கனிந்த மனம்!
சென்னை, தண்டையார்பேட்டை, சேணியம்மன் கோவில் தெரு, அருளப்பர் நர்சரி பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றினேன். என்னிடம் பயின்றவர்கள் எங்கு பார்த்தாலும் அன்புடன் கனிவை காட்டுவர். அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க சிரமப்படுவேன்.கடந்த, மே 1ல் என் வீட்டிற்கு, திடீரென, 15 பேர் வந்து, 'மிஸ்... எங்களை தெரிகிறதா...' என்று கேட்டனர். வயது முதிர்வால் சற்று குழம்பி நின்ற போது, 'இந்த பார்சலை பிரித்து பாருங்கள்...' என்று நீட்டினர். பிரித்த போது, மெய் மறந்து கண்கள் கலங்கி விட்டன.அதில், 2016ல் உழைப்பாளர் தினத்தன்று, மாணவியருடன் எடுத்த புகைப்படம் இருந்தது.வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போது, 'உங்களிடம் அடிப்படை கல்வி பெற்றோம். இப்போது கல்லுாரி படிப்பை முடிக்க உள்ளோம்...' என குதுாகலித்தனர். அந்த மலர்கள் காட்டிய அன்பு கண்டு, மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டேன்.என் வயது, 75; பணி ஓய்வு பெற்றுள்ளேன். என் பாதத்தில் விழுந்து ஆசி பெற்ற மொட்டுக்கள் மலர்ந்து, மணம் வீசி ஒளிர இறைவனை பிரார்த்திக்கிறேன்.- டி.யசோதா தேவதாஸ், சென்னை.