உள்ளூர் செய்திகள்

வாசிப்பின் வலிமை!

செங்கல்பட்டு, ஸ்ரீராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...பிரபல எழுத்தாளர் டேனியல் டெபோ எழுதிய, ராபின்சன் குரூசோ என்ற சிறுவருக்கான புத்தகத்தை பள்ளி நுாலகத்தில் எடுத்து வாசித்தேன். அந்த கதை வெகுவாக கவர்ந்ததால் திரும்ப திரும்ப படித்தேன்.அன்று தமிழாசிரியர் திருமலைச்சாமி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பை கவனிக்காமல், புத்தகம் வாசித்து கொண்டிருந்த என்னைக் கண்டு அருகில் வந்துள்ளார். சூழல் பற்றிய கவலை இன்றி புத்தகத்தில் மூழ்கியிருந்த என்னை நெருங்கி, 'என்ன படிக்கிறாய்...' என்றபடி வாங்கி பார்த்தார். கண்டிப்பாக அடி விழும் என எண்ணி, நடுங்கியபடி எழுந்து நின்றேன்.எதிர்பாராத விதமாக புன்னகைத்தபடி, 'இது மாதிரி புத்தகங்கள் வாசிப்பு நல்லது தான். ஆனால், ஒரே நேரத்தில் ரெண்டு தவறை செய்கிறாய். ஒண்ணு பாடத்தை கவனிக்காதது. இன்னொன்னு வகுப்பு நேரத்தில் கதை படிக்கிறது. ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்து. அப்ப தான் முன்னேற முடியும்...' என அறிவுரைத்தார்.அது மனதில் ஆழப்பதிந்து உற்சாகம் தந்தது. பாடங்களை கவனித்து முறையாக படிக்க துவங்கினேன். ஓய்வு நேரத்தில், கதை புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.தற்போது என் வயது, 61; கல்பாக்கம் அணுசக்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். இப்போதும் தவறாது கதைகள் வாசிக்கிறேன். ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளேன். பள்ளியில் வகுப்பு நேரத்தில் பாடத்தை கவனிக்க தவறிய போது, அன்பாக அறிவுரைத்து முன்னேற வழிகாட்டிய அந்த தமிழாசிரியரை போற்றி வாழ்கிறேன்.- ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.தொடர்புக்கு: 94435 20904


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !