தமிழகம்
மே 1: ஸ்டெம் செல் சேமிப்புக்கு தமிழக அரசு, 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மே 2: மத்திய அரசு அறிவித்த 8 சதவீத அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, மாநில அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. மே 5: கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குவதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி. மே 8: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை. மே 13: முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின், சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவிப்புகளை வெளிடுகிறார். இதன்படி 100வது அறிவிப்பை வெளியிட்டார். மே 14: மதுரையில் 100 கோடி ரூபாய் மதீப்பீட்டில், தமிழன்னைக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெ., அறிவிப்பு. மே 18: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி, வெளிநாட்டிலிருந்து 'ஹம்மர்' காரை வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்ததாக சி.பி.ஐ., யிடம் புகார்.மே 27: தமிழகத்துக்கு பெருமை: தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள, தென்னிந்தியாவின் முதல் விமானப்படை தளத்தை, மே 27ம் தேதி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியா
மே 1: இந்தியாவில் பல்கலைக்கழங்களுக்கு கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்லூரிகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை துவக்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு. மே 2: சரப்ஜித் சிங், கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, காஷ்மீர் சிறையில் இருந்த பாகிஸ்தான் கைதி ஷனுல்லாக் ரஞ்சாய் தாக்கப்பட்டு, பின் உயிரிழந்தார். *22 ஆண்டுகள் காத்திருப்பு வீண்: 1991ல் தவறுதலாக பாக்., எல்லைக்குள் சென்றசரப்ஜித் சிங், அந்நாட்டு ராணுவத்தால் கைதானார். பின், அங்கு நிகழந்த ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். இருப்பினும் இவரது குடும்பம் மற்றும் மத்திய அரசு சார்பில் இவரை விடுவிக்க பலமுறை முயற்சி செய்யப்பட்டது. இவரது கருணை மனு மீதான நடவடிக்கையும் தாமதமாகி வந்தது. இந்நிலையில் சிறையில் சக கைதிகளால் சரப்ஜித் கடுமையாக தாக்கப்பட்டார். லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மே 2ல் இறந்தார்.மே 6: இந்தியாவில் மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் அதிகம் கொண்ட (9 கோடி) மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்வு. 2வது இடத்தை தமிழகம் (7 கோடி) பெற்றது.* இந்திய தேசிய பறவை மயிலின் இறகை, வர்த்தகம் செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை. மே 7: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சியின் நிறுவனருமான மறைந்த என்.டி.ராமாராவ் உருவச்சிலை, பார்லிமென்ட் வளாகத்தில் திறக்கப்பட்டது. மே 9: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 2 நாள் அரசு முறைப் பயணமாக சீனா பயணம். மே 10: ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலின் உறவினர், ரயில்வே துறையில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து பவன்குமார் பன்சல் ராஜினாமா செய்தார். மே 11: நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., யின் அறிக்கையில் திருத்தம் செய்த குற்றச்சாட்டில், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் ராஜினாமா. * ரயில்வேதுறை அமைச்சர் பதவி சி.பி.ஜோஷிக்கும், சட்டத்துறை அமைச்சர் பதவி கபில் சிபலுக்கும் வழங்கப்பட்டது.மே 13: இந்திய சினிமா 100 ஆண்டுகளை நிறைவு செய்தது. முதல் சினிமாவான ராஜா அரிச்சந்திரா 1913 மே13 அன்று வெளியானது.மே 16: ஓ.பி.சி., கிரீமி லேயர் ஆண்டு வருமானத்தை 6 லட்சமாக நிர்ணயித்தது மத்திய அரசு. மே 17: ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதியாக, கல்யான் ஜோதி சென்குப்தா பொறுப்பேற்பு. மே 19: இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், குர்கானில் தொடக்கம். மே 20: சீன பிரதமர் லீ கெகியாங், 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மே 23: மலையாளத்தை செம்மொழியாக மத்திய அமைச்சரவை அறிவித்தது. தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது.மே 25: மாவோயிஸ்ட்களின் கொலை வெறி: சட்டீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் மே 25ல் நடந்த காங்., பேரணியில் காங்., தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரணி முடிந்து தலைநகர் ராய்ப்பூருக்கு வரும் வழியில், வனப்பகுதியில் வழிமறித்த 150 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுக்லா உள்ளிட்ட 28 பேர் பலி.மே 27: பிரதமர் மன்மோகன் சிங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக சீனா மற்றும் தாய்லாந்து சென்றார். மே 28: பா.ஜ., கட்சியில் இருந்து பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஆறு ஆண்டுகளுக்கு நீக்கம். * பஞ்சாப் அரசு வருமானத்தை பெருக்குவதற்காக, ஆன்லைன் லாட்டரி சீட் வர்த்தகத்திற்கு அனுமதி.மே 31: பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) புதிய தலைவராக அவினாஷ் சந்தர் பொறுப்பேற்பு.
