உள்ளூர் செய்திகள்

29 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல்

சென்னை அப்பல்லோ மருத்துவ குழுமத்தில், அட்வான்ஸ் பீவர் கிளினிக் பிரிவின் தலைவர், டாக்டர் டி.வி.தேவராஜன். மருத்துவ துறையில், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., - எப்.ஆர்.சி.பி., (ஜி) டி.எஸ்சி., என்று பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள இவர், மருத்துவ சேவைக்காக, நாட்டின் உயர் விருதான பத்மஸ்ரீ மற்றும் அப்துல் கலாம் கையால், 'பி.சி.ராய்' விருதும், எப்.ஐ.சி.பி., எனப்படும் மருத்துவர்களுக்கு தரப்படும் மிக உயரிய விருதையும் பெற்றுள்ளார்.இவர் எழுதிய, பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ புத்தகங்கள் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளன.அத்துடன், சென்னை மருத்துவக் கல்லூரியில், சம்பளம் வாங்காமல், 29 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் டி.வி.தேவராஜன்.இது குறித்து அவர் கூறியது:சம்பளம் வாங்காமல் பணியாற்றியதால், என்னை பணக்காரன் என எண்ணி விட வேண்டாம். நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சிரமப்பட்டு படித்தவன். வெறுமனே எம்.பி.பி.எஸ்., மட்டும் படிக்காமல், எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவும் படித்து விடுவது என படித்தேன்.படித்த படிப்புக்கு உடனடியாக சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை கிடைத்தது. காலையில் பேராசிரியர் பணி, மாலையில் சொந்த கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வந்தேன்.இதில், மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதே எனக்கு பிடித்தமான வேலை. இதனாலேயே கல்லூரிக்கு சென்று பாடம் நடத்துவதை, விட மாட்டேன். அதனால் தானோ என்னவோ, மாணவர்களும், என் வகுப்பை தவற விட மாட்டார்கள்.இச்சூழ்நிலையில் தான் ஒரு சிக்கல் எழுந்தது. சம்பளம் வாங்கக் கூடிய உதவி பேராசிரியர்களுக்கு இடமாற்றம் உண்டு; சம்பளம் வேண்டாம்; கவுரவ பேராசிரியராக இருந்து கொள்கிறேன் என்றால், இடமாற்றம் கிடையாது என்று ஒரு விதி இருந்தது. கிளினிக் வருமானமே எனக்கு போதுமானதாக இருந்தது என்பதை விட, என் மாணவர்களை விட்டு வேறு இடத்திற்கு செல்ல விருப்பம் இல்லை. அதனால், சம்பளம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டேன்.அச்சமயத்திலேயே எனக்கு பல ஆயிரம் ரூபாய் சம்பளம். அதன்பின், 29 ஆண்டுகளில் எத்தனையோ மடங்கு சம்பளம் உயர்ந்தது. ஆனால், அதை நினைத்துப் பார்த்ததோ, அதற்காக வருத்தப்பட்டதோ இல்லை. என்னிடம் படித்ததை மாணவர்கள் பெருமையாக கருதுகின்றனர்; எனக்கு அது போதும். இன்று பல மருத்துவர்கள் என் பெயரை உதாரணமாக சொல்லும் போது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. - இவ்வாறு அவர் கூறினார்.ஓய்வு பெற்ற பின், பல பல்கலைக்கழகங்களுக்கு கவுரவப் பேராசிரியராகவும், கல்லூரி தேர்வாளராகவும், இந்திய மருத்துவரில், சிறந்த மருத்துவரை தேர்ந்தெடுக்கும், பி.எம்.ஜே., விருதுக் குழுவின் நீதிபதியாகவும் இருந்துள்ளார் டி.வி.தேவராஜன்.தற்போது, 71 வயதாகும் இவர், சிறிதும் சுறுசுறுப்பு குறையாமல், தன் மருத்துவ பணிகளுக்கிடையே 'டெக்ஸ்ட் புக் ஆப் மெடிசின்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். நவீன மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்புத்தகம், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, ஒரு பொக்கிஷம்!இப்பிரமாண்ட புத்தகத்தின் பலன், மாணவர்களுக்கு போய் சேர்ந்தாலே போதும், அதற்காக தனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என பெருந்தன்மையாக கூறியுள்ளார் டி.வி.தேவராஜன். சந்தேகம் இல்லாமல், இவர் மகத்தான மருத்துவர் தான்!இவரது, இமெயில் முகவரி: drtvd1944@gmail.comஎல்.ராகவேந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !