உள்ளூர் செய்திகள்

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (12)

மாணவ பருவத்தில், நான் காரைக்குடியில் இருக்கும் போது, பத்திரிகைகளில் வந்த, எஸ்.எஸ்.வாசன் பிக்சர்சின், வேதாளம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் வித்தியாசமான விளம்பரங்களை பார்த்து பிரமித்து இருக்கிறேன்.சந்திரலேகா போன்ற பிரமாண்ட படத்தை இயக்கிய, திரையுலக பிதாமகர், வாசனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது.அவரது மாப்பிள்ளை மணி, என்னை தேடி வந்து, ஒரு படத்தை பார்க்கச் செய்தார். அந்த படத்தை, தான் இயக்குவதாகவும், நான் தான் கதை, வசனம் எழுத வேண்டும் என்றார்.நானும், திரைக்கதையை தயார் செய்தேன்.'இதை, வாசன் தான், ஓ.கே., செய்ய வேண்டும். அவரிடம், கதையை சொல்லுங்கள்...' என்று, என்னை அழைத்துச் சென்றார்.அவரது அறை வாசலுக்கு போன போது, 'ஐ கேனாட் டாலரேட் திஸ் நான்சென்ஸ்' - 'என்னால் இந்த முட்டாள்தனத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது...' என்று, ஒருவரை திட்டிக்கொண்டு இருந்தார்.'சாருக்கு, மூடு சரியில்லை போல இருக்கு... இன்னொரு நாள் வரட்டுமா...' என கேட்டு, நான் கிளம்ப யத்தனித்தேன்.'அதெல்லாம் வேண்டாம்... தப்பு செய்தவரை திட்டுகிறார், நாம என்ன செய்தோம் பொறுங்க...' என்றார், மணி.வாசன் துாக்கிப் போட்ட பேப்பரை கையிலும், திட்டை முகத்திலும் தாங்கி வெளியேறினார், உதவியாளர். என்னைக் கூப்பிட்டு அனுப்பினார், வாசன்.என்னை பற்றி, மணி விஸ்தாரமாக சொன்ன போது, அதை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.'உட்காருங்க...' என்றார்.என்ன பண்றீங்க, எப்படி இருக்கீங்க, என்ன சாப்பிடுறீங்க என்று, எந்த விசாரிப்பும் கிடையாது. 'ம்... கதையை சொல்லுங்க...' என்றார்.'கதாநாயகன், டீ எஸ்டேட் முதலாளி. அதனால, ஒரு பிரமாண்டமான டீ எஸ்டேட்டின் மத்தியில் குதிரையில் வருகிறான்...' என்றேன்.இரண்டு முறை டீ என்ற வார்த்தை அழுத்தி உச்சரித்தேன். அப்படியாவது, டீ குடிக்க ஏற்பாடு செய்வாரா என்ற நப்பாசையில்...ஆனால், அவரோ, 'நிறுத்து... நிறுத்து... கதாநாயகன், ஏன் குதிரையில் வரணும்...' என்றார். 'கதைப்படி, அப்படி தான்...' என்றேன்.'கதைப்படி இல்லை, கதாசிரியர் விருப்பப்படி... ம்... மேலே சொல்லுங்க...' என்றார். அவரிடம் கதை சொல்லி, ஓ.கே., செய்து எடுத்த படம் தான், சாந்தி நிலையம். இதற்கான கதையை கேட்டு முடித்த பிறகு, 'எல்லாம் சரி... நான் ஒரு நாலணா டிக்கெட்காரன்... எனக்கு இந்த கதையில ஒண்ணுமே இல்லையே...' என்றார்.'இல்லை சார்... நாகேஷ் நகைச்சுவை, குழந்தைகள் லுாட்டி இருக்கிறது...' என்றெல்லாம் சொன்னாலும், அவர் சமாதானம் ஆகவில்லை. கடைசியில் அவர் சொன்னது போலவே, படம், 'ஹைகிளாஸ் ஆடியன்சால்' பிரமாதமாக வரவேற்கப்பட்டது. நாலணா டிக்கெட் என்று சொல்லப்பட்ட, 'லோ கிளாஸ் ஆடியன்சை ரீச்' செய்யவில்லை.ஸ்ரீதருக்கும், அந்த ராசி உண்டு. அவர் படத்திற்கு, எப்போதுமே, 'ஹைகிளாஸ்' டிக்கெட்டுகள் தான் முதலில், 'புக்'காகும். அவர் ரசித்து எடுத்த படம், நெஞ்சிருக்கும் வரை. வழக்கம் போல, நகைச்சுவை பகுதிகளுக்கு பொறுப்பேற்றேன்.படத்தின் ஆழம் கருதி, கருப்பு - வெள்ளையிலேயே எடுக்கப்பட்டது. படத்தில் நடித்த, சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட யாருக்கும், 'மேக் - அப்' கிடையாது.வேலை கிடைக்காத மூன்று இளைஞர்களின் போராட்டத்தை சொல்லும் கதை. இந்த படத்திற்காக, வாலி எழுதிய, 'நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு வாழ்ந்தே தீருவோம்...' என்ற பாடல், வேலை இல்லாத இளைஞர்களின் மனக்கவலைக்கு மருந்தாக, இப்போது வரை இருந்து வருகிறது.இந்த படம் சரியாகப் போகவில்லை. இதற்காக, ஸ்ரீதரை விட, கவலைப்பட்டது அவரது ரசிகர்கள் தான். சினிமாவில் இருந்தாலும், எனக்கான சந்தோஷம் நாடகத்தில் தான் அதிகமாக இருந்தது. ஆகவே, திரும்ப நாடகத்தின் பக்கம் வந்தேன்.'திருவல்லிக்கேணி யூனிட்டி கிளப்' மூலம், நிறைய நாடகங்கள் போட்டேன். என் நாடகங்களில் நடிக்க, அப்போதைய முன்னணி நடிகர்கள் ஆர்வமாக இருந்தனர். காரணம் கேட்டு வா, மாயா பஜார், ஸ்ரீமதி மற்றும் திக்குத் தெரியாத வீட்டில் என்று, வரிசையாக நகைச்சுவையை பிரதானமாக வைத்து, நாடகங்கள் வந்தன.மனோரமா, மூர்த்தி உள்ளிட்டோர் நடித்தனர். நானும், காட்சியின் தேவைக்கேற்ப நடிப்பேன்.இப்படி ஒரு நாடகத்தில், நான், பாடி, நடிப்பதை பார்த்த சிவாஜி, என்னை வீட்டுக்கு கூப்பிட்டு அனுப்பினார். சரி, ஏதோ திட்டப் போகிறார் என்று போனால், 'உன்னைய எழுத்தாளர்ன்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா, பாடிகிட்டே நடிக்கிற... அது, எவ்வளவு கஷ்டம் தெரியுமா... அதனால, என் வீட்டில், உனக்கு விருந்து. என் மனைவி, கமலா கையால் உனக்கு சாப்பாடு...' என்று பாராட்டி, விருந்தளித்தார்.அது, ஆயிரம் ஆஸ்காருக்கு சமானம் என்றே இன்றும் நினைக்கிறேன்.என் நாடக ஆர்வத்தை, சிவாஜியின் பாராட்டு துாண்டி விட, முழு மூச்சில் உட்கார்ந்து ஒரு நாடகம் எழுதினேன். அந்த நாடகம் தான், என்னை உச்சத்திற்கு அழைத்து சென்றது.அந்த நாடகம் சினிமாவாக எடுக்கப்பட்டது. அதுவரை, துணை வசனகர்த்தா, நகைச்சுவை பகுதிகளுக்கான வசனகர்த்தா என்று, 'டைட்டில் கார்டில்' வந்த என்னை, கதை, வசனம், இயக்கம் கோபு என்று, பெயர் போடும் நிலைக்கு உயர்த்தியது.அது என்ன நாடகம்?கவுரமான படம், சாந்தி நிலையம்!ஜி.எஸ்.மணி இயக்கத்தில், சாந்தி நிலையம் படம், 1969ல் வெளிவந்தது. ஜெமினி கணேசன், காஞ்சனா நடித்திருந்தனர்.இந்த படத்தில், லுாட்டி அடிக்கிற குழந்தை நட்சத்திரங்களாக, ரமாப்பிரபா, மஞ்சுளா, ரோஜாரமணி ஆகியோர் நடித்திருந்தனர். இப்போது, அவர்களுக்கு, லுாட்டி அடிக்கிற பேரக்குழந்தைகளே இருக்கும்.கண்ணதாசன், விஸ்வநாதன் காம்பினேஷனில், 'இயற்கை என்னும்... கடவுள் ஒருநாள்... பூமியில் இருப்பதும்... இறைவன் வருவான்...' என்பது போன்ற, அற்புதமான பாடல்கள் அமைந்திருந்தன. — தொடரும்எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !