அந்துமணி பதில்கள்!
தி. ஜெயசீலன், ராஜபாளையம்: அடுத்த முதல்வராக, வைகோ வருவதாக கனவு கண்டேன்; பலிக்குமா?உங்கள் கனவு, கனவாகவே இருக்கும். ஓய்வு பெறும் வயதை எட்டி விட்டார், அவர். அதனால் தான் வாரிசுக்கு பதவியை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!க. சரவணன், சென்னை: தமிழக அரசு, குவாட்டர் பிராந்திக்கு, 10 ரூபாய் ஏற்றி விட்டதே...இதனால், உ.பா., பிரியர்கள் கவலைப்படப் போவதில்லை! ஏற்கனவே, 'டாஸ்மாக்'கில் 5 முதல் 10 ரூபாய் வரை ஏற்றியே விற்றுக் கொண்டிருக்கின்றனராமே!* அ.சுந்தர், திருச்சி: நிலை இல்லாதவை எவை?தாமரை இலை மேல் தண்ணீர் இருப்பது போல், இளமை, செல்வம், ஆயுள் போன்றவை நிலை இல்லாதவை! வி. கவிதா, நெல்லை: ஒரு பெண், புகுந்த வீட்டை சொந்தமாக நினைப்பது நல்லதா அல்லது அந்நியமாக பார்ப்பது சரியா...கவிதா... என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்... அந்நியமாக இருந்தாலும், சொந்தமாக மாற்றிக் கொள்ளும் அணுகுமுறையே, எல்லா பெண்களுக்கும் நல்லது!அ. காவேரி, நெல்லை: அந்தி, சந்தி என்கின்றனரே... என்ன வித்தியாசம்?மாலை நேரத்திற்கும், இரவுக்கும் இடையில் உள்ள நேரம், அந்தி! சந்தி என்பது, இரவு நேரத்திற்கும், காலை விடியலுக்கும் உள்ள இடைவெளி!த. சண்முகப்பிரியா, திருப்பூர்: 'சசிகலாவை, மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொண்டால், கட்சி பலமடையும்...' என்று, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுகுட்டி தமாஷ் பண்ணுகிறாரே...உங்கள் கேள்வியிலேயே பதிலைச் சொல்லி விட்டீர்களே... ஊழல் வழக்கில் நாலு வருஷம் சிறையில் இருந்தவரை தலைவராக ஏற்றுக் கொள்வரா அ.தி.மு.க.,வினர்?பி. ஜெயபிரகாஷ், தேனி: அந்துமணியின் நண்பர் வைரமுத்துவா அல்லது வைரமுத்துவின் நண்பர் அந்துமணியா?அவ்வப்போது, காலையில், கைபேசியில் அழைப்பார்! 'மிஸ்டு கால்' இருந்தால் மட்டும், நான் அழைப்பேன். சிலமுறை என் வீட்டிற்கே வந்து சென்று இருக்கிறார். எனது கைபேசி எண்ணை அவருக்கு கொடுத்தது யார் என்பதை, அவரிடம் நான் கேட்டதில்லை! உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?* ஆர். சுப்பு, விருதுநகர்: சென்னையில் நடந்த, 45வது புத்தக கண்காட்சியில், 15 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதே... இது, கடந்த ஆண்டை விட அதிகமா?எத்தனையோ, எலக்ட்ரானிக் மீடியா வந்தாலும், அச்சிடும் புத்தகங்கள் மீது வாசகர்களின் ஆர்வம் குறையவில்லை. கடந்த ஆண்டை விட, 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக புத்தக விற்பனை நடந்துள்ளது... 15 லட்சம் வாசகர்கள் வந்துள்ளனர்!