உள்ளூர் செய்திகள்

அக்டோபர் - 2013

தமிழகம்

அக்., 6: ஒருதலைக் காதல் விவகாரத்தில், ஆசிட் வீசப்பட்டு பலியான வினோதியின் தாயார் சரஸ்வதி தற்கொலை. அக்., 7: அனைத்து வகை, வகுப்புகளுக்கான ரயில் பயணக் கட்டணம், 2 சதவீதம் அதிகரிப்பு.அக்., 8: தனுஷ் நடித்த 'நய்யாண்டி' படத்தில் நடிகை நஸ்ரியா, தனக்கு பதிலாக டூப் பெண்ணை வைத்து, ஆபாச காட்சியை எடுத்ததாக, அப்பட இயக்குநர் சற்குணம் மீது போலீசில் புகார். அக்., 9: 2009 - 10, 2010 - 11ம் ஆண்டு தொல்காப்பிய விருது முறையே ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு பிரணாப் முகர்ஜி வழங்கினார். அக்., 11: திருநெல்வேலி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் சுரேஷை, அங்கு படிக்கும் 3 மாணவர்களே வெட்டிக் கொலை செய்தனர். அக்., 18: சென்னையில் நடந்த, பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரியின், புத்தக வெளியீட்டு விழாவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பு. அக்., 19: நாட்டின் உயரமான விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மும்பை விமான நிலையத்தில் திறப்பு. அக்., 21: பார்லிமென்ட் தேர்தலுக்கான பா.ம.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.அக்., 22: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., ஜெகதீஸ் சர்மா, பதவி பறிப்பு. அக்., 23: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்தி துவக்கம். அக்., 24: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக, ராஜேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு. * சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 'மினி பஸ்' சேவையை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். * இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்திய எந்த விதத்திலும் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம்.அக்., 28: 'ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், கலைஞர் 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட வழக்கில், கலைஞர் 'டிவி' நிறுவன முக்கிய பங்குதாரரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளுவிடம், அவரது வீட்டிலேயே எழும்பூர் மேஜிஸ்திரேட் நேரடியாக விசாரணை. அக்., 29: தமிழக அமைச்சரவை 12வது முறையாக மாற்றம். டாக்டரான விஜய பாஸ்கார், சுகாதார துறை அமைச்சராக நியமனம். அக்., 30: திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றம்.

இந்தியா

அக்., 4: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல். இதையடுத்து சீமந்தரா பகுதியில் போராட்டம் நடந்தது.அக்., 5: அச்சுறுத்திய பயங்கரவாதிகள்: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மீதான கொலை முயற்சி மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் அக்., 5ல் சித்தூரில், பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கைது.அக்., 7: ஏ.சி., மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில்களின், கட்டணங்கள் 2 சதவீதம் உயர்வு. * பொதுத்துறை வங்கிகளில் முதன்மையாக திகழும், பாரத ஸ்டேட் வங்கியின், முதல் பெண் தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நியமனம்.* காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவம் சார்பில் பணம் வழங்கப்படுவதாக, முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்., குற்றச்சாட்டு. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு, காஷ்மீர் சட்டசபை சம்மன். அக்., 8: சமையல் எரிவாயு உள்ளிட்ட மத்திய அரசின் மானியங்களை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. அக்., 9: கார்கில் போருக்குப்பின், காஷ்மீரின் கேரன் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பாக்., பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை, 30 நாட்களுக்குப்பின், ராணுவம் முறியடித்தது. 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. அக்., 12: வங்கக்கடலில் உருவான பைலின் புயல், ஒடிசாவின் கோபால்பூர் என்ற இடத்தில் கரையைக் கடந்தது. அப்போது 200 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஒடிசா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 90 லட்சம் மக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அக்., 19: கான்பூரில் நடந்த பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதம வேட்பாளர் மோடி பங்கேற்பு. அக்., 20: உ.பி.,யின் அசம்கார் மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்த, 40 பேர் பலி. அக்., 30: ஆந்திராவின் மெகபூப்நகர் மாவட்டத்தில் சொகுசு பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில், 44 பயணிகள் எரிந்து சாம்பலாகினர். அக்., 31: குஜராத் நர்மதா நதியில், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேலுக்கு, 597 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

உலகம்

அக்., 3: லாலுவின் எதிர்காலம்?: பீகார் முதல்வராக 1996ல் லாலு பிரசாத் யாதவ் இருந்த போது, மாடுகளுக்கு தீவனம் வழங்குவதில் ஊழல் நடந்தது. இவ்வழக்கில் 45 பேர் மீது வழக்கு பதிவானது. லாலு முதல்வர் பதவியை இழந்தார். ஒரு பக்கம் வழக்கு நடந்தாலும், மத்திய அமைச்சர், எம்.பி., என இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. 17 ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் அக்., 3ல், லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ராஞ்சி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி, லாலு அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.அக்., 7: மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க பேராசிரியர்கள் ஜேம்ஸ் இ.ராத்மேன், ரேண்டி டபிள்யூ. சேக்மேன், ஜெர்மனி பேராசிரியர் தாமஸ் சி.சூடாப் தேர்வு செய்யப்பட்டனர்.அக்., 9: வேதியலுக்கான நோபல் பரிசுக்கு, அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் லெவிட், மார்டின் கார்ப்ளஸ், அரீக் வார்ஷெல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அக்., 10: இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு, கனடா எழுத்தாளர் அலைஸ் முன்ரோ தேர்வு. அக்., 11: உலகில் ரசாயன ஆயுதங்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் அமைப்புக்கு (ஓபிசிடபிள்யு) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.அக்., 27: 'மோடி'க்கு குறி: பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிவுக்குப் பின், முதன்முறையாக அக்., 27ல், மோடி, ராஜ்நாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற பாட்னா பொதுக்கூட்ட மைதானத்தில், 6 இடங்களில் குண்டு வெடித்தது.* ஹிக்ஸ்போசான்' வென்ற நோபல்: 2013 இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு, 'ஹிக்ஸ்போசான்' எனும் கடவுள் துகள் கண்டுபிடித்த இங்கிலாந்தின் பீட்டர் ஹிக்ஸ், பெல்ஜியத்தின் பிராங்கா எங்க்லர்ட் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'பிக்பேங்' என்ற பிரளய வெடிப்புக்கு பின் இந்த பிரபஞ்சம் உருவானது. இதனை வைத்து ஆய்வு நடக்கிறது.

'நியூஸ் ரேங்க்'

1. கோயிலுக்கு சென்றாலும்: மத்திய பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் அக்., 13ல் நடந்த ரத்னாகர் கோயில் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பக்தர்கள் பலியாகினர்.2. அமெரிக்க கப்பல் சிறைபிடிப்பு: துத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவில், அமெரிக்காவின் அட்வன்போர்டு கப்பல், அனுமதியின்றி ஆயுங்களுடன் நுழைந்ததாக, அக்.,12ல் இந்திய கடற்படையால் சிறைப் பிடிப்பு. மாலுமிகள் உள்பட 33 பேர் கைது.3. அரசு அலுவலங்கள் மூடல்: அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப்பின், தற்காலிகமாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டது. பின், கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு, இரு அவைகளும் ஒப்புதல் வழங்கியதால், 16 நாட்களுக்குப்பின் திறப்பு.

விளையாட்டு

அக்., 4: ஆப்கானிஸ்தான் அணி, உலக கோப்பை கிரிக்கெட் (2015) தொடரில் பங்கேற்க, முதன் முறையாக தகுதி பெற்றது.அக்., 5: டிரினிடாட் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் போட்டியில், 26வது ரன் எடுத்த போது, கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ரன்களை எட்டினார் இந்திய 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். * சீன ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன்.* ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி சாம்பியன்.அக்., 16: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில், 52வது பந்தில் சதம் அடித்து கோஹ்லி, அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார். அக்., 20: மக்காவு ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் சாம்பியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !