என்ன இது...
விருமலைக் காட்டில், நிறைய விலங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் - காட்டில் வசித்த மான் ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக, பெரும்பள்ளம் அணைக்கு வந்தது. எப்பவுமே தண்ணீர் வற்றாது என்பதால், பக்கத்துக் காடுகளில் இருந்தும், பல விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்; அங்கு, ஒரு வியப்பான காட்சியை காட்டு விலங்குகள் பார்த்தன.தண்ணீர் குடித்தப் பின், காட்டுக்கு திரும்பிய மான், தான் கண்ட காட்சி பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. ஆமாங்க... அணையின் கரையோரமாக, அப்பகுதியில் வசிப்பவர்கள், தங்கள், ஆடு, பசு, எருமை, காளைகள் என, கால்நடைகளை, அணை நீரில் குளிப்பாட்டி கொண்டிருந்தனர். முதலில், ஏன் இப்படியெல்லாம் செய்கின்றனர் என்று புரியாத மான், அவர்களை பின் தொடர ஆரம்பித்தது. அணையில் குளிப்பாட்டிய கால்நடைகளை கட்டுத்தறியில் கட்டி, கொம்புகளுக்கு சாயம் பூசி அலங்கரித்தனர்.நுனிக்கொம்பின் உச்சியில், சலங்கை கட்டி விட்டனர். மூக்கணாங்கயிறு, தலக்கயிறு, கொம்புக் கயிறு என, எல்லாம் புதிதாக காளைகளுக்கு கட்டி, பலவகைப் பூக்களால் கட்டிய மாலைகளை, ஒவ்வொரு கால்நடையின் கழுத்திலும் கட்டி விட்டனர். அதிசயித்து, பார்த்தவற்றை விலங்குகளிடம் சொல்லவே, அவற்றுக்கு ஆச்சரியம் தொற்றிக் கொண்டது. இதுபற்றி, மேலும் தெரிந்துக் கொள்ள, கரடியை விலங்குகள் அணுகின. மானும், தான் கண்டக் காட்சிகளை எல்லாம் கரடியிடம் சொன்னது. ''இதுக்குப் பெயர் தான் பொங்கல் பண்டிகை; ஆண்டு முழுவதும் மக்களுக்காக, உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் கொண்டாடப்படுகிறது. மஞ்சுவிரட்டு, காணும் பொங்கல் என்று கொண்டாடி மகிழ்வர்...'' என்றது கரடி. அதை கேட்டு ஆச்சரியம் அடைந்தன காட்டு விலங்குகள். ''நமக்கு மட்டும் ஏன் இப்படி செய்வதில்லை...'' என்றது குட்டி மான்.''நாம் சுதந்திரமாக இங்கு வாழ்கிறோம்; ஆனால், அவை மக்களுக்காக உழைக்கின்றன. அதனால், அவற்றுக்கு நன்றி செலுத்துகின்றனர்... மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தான், இப்படி எல்லாம் நடக்கும்...'' என்றது கரடி.'நாமும் இனி எல்லாருக்கும் உதவியாக இருப்போம்' என முடிவெடுத்தன காட்டு விலங்குகள்.