சூழல் கல்வி!
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை, ரயில்வே உயர்நிலைப் பள்ளியில், 1991ல், 7ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியராக இருந்த சவுந்தர பாண்டியன், 'கடல் மல்லை' என்ற தலைப்பில், மாமல்லபுரம் பற்றி பாடம் நடத்தினார். அதை அறிமுகம் செய்யும் வகையில், கடற்கரை குறித்த உரையாடலை துவங்கினார். மிகவும் ஆர்வமாக பங்கேற்றோம்.சிலர் ஈடுபாடு காட்டாததால் சுவாரசியம் குறைந்தது. அவர்களில் யாரும் ஒருமுறை கூட, கடலை பார்த்ததில்லை என்பதை விசாரித்து அறிந்த ஆசிரியர் உடனே, வேறு பாடத்துக்கு மாறி விட்டார். வகுப்பு முடிந்ததும், தலைமையாசிரியரிடம் கலந்தாலோசித்தார். வார இறுதியில், ஒருநாள் சுற்றுலாவாக மாமல்லபுரம் செல்ல ஏற்பாடு செய்தார்.இதற்காக, கிராமங்களில் இருந்து முன்னதாக வந்தோர் தங்க இடமும், உண்ண உணவும் அளித்தார். ஏழை மாணவர்களின் பயணச் செலவையும் ஏற்றார். பொறுப்பாக அழைத்து சென்று கடற்கரை மற்றும் சிற்பங்களை கண்டு அனுபவிக்க செய்தார். அந்த பாடத்தை வகுப்பில் கற்பிக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் அனுபவத்தால் படித்தோம்.என் வயது, 45; அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். இந்த உயர்வுக்கு வித்திட்டது, அந்த ஆசிரியர் சுற்றுலா அழைத்து சென்ற தினம் என்பதில் சந்தேகமில்லை. வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியவரின் பாதம் பணிந்து நன்றியை சமர்ப்பிக்கிறேன்!- எல்.எஸ்.விஜயலட்சுமி, சென்னை.தொடர்புக்கு: 99401 35839