செல்லப் பறவையான, காகம்!
காகம் ஒன்று, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் சகஜமாக பழகுவதுடன், அவர்கள் சட்டை பையிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்து, அதன் கூண்டில் பத்திரப்படுத்துகிறது. இந்த அபூர்வ காட்சியை, கேரளா மாநிலம் கொல்லம் பகுதியிலுள்ள ஒரு கடையில் காணலாம். சில மாதங்களுக்கு முன், வினோத் என்பவரின் கடை அருகில் இருந்த, மரம் ஒன்று வெட்டப்பட்டது. மரத்திலிருந்த காகத்தின் கூடு, கீழே விழுந்து, அதிலிருந்த காக்கை குஞ்சுகள் இறந்தன.அதில், ஒரே ஒரு குஞ்சு மட்டும் உயிருடன் இருக்க, அதை எடுத்து, கேஷு என்று பெயர் சூட்டி வளர்க்க துவங்கினார், வினோத். அதற்காக, கடைக்குள் ஒரு மரப்பெட்டியையும் வைத்தார்.குஞ்சு வளர வளர, மனிதர்கள் பேசுவதை புரிந்து கொண்டு, செயல்பட ஆரம்பித்தது. கடைக்கு வருபவர்களின் தோளில் அமர்ந்து, அவர் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்து, தன் கூண்டில் வைத்து விடும். இறைச்சி துண்டைக் கொடுத்தால், தண்ணீரில் கழுவி சாப்பிடுகிறது, கேஷு.— ஜோல்னாபையன்