உலகம்
மே 1: வங்கதேச, முதல் பெண் சபாநாயகராக ஷிரின் ஷர்மின் சவுத்ரி பதவி ஏற்றார். மே 17: பிரான்சில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு, அந்நாட்டு அரசு ஒப்பதல். உலகில் ஓரின சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் 14வது நாடு இதுவாகும். மே 12: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நவாஷ் ஷெரிப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஷ் ஷெரிப் பதவியேற்றார்.மே 14: அழகிக்கு வந்த சோகம்: உலக ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிப்பதற்காக மே 14ம் தேதி, ஆபரேஷன் மூலம் மார்பகங்களை அகற்றி, பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் திருமணம் செய்யாமலே, காதலன் நடிகர் பிராட் பிட்டுடன் சேர்ந்து வாழ்கிறார். 3 தத்து குழந்தைகள் உள்பட 6 குழந்தைகள் உள்ளன.மே 20: அமெரிக்கவின் ஓக்லஹோம் மாகாணத்தில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி, 90 பேர் பலி.மே 22: மியான்மர் அதிபர் தீன் செயின், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். மே 23: ஜப்பானைச் சேர்ந்த 80 வயதான யூச்சிரோ மியூரோ, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய வயதானவர் என்ற பெருமை பெற்றார். மே 25: அமெரிக்க வாழ் இந்திய பெண் ஈஷா கரே, 20 - 30 வினாடிகளில், மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றும் பேட்டரியை கண்டுபிடித்தார்.
'நியூஸ் ரேங்க்'
1. ராமதாசுக்கு ஜாமின்: மாமல்லபுரம் கடற்கரையில் நடந்த பா.ம.க., கட்சி மாநாட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசிய வழக்கில், திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், 11 நாட்களுக்குப் பின் மே 11ல் ஜாமின்.2. மண்ணைக் கவ்விய பா.ஜ.,: கர்நாடகாவில் பா.ஜ.,வை வீழ்த்தி, காங்., ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையா மே 13ல் பதவியேற்பு. பா.ஜ., 40ல் மட்டுமே வெற்றி. தனியாக களம் கண்ட எடியூரப்பா கட்சி 8ல் மட்டுமே வெற்றி.3. நான் எப்பவும் இப்படித் தான்: நாட்டின் பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கின், ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, மே 30ம் தேதி, அசாம் மாநில காங்., சார்பில், மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்வு.
விளையாட்டு
மே 4: மலேசிய ஓபன் பாட்மின்டன் பைனலில் இந்தியாவின் சிந்து, சிங்கப்பூரின் ஜுவான் குவை வீழ்த்தி, கோப்பை வென்றார்.மே 20: ஸ்பெயினில் நடந்த லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.மே 21: இந்திய கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட பிரச்னையினால், பிரிமியர் கிரிக்கெட் அமைப்பிலிருந்து புனே அணி விலகியது.மே 24: பிரிமியர் தொடர் சூதாட்டம் தொடர்பாக சென்னை அணியின் முன்னாள் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைது.மே 26: கோல்கட்டாவில் நடந்த பிரிமியர் தொடர் பைனலில் மும்பை அணி, சென்னையை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.