெளிப்படுத்துவதற்கு, பள்ளியிலேயே எங்களுக்கு பயிற்சி கிடைத்தது. அத்துடன் ஒழுங்கு, நேரம் தவறாமை, கடமை உணர்வு உள்ளிட்ட பல விஷயங்களையும் எங்களுக்கு கற்றுத்தந்தது. தற்போது எனக்கு வயது, 67. இப்போதும், மக்களின் பொது பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். என் போன்றோரை உருவாக்கிய, மறைந்த தலைமை ஆசிரியர் ஜோசப்பை நினைவுகூர்வதில் பெருமிதம் அடைகிறேன். - ஏ.எம்.மாரியப்பன், சங்கரன்கோவில். தொடர்புக்கு: 94423 30750


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !