உள்ளூர் செய்திகள்

களங்கம்!

கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்தேன். அன்று மாதாந்திர தேர்வு நடக்க இருந்தது. சக மாணவர்களில் ஒருவன், காப்பி அடிக்க, 'பிட்' எழுதி வைத்திருந்தான். அதை திருடி பயன்படுத்த திட்டமிட்டேன்.அதன்படி, வகுப்பு இடைவேளையில் எடுத்தேன். இதை பார்த்து விட்ட மற்றொருவன், சம்பந்தப்பட்டவனிடம் போட்டுக் கொடுத்து விட்டான். ஆத்திரம் அடைந்தவன் சண்டை போட்டான். நானும் எதிர்த்து பேசினேன்.ஒரு கட்டத்தில் சட்டைக் காலரை பிடித்து அடித்துக் கொண்டோம். இதை கவனித்த தமிழாசிரியர் ஷேக் முகமது கண்டித்து சண்டைக்கான காரணத்தை கேட்டார். இருவரும் பதில் கூறாததால், கோபம் அடைந்தார். மெல்லவும், விழுங்கவும் முடியாமல் தவித்தோம்.விசாரணையில் நடந்த விபரத்தை அறிந்து, 'தேர்வுக்கு படிக்காமல் வந்தது முதல் தவறு; அடுத்தது, 'பிட்' எழுதியது மிகப்பெரிய தவறு. அதை திருடியது பெரும் தவறு...' என விளக்கி, பிரம்பால் விளாசி தண்டித்தார். அது, அவமானம் தந்தது. வெறியுடன் படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, களங்கத்தை போக்க முயன்றேன்.என் வயது, 45; பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தை நினைத்தாலே மனவருத்தம் ஏற்படுகிறது. கெட்ட செயல்களால் ஏற்படும் களங்கத்தை துடைப்பது கடினம் என்ற பாடத்தை அந்த நிகழ்வில் கற்றுக்கொண்டேன்.- மகேஷ் அப்பாசுவாமி, நாகர்கோவில்.தொடர்புக்கு: 94870 56476


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !