உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'நம்மூரில் நவகிரக ஸ்தலங்களுக்கு சுற்றுலா, காசி, நேபாளம் சுற்றுலான்னு விளம்பரம் செய்றாங்க... அதுக்கு போய்வரக் கூட, நம்மில் பலரிடம் பணம் இல்லை. ரஷ்யக்காரன் என்னடான்னா, நூறு கோடி ரூபாய் கட்டணம் வாங்கி, பயணியை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புகிறான்! சுற்றினாலும் மார்கோ போலோ போல சுற்றினால் சரித்திரத்திற்காவது பயன்படும்!' என்றார் குப்பண்ணா.'மார்கோ போலோவா? அது ஏதோ நம்மூர் பிராந்தி, விஸ்கி ஐட்டம் இல்லே...' என்றேன்.கப்பல் பயணியான மார்கோ போலோ எப்போதும், தண்ணியிலேயே, அதாவது, கடலிலேயே இருந்ததால், இந்த, 'தண்ணி' சரக்குக்கும் அவன் பெயரை வைத்திருக்கின்றனர் போலும்.'இத்தாலிக்காரனான, போலோ தான், ஆசியா கண்டம் முழுவதையும் முதன் முதலாக பார்த்தவன். ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த நாட்டின் ஜனங்கள், அவர்கள் வியாபாரத் தன்மைகள் அவ்வளவையும் எழுதி வைத்திருக்கிறான்.'நம் தமிழ்நாடு, 13ம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதை, அவன் ஒன்று விடாமல் குறிப்பிட்டிருக்கிறான். படித்தால் ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது - சில நம்ப முடியாததாயிருந்தாலும் கூட! நம் தேசத்தை அவன், 'மாபார், மாபார்' என்று குறிப்பிட்டிருக்கிறான்!' என்றார் குப்பண்ணா.'ஒரு வேளை மலபாரை - அதாவது, கேரளாவை தான் அப்படி குறித்திருக்கிறாரோ, என்னவோ?' என்றேன்.'இல்லையே... அதை மலபார் என்றே தனியாக குறித்திருக்கிறான். சிலோனை அவன் சைலான் என்கிறான். முத்துக்குளித்தலைப் பற்றியும், நம் முத்து வியாபாரத்தைப் பற்றியும் விவரித்திருக்கிறான். அதிலே ஒன்று, படிக்க ஆச்சரியமாயிருக்கிறது. கிடைக்கிற முத்தில், பத்தில் ஒரு பங்கு ராஜாவைச் சேருமாம்...''ஆச்சரியமென்ன இதில்? நிலத்திலே விளைவதில், இத்தனையில் ஒரு பங்கு ராஜாவுக்கு என்று தருவதில்லையா?' என்றேன்.'சரிதான், ஆனால், கிடைக்கிற முத்தில்... இருபதில் ஒரு பங்கு மந்திரவாதிகளுக்குத் தந்து விடவேண்டுமாம்...''மந்திரவாதிகளா? அவர்கள் எங்கேயிருந்து வந்து முளைத்தனர்?' என்றேன்.'முத்தெடுக்க முழுகுகின்றனரே, அவர்களை மீன்கள் கடித்து விடாமலிருப்பதற்காக, மீன்கள் வாயை மந்திரம் போட்டுக் கட்டி விடுவார்களாம், அந்த மந்திரவாதிகள்; அதற்காகத்தான் அந்தச் சன்மானம்.'அதே மாதிரி, இரவு வேளையில் திருட்டுத் தனமாக யாராவது கடலில் மூழ்கி முத்தெடுத்து விடாமலிருப்பதற்காக, இரவில் மீன்கள் வாயை மந்திரக் கட்டிலிருந்து எடுத்து விடுவராம். திருட வருகிறவர்களைக் கடிப்பதற்காக' என்று விளக்கினார் குப்பண்ணா.— நல்ல கூத்து தான் என்று நினைத்து கொண்டேன்!***'பந்திக்கு முந்து, படைக்கு பிந்துன்னு ஒரு பழமொழி இருக்கே... வீரத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தில், இப்படி ஒரு பழமொழி இருக்க முடியுமா? புறநானூறு என்ற வீர காவியம் எழுந்த நாட்டிலா, இப்படி ஒரு பழிச்சொல்?' எனக் கேட்டேன் குப்பண்ணாவிடம்.'நீ சின்னப் பையன்ங்கறதாலே இப்போதான் உனக்கு இந்த உணர்வு வந்திருக்கு... எனக்கு, 30 வருஷத்துக்கு முன்னாலயே இந்த உணர்வு இருந்தது. மதுரைக்கார அன்பர் ஒருவர் இக்குழப்பத்தை தீர்த்து வைத்தார்...'அந்த அன்பர், இப்பழமொழி வழங்கக் காரணம் என்னவென்று சிந்தித்து, பல அன்பர்களிடம் வினவி இருக்கிறார். 'பந்திக்கு முந்து; படைக்கு பிந்து - அதாவது, சாப்பிட, முதல் பந்தியிலேயே உட்கார்ந்து விடு. முதல் பந்தியில் சாப்பிடுபவர்களுக்கு படைப்பதற்கு (பரிமாறுவதற்கு) பிந்து. ஏனென்றால், சோறு, கறி, காய்களை பரிமாறுவதில் ஈடுபட்டு விட்டால், பின்னர் நீ உட்கார்ந்து சாப்பிட மனம் கொள்ளாது... என்று விளக்கம் கூறி இருக்கின்றனர்.'இது அத்தனை பொருத்தமாக அவருக்குப் படவில்லை.'காலஞ்சென்ற பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவண முதலியாரிடம் (அ.ச.ஞானசம்பந்தத்தின் தந்தையார்) அவரது ஐயத்தைக் கூறி விளக்கம் கேட்டிருக்கிறார்.'அவர் கூறிய கருத்து: பந்திக்கு முந்து; படைக்கு பிந்து என்பது பழமொழியே அல்ல. அது ஒரு விடுகதை. பந்திக்கு முந்தும்; படைக்குப் பிந்தும்; அது என்ன? என்று கேட்பது அக்காலத்தில் வழக்கம்.'அந்த விடுகதைக்கு விடை, வலது கை என்பதாகும். பந்தியில் சாப்பிட உட்காரும் போது, நம் வலது கைதான் முந்தி உணவை எடுக்கும்.'வில்லேந்தி போருக்குச் செல்லும் போது, அதே வலது கை, எவ்வளவுக்கெவ்வளவு பின் செல்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அம்பானது வேகமாகச் செல்லும்.'இந்த விடுகதையே நாளடைவில் சிதைந்து, தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் பழமொழியாக உருவெடுத்து விட்டது எனக் கூறி உள்ளார்' என்றார் குப்பண்ணா.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !