அந்துமணி பதில்கள்!
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: 'வன்னியர்கள், மற்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போடக் கூடாது...' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே...'கோ ஒர்க்கர்' சரவணன்... அவரிடம் கேட்டேன்... அவரும் ஒரு வன்னியர். அவர், 'ம்... ஹூம்! நான், அ.தி.மு.க.,விற்கு தான் ஓட்டளிப்பேன்...' என்றார்!ஆர். கணேசன், நெல்லை: உங்களிடம் துப்பாக்கி உள்ளதா?டிசம்பர் 31ல், அதன், 'லைசென்ஸ்' முடிந்தது... அதற்கு முன்னரே, அந்த, .32வை, அதற்கான கட்டணமான, 2,500 ரூபாய் கொடுத்து, புதுப்பித்து விட்டேன்! * ஆர். சுப்பு, மதுரை: வாழ்வதற்கு பணமே முக்கியம் என்பது உண்மைதானா?உண்மை தான், சுப்பு... பணம் இல்லாமலிருந்தால் வாழ்ந்து விட முடியுமா?எம். சவுந்தர், புதுக்கோட்டை: எது எளிது... கேள்வி கேட்பதா, பதில் அளிப்பதா?முதலில் நீங்கள் கேட்டது எளிதானது அல்ல... என்ன பதில் அளித்தாலும் அது, அச்சேறி விடும், சவுந்தர்! (ஹி... ஹி...)ச.ராஜா, ராஜபாளையம்: அந்துமணியார் அவர்களே... எதை நினைவில் கொள்ள வேண்டும்... எதை மறக்க வேண்டும்?உங்களுக்கு பிறர் உதவியதை நினைவில் கொள்ள வேண்டும்; நீங்கள் பிறருக்கு உதவியதை மறக்க வேண்டும்.த. மலர் பிரியன், சென்னை: சினிமாவுக்கு என்று, பத்திரிகைகள் இல்லாமல் போய் விட்டதே...சினிமாவின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது... இந்நிலையில், சினிமா பத்திரிகைகள் எப்படி நிலைக்கும்!க. சேகர், மதுரை: எனக்கு மறதி அதிகமாக உள்ளது... நான், என், 'பைக்'கை ஓட்டலாமா?உங்களுக்கு சுற்றுச் சூழலை உணர்ந்து செயல்படும் தன்மை குறைவாகவே இருக்கும்! இது, ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதனால், சைக்கிளைக் கூட தொடாதீர்கள்!* க. பிச்சுமணி, திருச்சி: எல்லாரும் காந்தியைப் போல் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?வேண்டவே வேண்டாம்! அப்புறம் ஜவுளிக் கடைகளின் விளம்பரங்களே பத்திரிகைகளுக்கு இல்லாமல் போய் விடும்! பிறகு, பரிசுகளும், வாசகர்களுக்கு அளிக்க முடியாமலும், பத்திரிகைகளின் விலையும் வாசகர்கள் கைக்கு எட்டாத விலைக்கும் போய் விடும்!