உள்ளூர் செய்திகள்

ஏவி.எம்., சகாப்தம் (15)

கதை சரியாக இல்லாமல், பிரமாண்டம் மட்டுமே வெற்றிக்கு கை கொடுக்காது என்ற பாடத்தை, வீரத்திருமகன் படத்தின் வாயிலாக கற்றுக்கொண்டோம்.கடந்த, 1960களில், தமிழ் திரை உலகில் மாபெரும் இயக்குனராக விளங்கினார், பீம்சிங். ஒருமுறை அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, 'வெற்றிகளின் மூலம் என்னை அழைத்து போய், எவரெஸ்ட் சிகரத்தில் நிற்க வைத்துள்ளனர். இப்படி ஒரு இமாலய வெற்றிக்கு அடுத்து, பெரிய தோல்வி வரலாம் அல்லது எனக்கு ஏதும் பாதகம் நேரலாம் என்று பயந்து கொண்டிருக்கிறேன்.'ஏனென்றால், உச்சிக்கு வந்து விட்டவன், அடுத்து அங்கிருந்து இறங்கி தான் ஆக வேண்டும். அப்படி ஒரு இறக்கம் வந்து, நான் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த உச்சியிலேயே நிலைத்து நிற்கவும், நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்...' என்றார். அந்த அளவுக்கு, வெற்றிக்களிப்பில் மிதந்து விடாமல் கவனமாக இருந்தவர், பீம்சிங்.தான் எடுத்த படத்தை, வெளியிடுவதற்கு முன், திரும்ப திரும்ப போட்டு பார்ப்பார்; மற்றவர்களையும் பார்க்க வைப்பார். அதிலிருக்கும் குறைகளை யார் சொன்னாலும், அதற்கு மதிப்பளித்து திருத்துவார்; உதவி இயக்குனர்களை பெரிதும் மதிப்பார்.எங்களுடன் கூட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த, ஜி.கே.புரொடக் ஷன் நிறுவனத்தின், சி.ஆர்.பசவராஜ், பீம்சிங்கை இயக்குனராக வைத்து, படம் தயாரிக்க விரும்பினார். அதற்காக, அப்பாவை அணுகி, கதை வேண்டும் என்று கேட்டார்.இயக்குனராவதற்கு முன், ஏ.சி.திருலோகசந்தர், பத்திரிகைக்காக ஒரு கதை எழுதி வைத்திருந்ததை, எங்களிடம் கூறியிருந்தார். பசவராஜ் கதை வேண்டுமென்று கேட்கவே, ஏ.சி.திருலோகசந்தர், எங்களிடம் சொன்ன கதை பற்றிய விபரத்தை அப்பாவிடம் தெரிவித்து, அது எங்களுக்கு பிடித்திருப்பதாகவும் சொன்னோம்.'கதை அவருடையதாக இருந்தாலும், பீம்சிங் தான் இயக்க வேண்டும்...' என்றார், பசவராஜ்.'அதற்கென்ன... பீம்சிங் நமக்கு வேண்டியவர் தான். சொன்னால் கேட்பார்...' என்றார், அப்பா.பீம்சிங்கை அணுகி, ஏ.சி.திருலோகசந்தரின் கதையை கொடுத்து, 'நீங்கள் எங்களுக்கு இயக்கி தரவேண்டும்...' என்றோம். 'படித்துவிட்டு சொல்கிறேன்...' என்றார், பீம்சிங்.கதையை படித்த பின், 'நீங்கள் கொடுத்த கதையை படித்தேன். நாவல் படிப்பது போல் இருக்கிறது. திரைக்கதைக்கு ஏற்றதாக இல்லை. அதனால், திரைக்கு ஏற்றார் போல், இக்கதையில் சில மாற்றங்களை செய்து கொள்வேன். திருலோகசந்தர் சம்மதித்தால், இக்கதையை இயக்குகிறேன்...' என்றார்.இந்த விஷயத்தை, ஏ.சி.திருலோகசந்தரிடம் தெரிவித்தோம். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். படம் எடுக்க தயாரானோம்.அக்கால கட்டத்தில், களத்துார் கண்ணம்மா மற்றும் சகோதரி போன்ற படங்களை, பீம்சிங் இயக்கி இருந்தார். என்றாலும், அவருடைய பெரும்பாலான படங்கள், படிக்காத மேதை, பச்சை விளக்கு, பந்த பாசம், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும், பார் மகளே பார், பாவமன்னிப்பு மற்றும் பாசமலர் என, 'பா' என்ற முதல் எழுத்தில் தலைப்புகள் அமைத்து, வெற்றிகளை குவித்தார். அதனால், எங்கள் தயாரிப்பிற்கும், 'பா' வரிசை ராசியை வைத்து, பார்த்தால் பசி தீரும் என்று பெயர் வைக்கப்பட்டது.நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சரோஜா தேவி, சாவித்திரி போன்ற பிரபல நடிகர் - நடிகையர் ஒப்பந்தமாயினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். படப்பிடிப்பு நடந்தபோது, இயக்குனர் பீம்சிங்கிற்கும், கதாசிரியர் திருலோகசந்தருக்கும் சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.கதையில், இயக்குனர் செய்யும் மாற்றங்கள், கதாசிரியருக்கு பிடிக்கவில்லை. இது, படத்தயாரிப்பில் பெரும் சிக்கலை உண்டாக்கியது. எல்லா சிக்கல்களையும் சமாளித்து படத்தை முடித்து, 1962ல் வெளியிட்டோம். ஆனால், படம் எதிர்பார்த்தபடி வெற்றி அடையாமல், சுமாராக ஓடியது. இயக்குனருக்கும், கதாசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், ஒத்துழைப்பு இல்லாமையே படம், பெரும் வெற்றி பெறாததற்கான காரணமாக அமைந்தன.தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றி கண்ட, களத்துார் கண்ணம்மா படத்தை, இந்தியில் எடுக்க முயற்சி மேற்கொண்டார், அப்பா.இயக்குனராக, பீம்சிங்கை தேர்ந்தெடுத்து, அவரிடம் தெரிவித்தார். எடுத்த எடுப்பிலேயே அவர், 'எனக்கு இந்தி தெரியாது. நான் எப்படி இந்தி படம் இயக்குவேன். என்னை விட்டுடுங்க...' என, மறுத்தார்.'என்ன இப்படி சொல்லிட்டீங்க... மும்பையிலிருந்து வந்த மராட்டியர் தானே நீங்க... உங்களுக்கு, இந்தி தெரியாதா...' எனக் கேட்டார், அப்பா.'எங்க மூதாதையர்கள், தமிழகத்தில் வந்து குடியேறி ரொம்ப வருஷமாச்சு. நாங்க வளர்ந்தது எல்லாம் இங்கே தான்...' என்றார், பீம்சிங்.'பரவாயில்ல... இந்தி தெரியாத, கிருஷ்ணன் - பஞ்சு, பாபி என்ற இந்தி படத்தை இயக்கி, வெற்றி பெறலையா... அவர்களுக்கு ஏற்பாடு செய்தது போலவே, இந்தி தெரிந்த உதவியாளரை தருகிறோம், செய்ங்க...' என்றார்.'இந்தி படங்களே பார்த்ததில்லையே... அந்த கலாசாரமே எனக்கு தெரியாதே...' என்றார், பீம்சிங்.'அவ்வளவு தானே...' என்று, அவர் பார்ப்பதற்காக, இந்தி படத்தை போட்டு காட்ட ஏற்பாடு செய்தார், அப்பா.இந்தி படத்தை பார்த்ததும், 'பரவாயில்லையே... தமிழ் படம் எடுப்பது போல் தான் அவர்களும் எடுத்திருக்கின்றனர்; கலாசாரமெல்லாம் ஒன்றும் பெரிதாக வித்தியாசப்படவில்லை...' என்ற தைரியம் வந்து, படத்தை இயக்க, ஒப்புக் கொண்டார். சுனில்தத், மீனாகுமாரி, பப்லு என்ற குழந்தை நட்சத்திரம் ஆகியோர் தேர்வாகினர். படத்தின் பெயர், மேய்ன் சுப்ரஹுங்கி - நான் வாய் திறக்க மாட்டேன்.படப்பிடிப்பு முடிந்து, வெளியிட தயாரானது. இந்நேரத்தில், மாலா சின்ஹா மற்றும் ராஜேந்திரகுமார் நடித்த, பி.ஆர்.சோப்ராவின் படமான, துால் கா பூல் - குப்பையில் கிடந்த மாணிக்கம் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்தது. இப்படம், நோ படீஸ் சைல்ட் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது.ஒரே நேரத்தில் வேற்று மொழி படம் ஒன்றை பார்த்து, அவரவர் சிந்தனைக்கேற்ப எழுதிய கதாசிரியர்களின் கற்பனை எப்படி வேலை செய்கிறது பாருங்கள். இருந்தாலும், இந்தி படத்தை துணிந்து வெளியிட்டார், அப்பா.ஏவி.எம்., தயாரித்த, மேய்ன் சுப்ரஹுங்கி படம், 1962ல், 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி, சாதனை படைத்தது. இப்படி பல போராட்டங்களுக்கு இடையிலும், மனம் தளராமல், அப்பா மேற்கொண்ட முயற்சிகள் எல்லா வகையிலும் வெற்றியையே தந்தது.— தொடரும்ஏவி.எம்.குமரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !