காயத்ரி!
அன்று வெள்ளிக்கிழமை; கோவிலுக்கு கிளம்பிய சிவகாமிக்கு, வயிறு பசித்தது; கோவிலுக்குச் சென்று ஆண்டவனை தரிசிக்காமல் சாப்பிடக் கூடாது என்ற உறுதியோடு, கோவிலுக்கு கிளம்பினாள்.குளக்கரையில், மரங்கள் சூழ அமைந்திருந்தது சிவன் கோவில். இங்கு வந்தாலே, மனதுக்கு அமைதியாகவும், இதமாகவும் இருக்கும். இதனாலேயே தினமும், கோவிலுக்கு வர விரும்புவாள். ஆனால், இந்த, 68 வயதில், வீட்டு வேலைகளை எல்லாம் செய்து முடித்து, கோவிலுக்கு வருவதென்பது ஆயாசமாக இருக்கும்.மகன், மருமகள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். வீட்டு வேலைகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் பேரன், பேத்திகளை தயார்படுத்துதல் என, இந்த வயதிலும், உழைக்க வேண்டிய கட்டாயம் சிவகாமிக்கு!சன்னிதியை அடைந்து, சில நிமிடங்கள் கண்ணை மூடி, ஆண்டவனை வணங்கி நிமிர்ந்த போது தான், பிரகாரத்தின் ஓரத்தில் காமாட்சி அமர்ந்திருப்பதை கவனித்தாள். 'அடடே... காமாட்சியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு...' என்று நினைத்தவள், காமாட்சியை நோக்கி விரைந்து, ''காமாட்சி... எப்படி இருக்கே... உன்னைப் பாத்து எவ்வளவு நாளாச்சு நல்லாயிருக்கீயா...' என்று கேட்டு, அவள் அருகில் அமர்ந்தாள்.ஒத்த வயதை உடைய இருவரின் உடம்பிலும் முதுமை தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.''அடடே சிவகாமியா... என்ன கோவிலுக்கு வந்தியா...'' பேச்சை ஆரம்பித்தாள் காமாட்சி.''ஆமாம். இன்னைக்கு வெள்ளிக் கிழமையில்ல... அதான் கோவிலுக்கு வந்தேன். ஆமா... முன்னெல்லாம் ரேஷன் கடை, மளிகைக் கடைன்னு ஏதாவது வாங்க அடிக்கடி வருவே; இப்ப ஆளையே பாக்க முடியலயே...'' என்றாள் சிவகாமி.''இப்பயெல்லாம் நான் எங்கேயும் போறதில்ல சிவகாமி,'' சாந்தமாக பதில் அளித்தவள், வெயிலை வெறித்து பார்த்தாள்.''அதான் ஏன்னு கேட்கறேன்...''''என் பையன் சுரேஷுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல அதான்...''''கல்யாணம் ஆயிடுச்சா எப்ப?''''என்ன தெரியாத மாதிரி கேட்கற...''''உன் பையன் கல்யாணத்துக்கு வந்த மாதிரி எனக்கு ஞாபகமே இல்லயே... எப்ப நடந்தது?''''ஓ... நீதான் அப்ப காசி போயிருந்தியே...'' நினைவு வந்தவளாய் கூறினாள் காமாட்சி.''ஆமா... இப்ப ஞாபகம் வருது. நான், காசிக்கு போயிருந்த சமயம் உன் பையன் கல்யாணம் திடீர்னு நிச்சயம் ஆச்சு; அதான் வர முடியல. அதெல்லாம் சரிதான்... ஆனா, அதுக்கும், நீ வெளியே வராததுக்கும் என்ன சம்பந்தம்?''''இந்த காயத்ரி இருக்காளே... என்னை ஒரு வேலையும் செய்ய விடறது இல்ல. எல்லா வேலையையும் அவளே இழுத்துப் போட்டு செய்றா. அதனால, இப்பெல்லாம் நான் எங்கயுமே வெளிய போறதில்ல; அவசியமே இல்லாம எதுக்கு வெயில்ல அலையணும்,'' என்று கூறியவள், அமைதியானாள்.''பரவாயில்லையே... நீ கொடுத்து வைச்சவ தான். என்னைப் பார்... இந்த வயசுலயும் வீட்டு வேலைகளை செய்துகிட்டு இருக்கேன்,'' என்றாள்.''கடைக்குப் போயி, மளிகை சாமான் வாங்கறது, ரேஷன் கடைக்குப் போறது எல்லாமே காயத்ரி தான்.''''கேட்கவே ஆச்சரியமாக இருக்கு; ரொம்ப பொறுப்பானவ, சுறுசுறுப்பானவள்ன்னு சொல்லு,'' ஆச்சரியத்தில் வாயைப் பிளந்த சிவகாமி வாயை மூடவே இல்லை.''அது மட்டும் இல்ல, எனக்கு கால் வலின்னா கால் பிடிச்சு விடுவா, இடுப்பு வலின்னா இடுப்பு கூட பிடிச்சு விடுவா,'' என்றாள் காமாட்சி.''உன்னைப் பாத்தா பொறாமையா இருக்கு. நீ கொடுத்து வைச்சவ,'' என்று ஏக்கத்துடன் கூறியவள், ''அப்புறம்...'' என்றாள்.''தலைவலின்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் தைலத்தோட எதிர்ல நிப்பா...''''ம்...''''காய்கறி, பால் வாங்கறது மட்டுமில்ல, துணி துவைக்கறது, பாத்திரம் தேய்க்கறதுன்னு எல்லா வேலைகளையும் அவ தான் செய்வான்னா பாத்துக்கோயேன்,'' என்றாள்.''ம்... என் நிலைமையப் பாரு... வேலை நிறைய கிடக்கு. சீக்கிரம் வீட்டுக்குப் போயி, பேரன், பேத்திகளுக்கு டிபன் செய்யணும், இரவு நேர சமையலுக்கு காய்கறி நறுக்கி வைக்கணும். நினைச்சா இப்பவே மலைப்பா இருக்கு. உனக்கு உட்கார்ந்த இடத்துலயே சாப்பாடுன்னு சொல்லு.''''ஆமாம்.''''உன்னோட காயத்ரி நல்லா சமைப்பாளா?'' என்று கேட்டாள்.''என்ன அப்படிக் கேட்டுட்டே... வகை வகையா சமைப்பா. அப்புறம் இந்த சுத்த விஷயம் எடுத்துக்கோயேன்... வீட்டுல ஒரு குப்பை இருக்காது; ஜன்னல், கதவு எல்லாம் கூட துடைச்சு, சுத்தமா வைச்சுப்பா.''''உன் காயத்ரியோட பெருமையை சொல்லி என்னை வெறுப்பேத்தற...''''என்ன சிவகாமி இது... நீதானே கேட்ட; இப்ப இப்படி சொல்றியே!''''கோவிச்சுக்காத காமாட்சி... என் நிலையை நினைச்சுப் பாத்தேன் அதான்... நீ நல்லா இருந்தா போதும்; உன் மருமக காயத்ரி மாதிரி எனக்கும் ஒரு மருமகள் வந்திருந்தா, எவ்வளவு நல்லா இருந்திருக்கும்,'' என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் சிவகாமி.அவளைப் பார்த்து, வறட்டுச் சிரிப்பு சிரித்த காமாட்சி, ''காயத்ரிங்கறது என் மருமக இல்ல; நான் தங்கியிருக்கிற முதியோர் இல்லத்துல வேலை செய்யற பெண். என் மகனுக்கு கல்யாணம் ஆன ஒரு மாசத்துலேயே என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க...'' என, விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவாறே சொல்லி, உணர்ச்சிகளின் பிடியில் தள்ளப்பட்டு, தட்டுத் தடுமாறி மெதுவாக நடந்து சென்றாள் காமாட்சி.அதிர்ச்சியில் சிலையாய் நின்ற சிவகாமியின் கண்களில், நீர்த்திவலைகள் தோன்ற ஆரம்பித்தன. காமாட்சியைப் பார்த்து பொறாமைப்பட்டதற்கு, மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.வெ.ராஜாராமன்