உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

லெ.நா.சிவகுமார், சென்னை:வெயில் வெளுத்து வாங்குகிறதே... 'ஜில்' என, எதைக் குடிக்கலாம்... 'பீரா' அல்லது மோரா?நீங்கள் கேட்டதில் முதலாவது, லென்ஸ் மாமாவிற்கும், இரண்டாவது எனக்கும்! * அ.செந்தில்குமார், சூலுார், கோவை: ஆபத்தை உணராமல், அதி வேகமாக, இரு சக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்களை திருத்துவது எப்படி?திருத்தவே முடியாது... 'மண்டை'யை போட்ட பின் தான், அவர்களது நண்பர்களாவது திருந்துவர்... இவர்கள் எல்லாம், இது தொடர்பான செய்திகளை, நாளிதழ்களிலோ, 'டிவி' சேனல்களிலோ பார்ப்பதில்லை போலிருக்கிறது! சி.முருகன், சென்னை: நான் நிறைய படித்தவன்! 'சாப்ட்வேர்' நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்; கை நிறைய சம்பளம். இதே தகுதி உடைய, உடன் பணியாற்றும் பெண் ஒருவர், திருமணத்திற்கு, 'பிரபோஸ்' செய்கிறார். என் பெற்றோரிடம் சொன்னேன்... அவர்கள், 'அப்பெண், நம் ஜாதியை விட கீழானவள்... வேண்டாம்...' என்கின்றனர். என்ன செய்வது?உங்கள் பெயருடைய கடவுள் என்ன செய்தான்... யோசியுங்கள்... வள்ளியை திருமணம் செய்து கொண்டான் அல்லவா... ஜாதிகளை துாக்கி எறியுங்கள்...சுகமாக, சந்தோஷமாக வாழ, என் வாழ்த்துக்கள்! எம்.அனந்தன், ராஜபாளையம்: நிறைய விளம்பரங்களில், 'குருவி லேகியம் சாப்பிடுங்கள்... பலம் பெறலாம்...' எனக் கூறுகின்றனரே... அதை சாப்பிடலாமா?ஓ... சாப்பிடலாமே! குருவி போல், பறக்கும் ஆசை இருந்தால்! * என்.ரத்தினா நாகராஜ், சென்னை: தமிழகம் முழுவதும், 'சி சி டிவி' கேமராக்கள் பொருத்தும் பணி, மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது... இதனால், குற்றங்கள் அப்போதே குறைய வாய்ப்பிருக்குமா அல்லது இவை நடந்த பின் தான் பயன் தருமா?நடந்த பின் தான்! தெருவுக்கு தெரு, 'காக்கி'களை நிறுத்த வாய்ப்பில்லையே... அதுவும் இப்போது, 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே... திருடர்கள், 'ஹெல்மெட்' அணிந்து வருவதால், முகம் தெளிவாக தெரியாதே... வாகன எண்ணை மாற்றிக் கொடுக்கவும், பல கடைகள் உள்ளனவே! திருடர்கள் திருந்தாத வரை, 'சி சி டிவி' கேமரா இருந்தாலும், சிரமம் தான்! * கே.மூர்த்தி, புதுக்குடி, நெல்லை:நம் சுதந்திர நாட்டில், தங்கள் விருப்பம் போல் செயல்பட முடியாதவர்கள் இன்னும் உண்டா?ஏன் இல்லாமல்... நாட்டின் தலைநகரில் ஒருவரும், ஒவ்வொரு மாநிலத்தில் ஒரு மனிதர் இருக்கின்றனரே... ஆசையாக பெற்றுக்கொள்ளும், ஜனாதிபதி, கவர்னர் பதவியை வகிப்பவர் தாம் அவர்கள்! இவர்கள் குடுமி எல்லாம் ஆட்சியாளர்கள் கையில் தானே உள்ளது!டி.ராஜன், சிவகாசி: சினிமாவில், நடிகையர், வயிற்றையே காட்டிக் கொண்டிருக்கின்றனரே... இது ஏன்?வயிற்றை மட்டும் தானா... சரி விடுங்கள்... அவர்கள் வயிற்றை காட்டுவதெல்லாம், 'அதற்காகத்'தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!வி.வாசுதேவன், கோவை: பல ஆண்டுகளாக, கேள்வி எழுதியும், ஒருமுறை கூட, நீங்கள், எனக்கு பதில் எழுதி, வெளியிடவில்லையே!நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில், மிக மிக, அறிவுப்பூர்வமான பதிலாக இருக்க வேண்டும்... ஆனால், அவை எனக்குத் தெரிவதில்லை... அதனாலேயே இந்தச் சிக்கல்... இப்போது புரிகிறதா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !