உள்ளூர் செய்திகள்

முட்டாள் யார்?

கானகத்தில், புலியும், கழுதையும் நட்பாய் இருந்தன. ஒரு நாள், 'இந்த நீல நிற புற்கள் தான் எவ்வளவு அழகு...' என்று ஆச்சரியத்துடன் கூறியது கழுதை.'நண்பா... புல்லின் நிறம் நீலமல்ல; பச்சை...' என்றது புலி.அதை ஏற்க மறுத்து, 'புல்லின் நிறம் கூட தெரியாதா மக்கு நீ...' என்று கிண்டலடித்தது கழுதை.'சிங்கராஜாவிடம் போய், யார் மக்கு என கேட்கலாம், முட்டாள் கழுதையே...' என்று அழைத்தது புலி.சிங்கத்தின் முன் அவை நின்றன.'மகாராஜா... புல்லின் நிறம், நீலம் என்று புலிக்கு புரியவேயில்லை; அசடாகவே உள்ளது; இந்த முட்டாளை, ஓர் ஆண்டு சிறையில் அடையுங்கள்...' என்றது கழுதை.அது கூறியபடி தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளித்தது சிங்கம்.மகிழ்ச்சியை தாங்க முடியாமல், கொடூரமாய் பாடியவாறு வெளியேறியது கழுதை.நடந்ததை நம்ப முடியாமல் மிகவும் பரிதாபத்துடன், 'மகாராஜா... புல்லின் நிறம் என்ன...' என்றது புலி.'பச்சை...''அதை தானே, நானும் சொன்னேன்...''சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய்...''பின் ஏன் எனக்கு தண்டனை தந்தீர்... நான் செய்த தவறு என்ன...''அருமைப்புலியே... உன் வீரம் என்ன... அறிவு கூர்மை என்ன... கழுதை போன்ற பொதி சுமக்கும் விலங்குடன் நட்பு பூணலாமா நீ... அதனுடன் சண்டை போட்டு, என் முடிவை தெரிந்து கொள்ள வந்திருக்கிறாய்... சிந்திக்கும் திறனற்றவரோடு பழகி, முட்டாளாகி இருக்கிறாய். அதற்காகவே இந்த தண்டனை...' என்றது சிங்கம்.குட்டீஸ்! தகுதியறிந்து நட்பு பாராட்ட வேண்டும். நல்ல தகுதியுள்ளவர்களிடம் தான் அறிவைப் பெற முடியும்.மல்லிகா குரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !