உள்ளூர் செய்திகள்

பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (5)

பட்டுமாமி, 'கெட்- அப்'பில் இருந்த, ஜானகியை முத்தமிட்டவர் யார் என்றால், சகலகலாவல்லியான நடிகை, பானுமதி.'உன் நடிப்பு அபாரம். நீ மடிசார் புடவை கட்டிக் கொண்டிருக்கும் படத்தை, புடவை கடையில் வைத்திருக்கின்றனர். அதை பார்த்ததும், அப்படியே எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்ற வெறி கூட எனக்கு வந்துவிட்டது. ரொம்பவும் நன்றாக நடித்திருக்கிறாய். பட்டு மாமியாகவே கண்முன் இருக்கிறாய்...' என, மனம் திறந்து பாராட்டினார், நடிகை பானுமதி.'பானுமதியம்மா எவ்வளவு பெரிய நடிகை, எவ்வளவு பெரிய அனுபவசாலி. நிறைக்குடமான அவருடைய உள்ளத்தில் இருந்து வந்த இந்த பாராட்டை, எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகவே நான் நினைக்கிறேன்...' என்கிறார், ஜானகி.ஒருசமயம், உயர்ந்த மனிதன் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போது, 'சார் சாயங்காலம் எனக்கு நாடகம் இருக்கு. கொஞ்சம் சீக்கிரமாக கிளம்புகிறேன்...' என, சிவாஜியிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும், 'எதிர்நீச்சல் நாடகத்துல பட்டு மாமியா நடிக்க போறியா? நானும், பிராமின் பாஷை பேச கத்துக்கிட்டு, அசத்தப் போறேன் பாரு...' என்று கூறியுள்ளார், சிவாஜி.சொன்னது போலவே, வியட்நாம் வீடு படத்தில், பிராமின் பாஷை பேசி அசத்தியிருந்தார், சிவாஜி. எம்.ஜி.ஆருடன் நடித்த போது, நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார், ஜானகி.ஒவ்வொரு நடிகைக்கும், நடிகருக்கும், ஒரு லட்சிய கதாபாத்திரம் இருக்கும். அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவர். அதே போல, ஜானகிக்கும் ஒரு கதாபாத்திரம் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது.அப்போது, பூல் அவுர் பத்தர் என்ற ஹிந்தி படம் வெளியாகி, சென்னையில் நீண்ட நாள் ஓடியது.அந்த படத்தை யாராவது தமிழில் தயாரித்தால், அதில் மீனாகுமாரி நடித்த வேடத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினார், ஜானகி.அந்த படத்தின் கதையை வாங்கி, தமிழில் தயாரிக்க, ஜெமினி நிறுவனம் திட்டமிட்டு இருக்கும் செய்தி, ஜானகியை எட்டியது.'கதை நாயகி வேடத்தில் நடிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ?' என நினைத்துக் கொண்டார், ஜானகி.'ஏம்மா இந்த வேடத்தின் மீது இவ்வளவு ஆசை வைத்திருக்கிறாயே... நீயே, ஜெமினி வாசன் சாரிடம் போய் கேட்டுப் பாரேன். ஹாலிவுட்டில் பெரிய நடிகர்கள் இப்படித்தான் வலிய போய் கேட்பராம். அதில் ஒன்றும் தரக்குறைவோ, தவறோ கிடையாது...' என கூறியுள்ளார், ஜானகியின் மகள்.நெருங்கிய நண்பர்களும் இதையே கூறினர்.ஜானகியும், ஜெமினி நிறுவனத்தில் விசாரித்த போது. எம்.ஜி.ஆரின், 100வது படமாக, அந்த கதை உருவாவதாக செய்தி கிடைத்தது.ராமாவரம் தோட்டத்துக்கு போன் செய்தார், ஜானகி.மறுமுனையில், ஜானகி எம்.ஜி.ஆர்., எடுத்தார்.'என்னம்மா ஜானகி நலமா இருக்கியா? என்ன சொல்லுமா...' என்றார்.'அண்ணன் இருக்கிறாரா?''இதோ...' என்றதும், மறுமுனையில் எம்.ஜி.ஆர்., பேசினார்.'என்னம்மா ஜானகி ஏதாவது உதவி தேவையா?''ஆமாம்ண்ணே. நீங்க நடிக்க போற, 100வது படத்தில், ஹிந்தியில், மீனாகுமாரி நடித்த இளம் விதவை வேடத்தில் நடிக்க, நான் ஆசைப்படுகிறேன்...' 'அப்படியா நல்லது, நீயே செய். இயக்குனரிடம் சொல்றேன்...' என்றார், எம்.ஜி.ஆர்.,மறுநாளே, ஜெமினி நிறுவனத்தில் இருந்து, ஜானகி வீட்டுக்கு கார் வந்தது. ஒளிவிளக்கு படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்த பத்திரத்தில், ஜானகியிடம் கையெழுத்து பெற்று, சென்றனர். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு கண்டு, அதிர்ந்து போனார், ஜானகி.எம்.ஜி.ஆர்., என்ற அந்த மாமனிதரை பற்றி, ஜானகி சொன்னது:எம்.ஜி.ஆர்., அவர்களுடன் நான், பணம் படைத்தவன் மற்றும் ஒளி விளக்கு படங்களில் நடித்தேன். ஒளிவிளக்கு படத்தில், ஒரு காட்சியில் நான் பாடி நடித்த, 'ஆண்டவனே உன் பாதங்களில்...' என்ற பாடல், பின்னர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.எம்.ஜி.ஆர்., நல்ல டெக்னீசியன். மனிதாபிமானம் மிக்கவர். சினிமா மீடியாவின் பலத்தை நன்றாக புரிந்து, அதை தம் வாழ்வில் இணைத்து வரலாறு படைத்தவர், அவர் ஒருவர் மட்டும் தான்.ஒளிவிளக்கு படப்பிடிப்பு நிறைவாக முடிந்த பின், அவருடைய காரில் இருந்த எமர்ஜென்சி விளக்கை எடுத்து, எனக்கு பரிசாக தந்தார், எம்.ஜி.ஆர்., அந்த விளக்கு இன்றும் என் வீட்டில் உள்ளது.நான் அதைப் பார்க்கும் போதெல்லாம், லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர் ஏற்றிய நினைவு, சுடர்விட்டு இன்னும் பிரகாசித்துக் கொண்டிருப்பதாகத் தான் நினைப்பேன்.ப்ரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்று, திரும்பி வந்தபோது, ஒளிவிளக்கு படத்தில் நான் பாடி நடித்த, 'இறைவா உன் மாளிகையில்...' பாடல், எங்கும் ஒலித்தபடி இருந்தது. அவர் நாடு திரும்பியதும் அவரை சென்று பார்த்தேன்.'நீ நடித்த பாடல் பட்டித் தொட்டி எல்லாம் ஒலிக்கிறதேம்மா...' என்று கூறி நெகிழ்ந்தார், எம்.ஜி.ஆர்.,அவரைப் பார்த்து எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. அந்த மாமனிதர் நலமாக வாழ வேண்டும் என, வேண்டிக் கொண்டேன்.திரைப்பட உலகில் ஒரு சரித்திரமாகி விட்ட எம்.ஜி.ஆரைப் பற்றி நினைக்கும் போது, இன்னும் இரண்டு விஷயங்கள், அவர் குறித்து சொல்ல வேண்டும்.எம்.ஜி.ஆர்., தான் நடிக்கும் படங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தன்னுடைய படங்களின் எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது வழக்கம்.அது சில பேருக்கு பிடிக்காது. ஆனால், படம் எடுத்து முடித்த பின், போட்டு பார்க்கும் போது தான் தெரியும், அவர் காரணத்தோடு தான் தலையிட்டுள்ளார், என்பது.அதுபோலத் தான் நான், அவருடன் நடித்த, பணம் படைத்தவன் படத்தில், 'கண் போன போக்கிலே கால் போகலாமா...' என்ற பாடல் காட்சி எடுக்கும் போது, நடந்த ஒரு சம்பவம்.அவர் எவ்வளவு பெரிய டெக்னீசியன், எந்த அளவுக்கு பெண்களை தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை மதிக்க கூடியவர் என்பதற்கு உதாரணமாக அமைந்தது.அந்த பாடல் காட்சிக்காக, நான் அணிந்திருந்த உடை மிக மெல்லியதாக, கவர்ச்சியாக இருந்தது. இதை கவனித்த, எம்.ஜி.ஆர்., — தொடரும்- சபீதா ஜோசப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !