வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது 85; பாரத ஸ்டேட் வங்கி மதுரை கிளையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழ் வரவுக்காக வழிமேல் விழி வைத்து ஆவலுடன் காத்திருப்பேன். இதன் ஒவ்வொரு பக்கமும் சிந்தனையை துாண்டும் போதி மரமாக விளங்குகிறது.என் பேரன்களுக்கு மொழி ஆர்வத்தை ஏற்படுத்திய சிறுவர்மலர், தமிழ் படிக்க கற்று கொடுத்துள்ளது. ஆசிரியருக்கும், மாணவருக்கும் பாலமாக விளங்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள், காவியமாக திகழ்கின்றன. சிறுகதைகள் நீதியை மையமாக கொண்டுள்ளன. சுவையுள்ள சத்தான உணவை, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' தவறாமல் அளிக்கிறது. படிப்போரை பள்ளி மாணவ பருவத்திற்கு அழைத்து செல்கிறது, சித்திரக்கதை. முதுமையிலும் பலவீனங்களை மறந்து சிரிக்க வைக்கிறது, 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள்.ஓவியம் வரையும் ஆர்வத்தை துாண்டுகிறது, 'உங்கள் பக்கம்' பகுதி. சிறுவர், சிறுமியர் வரைந்துள்ளதை கவனித்து, அதுபோல் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்கிறேன். நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது. சிறுவர்மலர் இதழில் அரிய விஞ்ஞான தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. குட்டி குட்டி மலர்களில் வரும் குழந்தை முகங்கள் அழகோ அழகு. நேர்மை, நாணயம் என நற்குணங்களை கடைபிடிக்க வழி காட்டும் சிறுவர்மலர் இதழ், ஆலமரமாக விரிந்து, படர்ந்து வளர வாழ்த்துகள்.- சூடாமணி வாசுதேவன், சென்னை.