சுவாசிக்கும் இயந்திர மனிதன்!
வெப்பத்தால், மனிதனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய உதவும் வகையில், 'எண்டி' என்ற பெயரில் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் உட்புறம் குளிமையாக இருக்கும்; சருமத் துளைகள் வழியாக சுவாசிக்கவும், வியர்வை வெளியேறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. உடலில் சூடு அதிகமாகும் போது, நடக்கும் மாற்றங்களை அறிய உதவுகிறது. வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உகந்த ஆடைகளை வடிவமைக்க துணைபுரிகிறது.முதன் முதலாக, ரோபோ என்ற இயந்திர மனிதன் வடிவத்தை, கற்பனை சித்திரமாக வரைந்தார், உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியோனார்டோ டா வின்சி. அமெரிக்க பொறியாளர்கள் ஜார்ஜ்டுவல், ஜோ எங்கல் பட்ஜெட் இணைந்து, 1954ல் கைகள் இயங்கும் வகையில், முதல் ரோபோவை உருவாக்கினர். அபாயகரமான பணிகளில் உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. இது, அமெரிக்கா, ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டது.புகழ்பெற்ற அமெரிக்க நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் வடிவில் ஒரு ரோபோ, 'மார்க்1' என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. ஆசிய நாடான ஹாங்காங்கை சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனர் ரிக்கிமா இதை உருவாக்கினார். பெண்களின் உணர்ச்சிகளை இது முகத்தில் காட்டியது.மண்ணின் தன்மையை இனம் கண்டு வேலை செய்யும் விதத்தில், 'அட்லஸ்' என்ற ரோபோவை வடிவமைத்தது, கூகுள் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம். அமெரிக்க ராணுவத்திற்கு உதவியாக இது இருந்தது. மணிக்கு, 6 கி.மீ., துாரம் நடக்கும் விதத்தில், 'அசிமோ' என்ற ரோபோவை, கிழக்காசிய நாடான ஜப்பான், ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உயரம், 1.28 மீட்டர்; 56 கிலோ எடை உடையது. தேவை அறிந்து உணவு பரிமாறும். ஐரோப்பிய நாடான பிரான்ஸ், ஐரோப்பிய கமிஷனுடன் இணைந்து, 8 வயது குழந்தை வடிவில், 'ரோமியோ' என்ற பெயரில் ரோபோவை உருவாக்கியது. இது மனிதர்களை கட்டிப் பிடிக்கும். குறைகளை பொறுமையாக கேட்கும். சில ஆரோக்கிய குறைபாடுகள் தீர யோசனை சொல்லும். இது பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.அமெரிக்கா, மேக்ஸ் பிளாங்க் இண்டலிஜெண்ட்ஸ் சிஸ்டம் நிறுவனம், 'ஆதினா' என்ற பெயரில், ஒரு ரோபோவை, 2014ல் உருவாக்கியது. இது மனிதர் போல வேலைகள் செய்யும். உடை அணிந்து விமானத்தில் பயணித்தது. அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து, ஐரோப்பிய நாடான ஜெர்மனி பிராங்பார்ட் நகருக்கு, டிச., 17, 2014 அன்று பயணம் செய்து அசத்தியது.குழந்தை போன்ற தோற்றத்தில், 'கிரோபேமினி' என்ற பெயரில் ரோபோவை தயாரித்தது, ஜப்பான், டொயோட்டா நிறுவனம். இதை வாங்கி குழந்தை இல்லாத ஏக்கத்தை தணித்தனர் பெண்கள்.சிட்டி யூனியன் வங்கிக்காக, 'சி.யூ.பி.லட்சுமி' என்ற ரோபோ, 2016ல் தயாரிக்கப்பட்டது. வங்கி நடைமுறைகளை, வாடிக்கையாளருக்கு சொல்லித் தரும்படி இது உருவாக்கப்பட்டது. சீனா, செங்கை மாகாணத்தில் ரோபோக்களால் இயங்கும் வங்கி, ஏப்ரல் 2018ல் துவங்கப்பட்டுள்ளது.- கோவீ.ராஜேந்திரன்