உள்ளூர் செய்திகள்

குளிகை கால பூஜை!

காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றுடன், குளிகை நேரத்தையும் குறிப்பிட்டிருப்பர். இதுவும் மற்ற காலங்களைப் போல், தினமும் ஒன்றரை மணி நேரம் வரும். ராகு காலம், எமகண்டத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை. குளிகை நேரத்தில், அசுப நிகழ்ச்சிகள் செய்யக் கூடாது.ஒருவரது இறப்பை, அசுபமாக கருதுகிறோம். எனவே, இறந்தவருக்கு குளிகை நேரத்தில் இறுதிச் சடங்கு செய்யக் கூடாது. குளிகை நேரத்தில் அசுப நிகழ்ச்சிகளை செய்தால், அதுபோன்ற நிகழ்ச்சிகள், அந்த வீட்டில் தொடரும் என்பது ஐதீகம். இறப்பு மட்டுமல்ல... இந்த நேரத்தில் கடன் வாங்குதல், வீடு காலி செய்தல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஆனால், சுபநிகழ்ச்சிகள் செய்யத் தடையில்லை. சனீஸ்வரரின் மகன், குளிகன். இவர், தினமும் ஒன்றரை மணி நேரம் ஆட்சி செய்கிறார். இவரது ஆட்சி நேரமான குளிகையில், சுப நிகழ்ச்சிகளை செய்யும் போது, அதை பல்கிப் பெருகச் செய்வார்.ராகு காலத்தில், துர்கா தேவிக்கு விளக்கேற்றும் வழக்கம் இருக்கிறது. இதுபோல் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்க, குளிகை நேரத்தில், பைரவருக்கு விளக்கேற்றி, பூஜை செய்வர். இந்த வழக்கம், திருச்சி அருகிலுள்ள திருநெடுங்குளம், நெடுங்குளநாதர் கோவிலில் இருக்கிறது. அன்னை பார்வதி, சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளின் தவத்தை மெச்சிய சிவன், அவள் அறியாதவாறு வேறு வடிவில் வந்து, கரம் பிடித்தார்; தன் உடம்பின் இடப்பாகத்தில் இடம் அளித்தார்.மற்ற கோவில்களில் மூலஸ்தானத்தில், நடுவில் இருக்க வேண்டிய சிவலிங்கம், திருநெடுங்குளத்தில், பார்வதிக்காக தன் இடப்பாகத்தை அளித்த காரணத்தால், சற்று தள்ளி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, அர்த்தநாரீஸ்வர கோலம் என்பர். அதே போல், கருவறை மேல், ஒரு விமானம் இருக்கும். இங்கு, சிவன், தன் மேனியில் பார்வதிக்கு இடம் கொடுத்ததால், கருவறை மேல் இரண்டு விமானங்கள் எழுப்பியுள்ளது விசேஷம். வந்திய சோழ மன்னனுக்கு, இவ்வூர் சிவன் பேரழகுடன் காட்சியளித்ததால், 'நித்திய சுந்தரேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. அம்பிகை மங்கள நாயகி, நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.திருமண யோகம் கைகூட, இங்குள்ள வாராகி அம்மனுக்கு அருகில் உள்ள உரலில் மஞ்சள் இடித்து, துாவி வழிபடுகின்றனர். தொழில், வியாபாரம் சிறக்க, கால பைரவருக்கு குளிகை நேரத்தில், தீபம் ஏற்றுகின்றனர். நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்க, ராகு காலத்தில் வழிபடுகின்றனர். லட்சுமியை ஸ்ரீதேவி என்பர். இவள் சுறுசுறுப்பாக இருப்பாள். ஓரிடத்தில் நிலைத்து நிற்க மாட்டாள். இன்று பணக்காரராக இருப்போர், நாளை ஏழையாகி விடலாம். ஆனால், இவளது சகோதரி, மூத்த தேவி - ஜேஷ்டாதேவி, சோம்பலாக இருப்பாள். அதிகாலையில் எழாமல் துாங்குவது, சோம்பலாக இருப்பது, முகத்தில் இருள் சூழ்ந்திருப்பது ஆகியவற்றுக்கெல்லாம் இவளே காரணம். இவள், தன் மகன் விருஷபன், மகள், நமனையுடன் இங்கு இருக்கிறாள். 'அம்மா... உன் சோம்பல் எனக்கு வரக்கூடாது...' என, இவளிடம் மனமுருகி வேண்டினால், தன் நிலை மற்றவர்களுக்கு வராமல் தடுத்து நிறுத்துவாள். இந்த கோவிலில், ஓர் கல்யாண குதிரை இருக்கிறது. ஒரு காலத்தில், இளவட்டக்கல் எனப்படும் கனமான கல்லைத் துாக்கும் ஆண்களுக்கே, பெண் கொடுக்கும் வழக்கம், கிராமங்களில் இருந்தது. திருநெடுங்குளத்தில், சற்று வித்தியாசமாக, இவ்வூர் கோவிலிலுள்ள கனமான வெண்கல குதிரை சிலையைத் துாக்கும் ஆண்களுக்கே, பெண்கள் மணம் முடித்து தரப்பட்டனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநெடுங்குளத்துக்கு பஸ்கள் உண்டு. துவாக்குடி வழியாக, 19 கி.மீ., சென்றால், திருநெடுங்குளத்தை அடையலாம். திருநெடுங்களம் என்றும், இவ்வூருக்கு பெயர் உள்ளது. தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !