அந்துமணி பா.கே.ப.,
சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மனநல மருத்துவர் ஒருவர், எனக்கு நன்கு பழக்கமானவர். அவரை சந்தித்தபோது கூறிய தகவல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...'முன்பு, 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்று, கு.க., விளம்பரம் செய்தனர். இப்போது, 'ஒன்று பெற்றால் ஒளிமயம்' என்கின்றனர். ஆனால், வீட்டிற்கு ஒரே குழந்தையாக பிறந்து வளர்பவர்களுக்கு மனவளர்ச்சி இருப்பதில்லை மணி...'சகோதர, சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்த குழந்தைகளிடமிருந்து, ஒரே குழந்தை ஏன் மாறுபடுகிறான் என்பதற்கு பல காரணங்கள் உண்டு... முதலாவதாக, வீட்டில் அவன் வயசை ஒத்த குழந்தைகள் யாருமில்லை. சேர்ந்து விளையாடவும், போட்டியிடவும் அவனுக்கு யாருமில்லை. அவனுடன் சரியாகப் பேசவும், விளையாடவும் பெற்றோரால் முடிவதில்லை.'குடும்பம் என்பது ஒரு சிறு உலகம். பெரியவனான பிறகு வெளி உலகத்தில் பழகுவதற்கு, உதவக்கூடிய வாழ்க்கை அனுபவங்களை, தன் வயதை ஒத்த மற்றக் குழந்தைகளுடன் பழகுவதன் மூலம் சின்ன வயசிலேயே கற்றறிகிறது குழந்தை.'ஆனால், தனியாக வளர்ந்த குழந்தை, பெரிய வனான பிறகும் கூட, மற்றவர்களுடன் ஒட்டி பழக முடிவதில்லை. இதனால், 'சமூக வாழ்வுக்கு எதிரி' - ஆன்டி சோஷியல் பீயிங் - என்ற அடை மொழியை எப்பொழுதும் தாங்கியே உலவி வருகிறான்.'அவனுக்குப் பிறகு தம்பி, தங்கைகள், பிறக்காத தால், பெற்றோருக்கு, அவர்கள் என்றென்றும் குழந்தையாகவே இருந்து விடுகின்றனர். பத்து பன்னிரண்டு வயது ஆன பிறகுங்கூட, நாலைந்து வயசுக் குழந்தையின் பேச்சும், நடத்தையுமே அவர்களுக்கு இருக்கின்றன.'இருபது, இருபத்தைந்து வயதான பிறகும் கூட இவர்கள் தாய், தந்தையரைப் பிரிய மறுக்கின்றனர். பெற்றோரின் அளவுக்கு மிஞ்சிய கவனிப்பே, இவர்களின் மன வளர்ச்சியின்மைக்குக் காரணம்.'ஐந்தாறு குழந்தையுள்ள பெற்றோர், தம் அன்பை எல்லா குழந்தைகளுக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கின்றனர். இப்படி ஐந்தாறு இடங்களுக்குப் பிரித்துச் செலுத்தப்பட வேண்டிய அன்பு வெள்ளம், ஒரே குழந்தை விஷயத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மட்டுமே செல்கிறது. அளவுக்கதிகமானால் அமுதமும் விஷந்தானே?' என்றார்.சரி... இரண்டாவது இனி பெற்றுக் கொள்ளுங் கள்... சரிதானா?அன்று, நீண்ட லெக்சர் ஒன்று கொடுக்கும் மூடில் இருந்தார் குப்பண்ணா... அடிக்கு ஒரு முறை என்னைப் பார்த்து, 'வேலை முடிச்சிட்டியா... வேலையை சீக்கிரம் முடி...' எனக் கூறிக்கொண்டே இருந்தார்!ஒரு வழியாக வேலைகளை முடித்து, 'ம்... சொல்லுங்க சார்...' என நான் கூறியது தான் தாமதம்... ஆரம்பித்தார்...'வீரம் என்பது மூன்று வகை... உடம்பால், அறிவால், ஒழுக்கத்தன்மையால்... கப்பல் கவிழும் போதும் சரி, விமானம் முறிந்து விழும் போதும் சரி, - அதைச் சேர்ந்த மாலுமிகளும், விமானிகளும் நடுக்கடலில், கட்டையையும், பலகையையும் பிடித்தபடி, வாரக் கணக்கில் உயிர் வாழ்ந்திருக்கின்றனர்.'இப்படிப்பட்ட பொறுமை யும், மன உறுதியும் கூட வீரம் தான். எல்லையற்ற தாக்குப் பிடிக்கும் சக்தி கொண்ட மனிதர்கள், கடலின் சித்ரவதைகளை, எப்படியெல்லாம் சகித்துக் கொண்டனர் என்பதற்கு எத்தனையோ சம்பவங்கள்...'காப்டன் எட்டி ரிக்கென் பெக்கர், தன்னடக்கத்துடன் ஒரு நிகழ்ச்சியை விவரித்திருக்கிறார்...'ஒருமுறை, கொந்தளிப்பான கடலில், எட்டு பேர் சிக்கிக் கொண்டனர். மூன்று சிறிய கட்டைகளைப் பிடித்தபடி, 21 நாட்கள் தவித்தனர். பகலெல்லாம் வெயில் வறுத்தெடுத்தது; இரவில், குளிர் காற்று உடம்பை உறைய வைத்தது; இருந்தும் அவர்கள் தாக்குப் பிடித்தனர்.'இப்படி கடலோடும், இயற்கை சக்திகளோடும் போராடி உயிர் பிழைக்கிறவர்களின் வாழ்க்கை எதைக் காட்டுகிறது? அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் சக்தியைத்தான். சாதாரண வாழ்க்கை வாழும்போது அதன் துணையை நாம் நாடுவதில்லை.'வீரம் என்பது ஒரு ஆங்க்கர் மாதிரி. ஆழ்ந்த சுரங்கத்துக்கு அது துளை போட்டுச் செல்கிறது. வீரத்துக்குப் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்த சக்திகள் நமக்கு எட்டுவதில்லை. அரை- குறை முயற்சி செய்கிறோம்; எதிர்ப்புச் சக்தி சிதறுண்டு போகிறது.'அச்சத்தை நாடு கடத்துங்கள்; அதன் அளவுக்கு மீறிய அடக்கு முறையையும், முடக்கு வாதத்தையும் சற்றுக் குறைத்தால் கூட போதும்; நம் உறுதியும், சக்தியும் புத்துயிர் பெற்று விடும்.(நியூஜெர்ஸி கடற்கரை ஓரத்தில், 'மாரோ காஸில்' என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து மூழ்கியது. அதில் தப்பிப் பிழைத்த ஒருவர், என்னிடம் பத்துப் பன்னிரண்டு வருடத்துக்கு முன், இந்நிகழ்ச்சியைச் சொன்னார்.)'போதும், போதாததுமா யிருந்த, 'லைப்- போட்டு'கள் கடலில் இறக்கப்பட்டன. கப்பலெங்கும் காட்டுத் தீ போல், நெருப்பு பரவிக் கொண்டிருந்தது. மிஞ்சி யிருக்கும் பயணிகளிடையே குழப்பம், பீதி, அமளி, பதறிப் போய் கடலில் குதித்தேன்.'தண்ணீரில் தத்தளித்தபடி மேலே பார்த்தேன்; அந்தக் காட்சியை மறக்கவே முடியாது...'சிவப்பு முடி கொண்ட இளம் பெண் ஒருத்தி, நீச்சல் உடையணிந்தவளாக, மேல் தட்டில் நின்றிருந்தாள், கடலில் குதிக்க இருந்தவள் நேர் கீழே இருந்த என்னை பார்த்தாள். உடனே, என்னைப் பார்த்து குரல் கொடுத்தாள்... 'என்ன... நம்மால் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியும் என்று அவர்களுக்கு காட்டுவோம்...' என்றாள்...'இப்படிச் சொன்னவள், ஒரு புன்னகையுடன் கடலில் குதித்தாள். அலைகள் உயரமாக எழும்பிக் கொண்டிருந்தன. அதன்பிறகு, அவளை நான் பார்க்கவே இல்லை.'அவள் உயிர் தப்பினாளா, இல்லையா... என்று எனக்குத் தெரியாது. உயிர் தப்பி இருப்பாளானால், அவளுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன்... சாவைச் சந்திக்கும் வேளையில், அவள் முகத்தில் பூத்திருந்ததே ஒரு முறுவல், அது தான் பத்து மைல் தூரத்தை நீந்திக் கடந்து கரையேறும் வலிமையை எனக்கு தந்தது...'உற்சாகம், கும்மாளம், சாகசம்- இவையனைத்தும் இளமைக்கே உரியவை. பலருக்கு வயதாக ஆக, இந்த உல்லாசமும், துள்ளலும் விடை பெற்று மறையக் கூடும்; ஆனால், சிலருக்கு தீரம் மட்டும் கடைசி வரையில் வரும்.'பலரை முடமாக்குகிற அச்சமும், கவலையும் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்தோமானால், அவர்கள், தங்களைப் பற்றியே சதா எண்ணிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று புலப்படும்.'உங்களையும், உங்கள் அற்ப ஆசைகளை காட்டிலும், மிகப்பெரியதான ஓர் உன்னத லட்சியத்தோடு உங்களை ஒன்றுபடுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேற உதவும்படி, அடிக்கடி இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் உள்ளத்தில் தீரம் வெள்ளமாகப் பெருக்கெடுப் பதைக் காண்பீர்கள்...' என்று கொட்டித் தீர்த்தார்!முயற்சித்து பாருங்களேன்.யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர், என்னை காண வந்திருந்தார்... அவரது தமிழ் அழகாக இருந்தது... லென்ஸ் மாமா, யாழ்ப்பாணத்தாரின் தமிழை ரசித்துக் கேட்டார்.அவர் போனபின், 'யாரையும் இவர்கள் ஒருமையில் அழைப்பதில்லை. தம் குழந்தைகளைக் கூட, 'வாருங்கள்... போங்கள்...' என்று தான் சொல்வர்! 'மாமா வந்திருக்கிறார்... வாருங்கள் என்று சொல்லுங்கள்! எங்கே... மாமாவுக்கு ஒரு பாட்டுப் பாடுங்கள்...' என்று தான், தம் குழந்தைகளிடம் பேசுவர்...' என்றார்.'தெரியும் மாமா...இங்கு நம்மூரில், தந்தையோ, தாயோ தம் குழந்தைகளை இப்படிச் சொன்னால், வேறு அர்த்தத்தில் இருக்கும்... 'துரை பத்து மணிக்கு வெளியே போனவர்... சாயங்காலம் ஐந்து மணிக்கு வருகிறீர்களோ...' என்று சொல்வர்... கேட்டிருக்கிறீர்கள் தானே... இதை, அன்பால் சொன்ன வார்த்தையாக எடுத்துக் கொள்ள முடி யுமோ?' எனக் கேட்டேன்...'நீ ஒரு வில்லங்கப் பார்ட்டி...' என்றபடியே நடையைக் கட்டினார்!