உள்ளூர் செய்திகள்

குற்றம் புரிந்தவன் மனம்!

அத்தோபுரி அரசன், நீதி, நேர்மை தவறாமல் நாட்டை ஆட்சிசெய்து வந்தான். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவனது ஒரே மகன் மாறன். மதியுக மந்திரியின் மகன் வெற்றிச்செல்வன். இருவரும் ஆத்ம நண்பர்கள்; ஒருவரை ஒருவர் பிரிய மாட்டார்கள். இளவரசன் மாறன் கொஞ்சம் சோம்பேறி; ஆனால், வெற்றிச்செல்வனோ அதிபுத்திசாலி. இருவருக்கும், 10 வயது நிரம்பியது. அவர்களை அரசன், பொதிகை மலைச்சாரலில் உள்ள, குருகுல ஆஸ்ரமரத்திற்கு அழைத்துச் சென்று, எல்லா கலைகளையும் பயிற்சியளிக்க வேண்டினான்.ஆஸ்ரம கொள்கைப்படி அவர்களின் படிப்பு முடிய, 10 ஆண்டுகள் ஆகும். அதுவரை, அவர்கள் அரண்மனைக்குச் செல்ல முடியாது. மற்ற மாணவர்களைப் போலவே நடத்தப்படுவர். எவ்விதச் சலுகையும் கிடையாது.இருவருக்கும் வேதம், சாஸ்திரம், போர்க் கலையில் வாள் சண்டை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என்று, பயிற்சி அளித்தார். எல்லாவற்றிலும் வெற்றிச்செல்வனுக்கு நல்ல பெயர். எனவே, குருகுலத்தில் அனைவரும், வெற்றிச்செல்வனை புகழ ஆரம்பித்தனர். இதனால், மாறன் மனதில் பொறாமை தீ பற்றி எரிய ஆரம்பித்தது.இப்படியாக, 10 ஆண்டுகள் உருண்டோடின. அரண்மனைக்குத் திரும்ப வேண்டியகாலம் நெருங்கியது. நன்கு பயின்ற வெற்றிச்செல்வனை எல்லாரும் புகழ்ந்தனர். 'தன்னைப் பாராட்டவில்லையே' என்ற ஏக்கம் மாறன் மனதில் ஏற்பட்டது. ஆகவே, வெற்றிச்செல்வனை பழி வாங்க மனம் துடித்தது. இதையறியாத வெற்றிச்செல்வன் எப்போதும் போல சகஜமாகப் பழகி வந்தான்; மாறனின் மனமாற்றத்தை அவன் உணரவில்லை.ஒரு நாள் -மாறனும், வெற்றிச்செல்வனும் படகு சவாரி செய்தனர். வெற்றிச்செல்வனுக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. இது தான் தக்க சமயம் என்று, படகை ஒரு சுழலில் சிக்க வைத்து மூழ்கும்படி செய்தான் மாறன். படகு கவிழ்ந்து இருவரும் நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மாறன் நீந்தி கரை சேர்ந்தான். வெற்றிச் செல்வன் குருவை நினைத்து, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். நிஷ்டையில் இருந்த குருமகாராஜ் அதிர்ச்சியடைந்து, தன் வலிமையால் பிழைத்துக் கொள்ள அருள்புரிந்தார்.என்ன ஆச்சரியம்! நதி அடித்து சென்ற போது வெற்றிச்செல்வனுக்கு அருகில் ஒரு பெரிய வாழை மரம் மிதந்து வந்தது. அதைத் தாவிப் பிடித்துக் கரை ஏறினான். அவனுக்கு மாறன் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகவே, நதியில் விழுந்த இளவரசன் மாறனுக்கு என்னவாயிற்றோ என புலம்பியபடி ஆஸ்மரத்தை நோக்கி விரைந்தான்.இதற்கு முன், நீந்தி வெளியேறிய மாறன், 'அவசரத்தில் இப்படி செய்து விட்டோமோ' என மனசாட்சிப்படி அழுதான்.''ஆண்டவனே... வெற்றிச்செல்வனைக் காப்பாற்று; என் குற்றத்தை மன்னியும்...'' என கதறியபடியே ஆஸ்மரத்தை அடைந்தான். அவன் கதறி அழுவதைக் கண்ட குரு, ''என்ன மாறா... ஏன் இப்படி புலம்புகிறாய்...'' என்று கேட்டார்.''குருதேவா... நான் மகாபாவி... ஆத்திரத்தாலும், பொறாமையாலும் என் ஆத்ம நண்பனை இழந்து விட்டேன். அவன் மரணத்திற்கு நான் தான் காரணம். என்னையும் நதியில் தள்ளிக் கொன்று விடுங்கள்; அவனின்றி நான் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்...'' என்று கூறி தரையில் புரண்டு அழுதான்.''மாறா... உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்; வெற்றிச்செல்வனுக்கு ஒன்றும் ஆகாது; விரைவில் வந்து விடுவான் அவன்; உள்ளே சென்று ஓய்வெடுத்துக் கொள்...'' என்று அனுப்பி விட்டார்.அதே சமயம், வெற்றிச்செல்வன் கதறியபடி, குருநாதர் காலில் விழுந்தான். ''குருதேவா... நான் இளவரசன் மாறனை இழந்து விட்டேன்; படகில் விபத்து ஏற்பட்டு, நதியில் இருவரும் மூழ்கி விட்டோம். நான் தப்பித்துக் கொண்டேன். இளவரசனை காப்பாற்றாத துரோகி நான்; எனக்கு மரண தண்டனை நிச்சயம்; எப்படி அரசரைச் சந்திப்பேன்...'' என கதறினான்.வெற்றிச்செல்வன் குரலைக் கேட்டதும், அரைத் துாக்கத்திலிருந்த மாறன் எழுந்து வந்து, ''வெற்றிச்செல்வா... என் ஆருயிர் நண்பனே...'' என ஆரத்ததழுவி அறியாமல் செய்த குற்றத்தைக் கூறி, மன்னிக்க வேண்டினான்.வெற்றிச்செல்வனும், ''இளவரசே... தாங்கள் நல்ல மனம் படைத்தவர். விதி நம்மை சதி செய்து விட்டது; குருவின் அருளால் பிழைத்துக் கொண்டோம்; அவர் தான், நம்மைக் காப்பாற்றினார்; அவருக்கு நன்றி சொல்லி வணங்குவோம்...'' என்றான்.இருவரையும் கட்டி அணைத்து, ''இளவரசன் மாறன் செய்த குற்றத்தை உணர்ந்து விட்டான். குற்றம் புரிந்தவன் மனம் பட்டபாடு இருக்கிறதே; அதுதான் அவனுக்குத் தண்டனை; உங்கள் இருவரின் நட்பும் மேலானது; உங்கள் குருகுல வாசம் முடிந்தது; நாளை காலை அரண்மனைக்குச் செல்வோம்; புறப்படுவதற்கு தயராகுங்கள்...'' என்றார் குரு.மறுநாள் - எல்லாரும் அத்தோபுரியை அடைந்தனர். 10 ஆண்டுகள் கடந்து, 20 வயது நிறைந்த போர் வீரர்களாக இருவரும் வருவதை அறிந்த அரசன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தான்; மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.'சுவாமி... தங்கள் அருளால் இருவரும் நன்கு கல்வி பயின்று வந்துள்ளனர். எனவே, ஒரு நல்ல நாள் பார்த்து மாறனுக்கு முடிசூட்டி, வெற்றிச்செல்வனை மந்திரியாக்கி விட்டு, நாங்கள், தங்ளோடு ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்ய விரும்புகிறோம். தாங்கள் தான் முடிசூட்டும் விழாவை நடத்தித் தர வேண்டும்...' என அரசனும், மந்திரியும் கேட்டுக் கொண்டனர்.இதைக் கேட்ட மாறன், ''தந்தையே... என்னை விட, வெற்றிச்செல்வனே எல்லாவற்றிலும் மேன்மையானவன். ஆகவே, அவன் தான் அரச பதவிக்கு உகந்தவன்; அவனுக்கு முடி சூட்டுங்கள்; நான் எல்லா விதத்திலும், அவனுக்கு துணை புரிவேன்...'' என்றான்.அரசருக்கு மாறனின் திடீர் மனமாற்றம் அதிர்ச்சியளித்தது.''அரசே... மாறன் சொல்வது முற்றிலும் சரியே, குருகுல வாசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தான் அதற்குக் காரணம். ஆகவே, உன் ராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து, இருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு அரசனாக்கி விடு...'' என ஆசி கூறினார் குரு. அதன்படி இருவருக்கும் முடிசூட்டப்பட்டது; பிரிக்கப்பட்ட அத்தோபுரி நாடு இருவரின் ஆட்சியில் மேலும் சிறப்புற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !