உள்ளூர் செய்திகள்

ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (3)

நயாகரா குறித்து, வழிகாட்டி கூறிய ஆபத்து என்னவாக இருக்கும் என, குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அவரே அது குறித்து கூறத் துவங்கினார்...'அமெரிக்கா - கனடா நாட்டின் எல்லையில் உள்ளது, நயாகரா. இதனால், நயாகரா பாதையில் சாலையில் செல்வதற்கு பதிலாக பலர், கனடா நாட்டு சாலையில் சென்று, அந்நாட்டிற்குள் நுழைந்து விடுவர். கனடா அதிகாரிகள் அவர்களை பிடித்து, விசா இல்லாமல், நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி, நடவடிக்கை எடுப்பர். 'இந்த பிரச்னையில் இருந்து தப்பி வருவது, பெரும் சிக்கல் என்பதால், நயாகரா சாலையில் சரியாக பயணிக்க வேண்டியது அவசியம்...' என்றார். அவர் கூறியது உண்மை தான். அமெரிக்கா - -கனடா எல்லையில், சாலைகள் மிகவும் அருகருகே அமைந்திருந்தன. கொஞ்சம் தவறினாலும், கனடா சாலையில் திரும்பி விடும் சூழ்நிலை இருப்பதை பார்த்தோம். எங்களின் வேன் டிரைவர், அடிக்கடி நயாகரா சென்று வந்தவர் என்பதால், சரியாக எங்களை அழைத்து போய் சேர்த்தார். அடுத்த எட்டு நாட்களில், குளிர் காலத்திற்காக, நயாகரா அருவி மூடப்பட உள்ளது என்ற நிலையில், நாங்கள் அங்கு இறங்கினோம். குளிர், ஊசியாய் உடம்பு முழுவதும் குத்த, எப்படியும் அந்த பிரமாண்ட அருவியை பார்த்தே தீர்வது என்ற பிடிவாதத்துடன், அருவி நோக்கி புறப்பட்டோம். 'ஈரி' என்ற பிரமாண்டமான ஏரியில் இருந்து புறப்படும் நயாகரா ஆறு, கிட்டத்தட்ட, 56 கி.மீ., ஓடி, 'ஒன்டாரியோ' என்னும் ஏரியில் கலக்கிறது. இடையில், அமெரிக்க-ா - கனடா எல்லையில், அருவியாக கொட்டுகிறது. அமெரிக்க பகுதியில் ஒன்று, கனடா பகுதியில் இரண்டு என, இந்த பிரமாண்ட அருவி, மொத்தம் மூன்றாக பிரிந்துள்ளது. அமெரிக்க பகுதியில், நயாகரா அருவி, 53 மீ., பள்ளத்தில் அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் செலுத்திய பின், அருவியை காண, ராட்சத, 'லிப்ட்' மூலம் இறங்கினோம். அங்கு, அருவியின் சாரலில் நனையாமல் இருக்க, தலையையும் மூடிக் கொள்ளும் வகையிலான, 'பிளாஸ்டிக் கோட்' தந்தனர். அதை அணிந்து, பிரமாண்ட படகில் ஏறி, நயாகராவை ரசிக்க புறப்பட்டோம். 10 நிமிட பயணத்தில், நயாகரா அருவி காட்சி தந்தது. உலகின் பிரமாண்ட அருவியை பார்த்த அந்த நொடியில், வியப்பின் உச்சத்திற்கே சென்றோம். மெல்ல மெல்ல அருவியை ஒட்டிச் சென்றது, படகு. அதிலிருந்து தெறித்த நீர் திவலைகள், எங்கள் மீது ஸ்பரிசித்த போது, ஒப்பற்ற அந்த பேரருவி, பன்னீர் தெளித்து எங்களை வரவேற்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடும் குளிரான நிலையில், அருவியின் சாரல், குளிரை மேலும் அதிகப்படுத்தினாலும், அதை பொருட்படுத்தாமல் அந்த அற்புத அருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து, ரசித்தோம். 1,100 அடி அகலத்தில், 160 அடி உயரத்தில், நிமிடத்திற்கு, 60 லட்சம் கன அடி என்ற அளவில், விண்ணிலிருந்து கொட்டுவது போல் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் அருவியை ரசித்த பின், படகு, கரை திரும்பியது. பிரிய மனமில்லாமல் நயாகராவை திரும்பித் திரும்பி பார்த்தபடி, கரை சேர்ந்தோம். அந்த வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களை, இந்திய ஓட்டல்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார், வழிகாட்டி. வரிசையாக சிறிதும், பெரியதுமாக கடைகள் இருந்தன. வட மாநிலத்தவர் தான், குறிப்பாக, குஜராத்தியர் தான் கடை வைத்துள்ளனர். சமோசா, சுண்டல் முதற்கொண்டு, 'சிக்கன் கபாப்' வரை கிடைக்கிறது. சமோசா சாப்பிட்டு, மசாலா டீயை ருசித்தோம். நயாகராவில், இந்திய - சீன முகங்களே அதிகம் தென்பட்டன. இது குறித்து, வழிகாட்டியிடம் கேட்ட போது, 'இங்கு மட்டுமல்ல, எல்லா சுற்றுலா தலங்களிலும் இந்த இரு நாட்டவர்கள் தான் அதிகம் தென்படுவர். அமெரிக்கர்கள் அதிகம் வரமாட்டார்கள். கை நிறைய சம்பளம் என்பதால், இந்தியர்கள், சீனர்கள் அதிகமாக வருகின்றனர். 'அமெரிக்கர்கள், ஐந்து ஆண்டு காலம் சேமித்த பின்னரே, சுற்றுலா வர முடியும். இந்திய - சீன நாட்டினர் மீது, அமெரிக்கர்கள் அதிருப்தியடைய இதுவும் ஒரு காரணம்...' என்றார். நயாகரா அருவியை பார்த்த திருப்தியுடன், அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டோம். ஆறு மணி நேர பயணம். பார்க்க வேண்டும் என, நான் பல ஆண்டுகளாக கனவு கண்டு கொண்டிருந்த நகரம் அது. இப்போது, என் கனவு நினைவாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தபோது, எங்கள் டிரைவர், வேனின் வேகத்தை திடீரென குறைத்தார். அவர் முகத்தில் ஒரு பயம். அதே நேரத்தில், எங்கள் வேனை தாண்டி, மின்னல் வேகத்தில் இரண்டு போலீஸ் கார்கள், 'சைரன்' ஒலித்தபடி கடந்தன. சில நிமிடங்களில் எங்களுக்கு முன் சென்ற வாகனங்கள் திடீரென நிற்க, எங்கள் வேனும் நின்றது. ஒன்றும் புரியாமல் நாங்கள் வேனுக்குள் அமர்ந்திருந்தோம்.— தொடரும்.எஸ். உமாபதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !