உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேசென்னையில் வசிக்கும், பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவரான அர்த்தநாரி, அன்று மதியம் அலுவலகம் வந்திருந்தார். வயது, 70க்கு மேல் இருக்கும். இடைவிடாத வேலைகள் இருந்தாலும், அவ்வப்போது அலுவலகம் வந்து, ஆசிரியரிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள் படிப்பவர். அவரது பேச்சில் நகைச்சுவை இழையோடும். கால மாற்றத்திற்கு ஏற்ப, தன்னையும் புதுப்பித்துக் கொண்டு, எல்லா வயதினரிடமும் ஜாலியாக பேசுவார்.அன்று, ஆசிரியர் வருவதற்கு இன்னும் நேரம் இருந்ததால், அனைவரிடமும் நலம் விசாரித்தவர், லென்ஸ் மாமா எதிரில் அமர்ந்தார். அப்போது, 'ஹீரோ எல்லாம் வில்லனா நடிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா...' என்று புலம்பியவாறு, அங்கு வந்தார், சினிமா பொன்னையா.அதைக் கேட்டதும், 'ஹீரோ, வில்லனாவதும், காமெடியன், ஹீரோ ஆவதெல்லாம் இப்போது தான் என்று நினைக்காதீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக ஒருத்தர் இருந்தார். எந்த, 'இமேஜ்'க்கு உள்ளேயும் தன்னை அடைத்துக் கொள்ளாதவர்...' என்று டாக்டர் கூற, 'யார், யார்...' என்று ஆவலுடன் கேட்டனர், உதவி ஆசிரியைகள்.'நீங்கள்லாம் அவரோட படத்தை அதிகம் பார்த்திருக்க மாட்டீங்க... ஒரே காட்சியில் ஹீரோ, வில்லன், காமெடியன் என்று, கலந்து கட்டி நடித்து, தனி முத்திரை பதித்தவர், 'நடிகவேள்' எனப்படும், எம்.ஆர்.ராதா தான் அவர்...' என்றார்.எம்.ஆர்.ராதா பற்றி இன்னும் பல புதுத் தகவல்களை சொல்லப் போகிறார் என்று, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.அவர் கூற ஆரம்பித்தார்:எனக்கு சொந்த ஊர், திருச்சி என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா! எம்.ஆர்.ராதா வாழ்ந்ததும், மறைந்ததும் திருச்சி தான். அவரது வீடு திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் இருந்தது. அவர் வீடு இருந்த பகுதியை, 'ராதா காலனி' என்றே அழைத்தனர், மக்கள். சிறு வயதில் அவரது வீட்டைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி அங்கு செல்வேன். ஒருமுறை, தன் வீட்டு சாக்கடையில் அடைப்பு ஏற்பட, அதை சரி செய்வதில் ஈடுபட்டிருந்தார், ராதா. அதைப் பார்த்த ஒருவர், 'நீங்க எவ்வளவு பெரிய ஹீரோ. இந்த வேலையெல்லாம் நீங்க செய்யலாமா?' என்று கேட்டார்.அதற்கு, 'என் வீட்டு சாக்கடையை தான் சரி செய்கிறேன். அடுத்தவர் வீட்டு சாக்கடையை அள்ளவில்லை. செய்யற வேலையில் என்னையா ஒஸ்தி, மட்டம்... எல்லாம் ஒன்று தான். போய்யா, வேலையைப் பார்த்துட்டு...' என்றதும், கேட்டவரின் முகம் அஷ்டக்கோணல் ஆகியது.'அடியே காந்தா...' என்ற அவரது கரகரத்த குரலை, முதன்முதலில் கேட்ட ஊர், திருச்சி தான். ஜன., 14, 1949ல், தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் தலைமையில், 'ரத்தக்கண்ணீர்' நாடகம், திருச்சியில் தான் அரங்கேறியது; 3,000 முறை மேடையேறி, சாதனை படைத்தது.'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை, காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார், சினிமாவாக எடுக்க, ராதாவை அணுகினார். முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார், ராதா.'சினிமாவுக்கு நடிக்க வந்தாலும், நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகத்தின் முடிவில், தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிக்கும் காட்சியை மாற்றக் கூடாது. நந்தனார் படத்தில் நடிக்க, கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதைவிட அதிகமாக, 25 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்...' என்றார், ராதா. எல்லாவற்றுக்கும் சம்மதித்தார், பெருமாள் முதலியார்.ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும், 'நடிகவேள்' பட்டம் தரப்பட்டதும், திருச்சியில் தான். 'போர்வாள்' நாடகம், திருச்சி தேவர் ஹாலில் நடந்தபோது, ஈ.வெ.ரா., முன்னிலையில், 'நடிகவேள்' என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி.எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்த நாடகம், 'ராமாயணம்!' மேடையின் இரண்டு பக்கமும் தன் நாடக எழுத்துக்கு ஆதாரமான சமஸ்கிருத மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அடுக்கி வைத்தார். திருச்சி தேவர் ஹாலில், 'ராமாயணம்' நாடகம் நடந்தபோது, 'என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள், அவர் எம்மதத்தினராய் இருந்தாலும், கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும், எனக்கு வேண்டாம்...' என்றார், துணிச்சலோடு. 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' என்ற நாடகத்தில், பெண்கள் படும் வேதனைகளை அழுத்தமாக எடுத்துரைத்தார், ராதா. ஊர் பெரியவர்கள் சிலர், நாடகம் நடத்தத் தடை கேட்டு, நீதிமன்றம் சென்றனர். அப்போது, கணேசய்யர் என்பவர், நீதிபதியாக இருந்தார். நாடகத்துக்கு தடை விதிக்க மறுத்த கணேசய்யர், ஒருநாள் நாடகம் பார்க்க வந்தார்.எல்லாக் காட்சிகளையும் ரசித்த கணேசய்யர், 'விதவைகள் படும் துன்பம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் எனும் இந்த நாடகம், நாட்டுக்குத் தேவையானது. நாடகம் எல்லா ஊரிலும் நடக்கட்டும். ராதா நீண்டநாள் வாழ்ந்து தொண்டு செய்யட்டும்...' என்றார்.முரடர் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அன்பும், மனிதமும் நிறைந்தவராகவே வாழ்ந்தார், ராதா. என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ஏ.பி.நாகராஜன், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.ஆர். மகாலிங்கம், வசனகர்த்தா இளங்கோவன், பட்டுக்கோட்டை அழகிரி, யதார்த்தம் பொன்னுசாமி போன்று, பலரின் கடைசிக் காலத்தில் உதவி செய்தவர், ராதா மட்டும் தான். நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்தபோது, அவரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதோடு, அவரது சமாதியில், 48 அடி உயரத்தில் நாதஸ்வரம் செய்து வைத்தார். அவரின் மகனுக்கு, மெக்கானிக் பட்டறையும் வைத்துக் கொடுத்தார்.ராதாவால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவர், ஜி.டி.நாயுடு. எங்கும் அதிகநேரம் உட்கார்ந்தே பழக்கப்படாதவர், மூன்று மணி நேரம் உட்கார்ந்து ராதாவின் நாடகத்தை ரசித்தார். தன் தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்காக ராதாவின் நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்தார், ஜி.டி.நாயுடு. மேடையிலேயே, 72 ஆண்டுகள் வாழ்ந்த ராதா, செப்., 17-, -1979ல், திருச்சியில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். - என்று கூறி முடித்தார், டாக்டர் அர்த்தநாரி.'நடிகர்களிடையே இவர் வித்தியாசமானவர்ப்பா...' என்றார், லென்ஸ் மாமா.'இனி, எம்.ஆர்.ராதா நடித்த படங்களை, தேடித் தேடி பார்க்கப் போகிறேன்...' என்றார், உதவி ஆசிரியை ஒருவர்.'டாக்டராக இருந்தும், பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறாரே...' என்று நினைத்துக் கொண்டேன், நான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !