இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
ஆயிரம் விளக்கு பகுதியில், புகழ்மிக்க மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் உறவினர் ஒருவர். அவரை பார்த்து விட்டு, என் வாகனத்தருகே வந்தால், வாகனம் பஞ்சர்! பக்கத்திலிருந்த ஆட்டோ நிறுத்தத்தில் போய், 'இங்கே பஞ்சர் பார்க்கிற கடை உள்ளதா?' என விசாரித்த போது, சற்றே வியப்பான பதில் காத்திருந்தது.'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன சார் நீங்க... அந்த வீட்டுக்கார பெரியவரை பத்தி உங்களுக்கு தெரியாதா... தன் வீட்டு வாசல்ல நிற்கிற வண்டிகளின் டயர்களை கோணி ஊசியால் குத்தி, பஞ்சராக்கி விடுவார்...' என்றனர் ஆட்டோக்காரர்கள்.காலம் காலமாக இது நடக்கிறதாம்!கார் நிறுத்தும் விஷயத்தில் நான் சற்று கெட்டி! நடக்க அஞ்சாமல், தொலைதூரம் கொண்டுபோய் எவருக்கும் இடைஞ்சல் இல்லாத இடமா... நம்மால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா, வீட்டு வாயிலா, தொழில் நடக்கும் இடம் என்றால், நம்மால் அவர்களுக்கு தொழில் கெடுமா, நம் வாகனத்தை எடுக்க முடியாதபடி, எவரும் வண்டியை நிறுத்தி மடக்கி விடுவரா, அவசரமாக புறப்படுகிற நேரத்தில், நாம் சிக்கி கொள்வோமா, காவல் துறையின், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு உண்டா என்கிற, ஏழு கேள்விகளுக்கும் விடை கண்ட பின் தான், வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.ஆனால், நான் நிறுத்திய வீட்டுப் பகுதியினுள் இருள் மண்டியிருக்க, அப்படியும் வெளியிலிருப்பவர், வீட்டிற்கு வரும் போது, வழி வேண்டுமே என்று, ஒரு கார் நுழைய வழி விட்டு தான் நிறுத்தியிருந்தேன். பெரியவர் அப்படி நினைக்கவில்லை போலும்! கோணி ஊசிக்கு வேலை வைத்து விட்டார்.ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில், சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் ஏறிய (விடியற்காலை, 3:00 மணி) திருமண கோஷ்டி ஒன்று (ஒன்பது பேர்), எல்லா விளக்குகளையும் போட்டு, கூச்சல் போட ஆரம்பித்தது. காரணம், ஒரே ஒரு வெள்ளைப் போர்வை தரப்படவில்லை என்று! அத்தனை பேர் தூக்கமும் போயே போயிந்தி!இதில் ஒருவருக்கு மட்டும் பி - 1ல் 6ம் நம்பர் இருக்கை; அவர் அங்கேயிருந்து, பி - 1/46ல் இருப்பவருக்கு கேட்க வேண்டும் என்று பெரிதாக கத்துகிறார். தூங்குற அத்தனை பேரின் தூக்கத்தையும், அவர்களது உணர்வுகளையும், கிள்ளுக்கீரையாக நினைத்த இந்த திருமண கோஷ்டியில், ஒருவருக்கு கூடவா இங்கிதம் தெரியாது? 'உஷ் மெதுவா பேசு... எல்லாரும் தூங்குறாங்கல்ல...' என்று சொல்ல, நவக்கிரகங்களுக்குள் ஒன்றிற்கு கூடவா தோன்றியிருக்காது? கஷ்டம்!எங்கள் வீட்டருகே கூம்பு ஸ்பீக்கர் (தடை செய்து பல ஆண்டுகளாச்சு) போட்டு கத்த விடுகிற கோவில் ஒன்று உண்டு. பல மதத்தவர் வாழும் இடத்தில், ஒரு மதத்தவர் மட்டும் இப்படியா ஆதிக்கம் செலுத்துவது? தேர்வு நேரத்தின் போது பிள்ளைகளின் படிப்பு என்னாவது? இத்தனைக்கும், அதற்கு அருகில், இதய நோய் மருத்துவமனை உள்ளது. எதையும் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தின் போக்கு உண்மையில் பிடிபடவில்லை.சில நேரங்களில், உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் கமல் போல, 'அநியாயத்தை தட்டிக்கேட்க கிளம்பி விடலாமா...' என்று கூட வேகம் வரும்.தமிழகத்தின் மோசமான கலாசாரங்களுள் ஒன்று, சாலை மறியல். லாரியில், பேருந்தில் அடிபட்டு ஒருவர் சாலையில் இறந்தால், அது ரொம்ப பாவமான, அநியாயமான சாவு தான். ஆனால் அதற்கும் சாலை மறியல் செய்கின்றனர். சாலை போடாவிட்டால், நீர் வராவிட்டால், அதற்கும் சாலை மறியல். இரண்டு முதல் பல மணி நேர மறியலில், எத்தனை பேர் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் போக முடியாமல், உயிரை விட்டனரோ! எத்தனை பேருக்கு தேர்வு, வேலை போச்சோ, எவ்வளவு பேர் ரயில் - விமானத்தை கோட்டை விட்டனரோ தெரியாது.நம் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை, எண்ணற்ற வாழ்வு நெறிகளையும், ஒழுங்குகளையும் கொண்டது. நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.எதிர் இருக்கையில் உட்கார்ந்து, அவர்களுக்கு நம்மால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை உணர்ந்து பார்த்தனர் அவர்கள். 'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கும் இக்கால மனப்போக்கு மாற வேண்டும்.மனித மாண்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு சுயநலத்தையும், ஏற்க முடியாது.பிறருக்கு இடைஞ்சல் தராத வாழ்க்கையை, வாழ்வின் உன்னத நெறியாக ஆக்கி கொள்வதில், இன்னொரு நன்மையும் இருக்கிறது; இது, பூமராங் ஆகி, நம்மை திரும்ப வந்து தாக்காமல் இருப்பதே அது!லேனா தமிழ்வாணன்