உள்ளூர் செய்திகள்

சின்ன வயசு.. பெரிய மனசு..

சென்னை மாம்பலம் பாலகிருஷ்ணா தெருவில், சூடு தாங்காமல் நடந்தும், வாகனங்களிலும் செல்லக்கூடியவர்கள், ஒரு வீட்டின் வாசலில் நின்று நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு செல்கின்றனர்...வீட்டு வேலை செய்பவர்கள், கூரியர் பையன்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கைவண்டி இழுப்பவர்கள், தெரு கூட்டுபவர்கள் என்று பலதரப்பினரும் பழக்கப்பட்டது போல அந்த வீட்டின் வாசலில் வழங்கப்படும் நீர் மோரை வாங்கி சாப்பிட்டு, தாகம் தீர்ந்து திருப்தியுடன் செல்கின்றனர். இப்படியே அடுத்தடுத்து கூட்டம் வருகிறது. தாகம் தீர்த்துக் கொண்டு செல்கிறது.யார் இந்த அளவு இத்தனை மக்களுக்கு தாகம் தீர்ப்பது என்று கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்தால்... ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.காரணம், பத்து வயது சிறுமி தன் வயதை ஒத்த தோழிகளின் துணையுடன், 'வாங்க, வாங்க மோர் குடிங்க... தர்பூசணி எடுத்துக்குங்க... நுங்கு சாப்பிடுங்க...' என்று அகமும், முகமும் மலர வரவேற்று, வந்தவர்களுக்கு இலவசமாக மோரும், தர்பூசணியும், நுங்கும் வழங்கிக் கொண்டிருந்தார்.பெயர் கவிபாரதி. சென்னையில் பி.எஸ்.மோத்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இவர் தன் வீட்டு பால்கனியில் இருந்து ரோட்டில் போகிறவர்களை பார்த்துக் கொண்டு இருந்த போது, பலரும் வெயிலில் சிரமப்பட்டு செல்வதையும், வீடுகளில் தண்ணீர் கேட்டு காத்திருந்து குடிப்பதையும் பார்த்து இருக்கிறார்.ஏற்கனவே ரோடுகளில் சிலர் நீர் மோர் வழங்குவதை பார்த்திருந்த கவிபாரதியின் மனதில், ஏன் நாமும் அவர்களைப் போலவே நமது தெரு வழியாக செல்பவர்களுக்கு நீர் மோர் வழங்கக் கூடாது என்று யோசித்து, தனது யோசனையை தாய் ஸ்ரீவித்யா, தந்தை குமார் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.அவர்களும் சந்தோஷமாக சம்மதம் தரவே, கவிபாரதி தன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல் மூலதனமாக போட்டு வீட்டிலேயே மோர் தயாரித்து வாசலில் வைத்து வழங்கினார். பலரும் சந்தோஷமாக வாழ்த்திச் செல்ல உற்சாகமடைந்த கவிபாரதி இந்த நீர்மோர் தொண்டினை தந்தையின் ஆதரவுடன் தொடர ஆரம்பித்துவிட்டார். இவருக்கு துணையாக தோழிகளும் சேர்ந்து கொண்டுள்ளனர்.கவிபாரதியின் நீர் மோர் சேவையைப் பாராட்டி அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தார் என பலரும் ஆசீர்வாதம் செய்து பணம் வழங்கினர். அந்த பணத்தை வைத்து தர்பூசணி மற்றும் நுங்கு போன்றவைகளை வாங்கி கூடுதலாக வழங்குகிறார்.தினமும், 75 லிட்டர் மோர் செலவாகிறது. பகல் 11 மணியில் இருந்து வெயில் இறங்கும் மதியம் 3 மணி வரை, நீர் மோர் வழங்கப்படுகிறது. தர்பூசணியும், நூங்கும் இருப்பில் உள்ளவரை கொடுக்கப்படும். எந்நேரமும் மண்பானை தண்ணீர் குறைவின்றி குடிக்கலாம்.கவிபாரதியின் இந்த நீர்மோர் சேவையின் பின்னனியில் அவரது தாயார் ஸ்ரீநித்யாவிற்கு பெரும்பங்கு இருக்கிறது. வீட்டிற்கு குடிப்பதற்கு ஆவின் பால் வாங்குகிறார். ஆனால், மக்கள் குடிப்பதற்கு கொடுக்கப்படும் மோருக்காக கூடுதல் விலை கொடுத்து ஆர்கானிக் பால் வாங்குகிறார். மோரில் தாகம் தீர்க்கும் மூலிகைகள் சேர்ப்பதுடன் அதன் சுவைக்காக தாளிக்கவும் செய்கிறார்.'இன்னும் ஒரு டம்ளர் கொடு தாயி!' என்று கேட்டு வாங்கி குடித்த ஒரு பெரியவர், 'சின்ன வயசுல உனக்கு பெரிய மனசும்மா. ஆயுசுக்கும் நீ மகராசியா நல்லாயிருக்கணும்!' என்று வாழ்த்தினார். நீங்களும் சிறுமி கவிபாரதியை போல வாழ்த்து பெறணும்னு நினைச்சா உங்க அம்மா, அப்பாவிடம் சொல்லி அவர்கள் ஆசியோடும், ஆதரவோடும் உங்க வீட்டு வாசலிலும் நீர்மோர் வழங்கலாம். உங்களில் யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால் கவிபாரதியிடம் பேசலாம். அவரது சேவையை வாழ்த்தலாம். அவரது பெற்றோருடைய மொபைல் எண்: 94860- 65134.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !