தமிழகம்
ஜூலை 3: மதுரையில் இருந்து, சென்னை சென்ற 'வைகை எக்ஸ்பிரஸ்' ரயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கிடைத்த தகவலால், ரயில் பயணம் தாமதம். பின் இது புரளி என தெரிய வந்தது. * பாதியில் முறிந்த காதல்: தர்மபுரியில் கடந்தாண்டு, வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் இளவரசன் - திவ்யா கலப்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ஜூலை 3ல், திவ்யா தனது தாயாருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கோர்ட்டில் தெரிவித்தார். இதனால் மனம் நொந்த இளவரசன், அடுத்த நாள், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் பாதையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.ஜூலை 5: நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 25 ஆயிரம் ஊழியர்கள் தொடர் 'ஸ்டிரைக்'. இறுதியில் இந்த பங்குகளை தமிழக அரசே வாங்கிக்கொண்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. ஜூலை 10: புதுச்சேரி கவர்னராக வீரேந்திர காட்டார்யா பதவியேற்பு.ஜூலை 13: ரஷ்யாவின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம். 2002 மார்ச் 31ல் இதன் பணி துவக்கப்பட்டது.ஜூலை 19: தமிழருக்கு கவுரவம்: சுப்ரீம் கோர்ட்டின் 40வது தலைமை நீதிபதியாக, ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் ஜூலை 19ல் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 60 ஆண்டுகளுக்குப்பின், இப்பொறுப்பை ஏற்கும் 2வது தமிழர் இவரே. 1996ல் சென்னை ஐகோர்ட் நீதிபதியானார். 2007ல் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்தார்.ஜூலை 31: நடிகை கனகா இறந்து விட்டதாக செய்தி வெளியானது. கடைசியில் இது புரளி என தெரிய வந்தது.
இந்தியா
ஜூலை 1: நாட்டின் முதல், 'நேவிகேஷன்' செயற்கைக்கோள் 'ஐ.ஆர்.என். எஸ்.எஸ்., 1 ஏ', பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.ஜூலை 2: பொதுஇடங்களில் புகைப்பவர் இல்லாத முதல் மாநிலமாக, இமாச்சல பிரதேசம் தேர்வு. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்ட ஆய்வில் தகவல்.* ஜார்க்கண்ட்டில் நடந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 போலீசார் பலி. ஜூலை 3: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சிங்கப்பூருக்கு 2 நாள் பயணம். ஜூலை 5: உணவுப்பாதுகாப்பு மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல். ஜூலை 9: ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், விதிகளை கடுமையாக்கவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.ஜூலை 10: உத்தரபிரதேசத்தில் சாதி ரீதியிலான பேரணிகளுக்கு அலகாபாத் ஐகோர்ட் தடை விதித்தது.ஜூலை 12: உ.பி., மீரட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ரஷியா சுல்தான், முதல் ஐ.நா., மலாலா விருதுக்கு தேர்வு.ஜூலை 16: உணவே விஷம்: ஜூலை 16ல் பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 23 பேர் மயங்கி விழுந்து பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருந்ததே இதற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அலட்சியமாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.ஜூலை 17: இளம்குற்றவாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டியிருக்கும் வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.* தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு அனுமதி. ஜூலை 21: நாட்டில் உள்ள எம்.பி.,க்களில் 30 சதவீதமும், எம்.எல்.ஏ.,க்களில் 31 சதவீதம் பேரும் குற்றவாளிகளாக உள்ளனர் என ஆய்வில் தகவல்.ஜூலை 22: அமெரிக்க துணை அதிபர், ஜோ பிடென், 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை. ஜூலை 23: மும்பை பரேல் பகுதியில் 'அதிதீ வெஜ்' என்ற ஓட்டல், 'காங்., கட்சி கஜானாவை காலி செய்து விட்டதால், ஏ.சி., அறையில் உணவு சாப்பிட வரி விதித்துள்ளது' என சாப்பாட்டு பில்லில் அச்சடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 25: நிலம் மற்றும் கடற்பரப்புகளில் வானிலையை துல்லியமாக ஆய்வு செய்யும், இன்சாட் 3டி செயற்கைக்கோள், பிரஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஜூலை 26: சிறைக்கைதிகள் நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து பேச 'வீடியோ சேட்' வசதியை இமாச்சல பிரதேச அரசு அறிமுகப்படுத்தியது. ஜூலை 29: 2008 செப்., 19ல் டில்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸ் குடியிருப்பில், தங்கியிருந்த பயங்கரவாதிகளுடன், போலீசார் நடத்திய சண்டையில் காவல்துறை ஆய்வாளர் கொல்லப்பட்டார். பிடிப்பட்ட பயங்கரவாதி ஷாஜத் அகமதுவுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது.
உலகம்
ஜூலை 1: ஐரோப்பிய யூனியன் அமைப்பில், 28வது நாடாக, குரேசியா இணைந்தது.ஜூலை 6: கனடாவில் எண்ணெய் டாங்கர்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 60 பேர் பலி. ஜூலை 7: ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்த, சீனா முன்னாள் ரயில்வே அமைச்சர் லியூ ஷிஜுனுக்கு அந்நாடு மரண தண்டனை விதித்தது.* அமைதி சின்னத்துக்கு எதிராக...: உலகில் அமைதி போதிக்கும், பீகாரின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் ஜூன் 7ம் தேதி, 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2 பேர் காயம்.ஜூலை 9: எகிப்தின் புதிய பிரதமராக ஹசம்-எல்-பெப்லாவி நியமனம்.ஜூலை 22: சீனாவின் கன்சூ மாகாணத்தில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு 56 பேர் பலி. ஜூலை 23: சிங்கப்பூருக்கான இந்திய தூதராக லிம் துவான் குவான் நியமனம். ஜூலை 26: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, 'தி விக்கிலீக்ஸ் பார்டி' என்ற கட்சியை ஆஸ்திரேலியாவில் தொடங்கினார். ஜூலை 27: எகிப்து தலைநகர் கெய்ரோவில், பிரதமர் முகமது மோர்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100 பேர் பலி. 1,500 பேர் காயம். ஜூலை 28: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் நடந்த பிரதமர் தேர்தலில், ஆளும் கம்போடியா மக்கள் கட்சி, மீண்டும் வெற்றி. ஜூலை 29: இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து, இங்கிலாந்து விசா கோருபவர்கள், 3,000 ரூபாய் ரொக்க இருப்பாக செலுத்த வேண்டும் என இங்கிலாந்து அறிவிப்பு.
'நியூஸ் ரேங்க்'
1. இனி முடியாது: ஜூலை 11ல், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., வாக இருப்பவர்கள், குற்ற வழக்குகளில் சிக்கி குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களது பதவி பறிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பு.2. நிலையில்லாத அரசு: ஜார்க்கண்ட்டின் புதிய முதல்வராக ஜூலை 13ல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் மகன் ஹேமந்த் சோரன் பதவியேற்பு. மாநிலம் உருவாகிய 13 ஆண்டுகளுக்குள் 9 முதல்வர்களை பார்த்து விட்டது.3. திட்டமிட்ட தாக்குதல்: இந்த ஆண்டு பா.ஜ., மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள் பலர் வரிசையாக திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இதில் ஜூலை 19ல் சேலத்தில் தமிழக பா.ஜ., செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையும் ஒன்று.
விளையாட்டு
ஜூலை 1: பிரேசில் அணி பிரமாதம்: பிரேசிலில் 9வது கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் விறுவிறுப்பான பைனலில் பிரேசில் அணி, 'உலக சாம்பியன்' ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் அசத்தலான ஆட்டத்தைவெளிப்படுத்திய பிரேசில் அணி 3-0 என வென்று, கோப்பையை தட்டிச்சென்றது. இதன் மூலம், 'ஹாட்ரிக்' சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.ஜூலை 6: விம்பிள்டன் பெண்கள் பிரிவு பைனலில், பிரான்சின் மரியன் பர்டோலி, ஜெர்மனியின் லிசிக்கியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். ஜூலை 7: விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு பைனலில், செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்திய ஆன்டி முர்ரே, 77 ஆண்டுகளுக்கு பின் இப்பட்டத்தை வென்ற முதல் பிரிட்டன் வீரரானார். ஜூலை 9: அமெரிக்காவின் வெர்ஜினியாவில் நடந்த உலக ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பரிமார்ஜன் நேகி சாம்பியன்.ஜூலை 12: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில், வென்ற இந்திய அணி கோப்பை கைப்பற்றியது. ஜூலை 11: நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்டில், 98 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் ஏகார், 11வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். ஜூலை 23: இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர் ஏலத்தில் குறைந்த தொகைநிர்ணயித்ததாக ஜூவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா புகார்.