எய்தவனை குத்திய அம்பு!
என் வயது, 40; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த சொத்தவிளை அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்தேன்.ஒரு நாள், தமிழ் ஆசிரியர், பொது அறிவு கேள்விகள் கேட்டார். அதில், 'தொலை துார கல்வி என்றால் என்ன...' என்பது ஒரு கேள்வி.என் அருகில் இருந்த மாணவனை, எங்களுக்கு பிடிக்காது. அவனை எப்படியாவது, ஆசிரியரிடம் மாட்டிவிட்டு, அடி வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்தில், 'பல கிலோ மீட்டர் துாரத்தில் நடக்கும் கல்வி முறைக்கு தான் தொலைதுார கல்வி...' என, பதில் சொல்லுமாறு துாண்டிவிட்டோம்.ஆசிரியர் பாராட்டுவார் என்று எண்ணிய அவன், நாங்கள் கூறியதை, அப்படியே பதிலாக கூறினான். ஆசிரியர், விழுந்து விழுந்து சிரித்தபடி, 'எப்படிடா... இப்படியெல்லாம் யோசிக்கிற...' என்றார். அதற்கு அவன், 'சார்... இவங்க தான், இப்படி சொல்ல சொன்னாங்க...' என்று எங்களை சுட்டி காட்டிவிட்டான்.ஆத்திரமடைந்த ஆசிரியர், 'இந்த வயசுல, உங்களுக்கு நக்கல், நையாண்டியா...' என கேட்டு, எங்களை நைய புடைத்து விட்டார். எய்தவனையே, அம்பு திரும்பி வந்து குத்தியது. இச்சம்பவத்துக்குப்பின், பிறருக்கு தீங்கு நினைத்தால், அது நம்மை தேடிவரும் என்பதை புரிந்து கொண்டோம். - மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.