அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: கருணாநிதி என்னிடம் சொன்ன பஞ்ச்!
என் மகன் அரசு ராமநாதனின் திருமண வரவேற்புக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி வருகிறார் என்றதுமே, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே உற்சாகம் பீறிடத் துவங்கி விட்டது.பல நேரங்களில், நம் வீட்டினரே உண்மை பின்னணிகளை உணராமல் இருப்பர். என் அழைப்பை மதித்து கருணாநிதி வருகிறார் என அறிந்ததுமே, வீட்டில் என் மரியாதை சற்று கூடிவிட்டதாக உணர்ந்தேன்.'அப்பா! நிச்சயமா கருணாநிதி வர்றாரு இல்ல? நம்பி, என் நண்பர்கள்கிட்டே சொல்லலாம்ல? பலரும் பார்க்கணும்கிறாங்க...' என்றான், மகன் அரசு.'நம்பிச் சொல்லு. கருணாநிதி வருவது உறுதி...' என்றேன். ஒப்புக் கொண்ட நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்வார், கருணாநிதி.வரவேற்புக்கு சற்று முன்னதாகவே, ராஜா முத்தையா மண்டபத்துக்கு வந்து விட்ட கயல் தினகரன், 'உங்களுக்கு இந்த திருமண பரபரப்பிலும் கேட்டுக் கொள்ள ஒரு செய்தி இருக்கிறது. சொல்லட்டுமா?' என்றார்.'நல்லாச் சொல்லுங்க...' என்றேன்.'தலைவரின் உதவியாளர் சண்முகநாதன் என்னிடம் பேசினார். 'யாருங்க இந்த தம்பி? கருணாநிதி எழுந்து நின்று வரவேற்று, எழுந்து நின்று வழியனுப்புறார். எனக்கு ஆச்சரியமாப் போச்சு'ன்னு, சொன்னார்...''சண்முகநாதன் அப்படியா சொன்னார்?' என்றேன்.'ஆமா. லேனாவை உங்களுக்குத் தெரியாதா? தமிழ்வாணனோட மகன் என்றேன், அவரிடம். 'ஓ! தமிழ்வாணன் மகனா? பெரியவரைத் தெரியும். இந்த தம்பியை இப்பத்தான் பார்க்கிறேன்'ன்னு சொன்னார், சண்முகநாதன்...' என்றார்.இந்த எளியவனுக்கு, கருணாநிதி தந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, வியந்து போனேன்.கருணாநிதி, தம் எளிமையால் என்னை மட்டுமல்ல, தம் நெருங்கிய வட்டமான சண்முகநாதன் மற்றும் கயல் தினகரனையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்.வரவேற்பன்று காலையில், போனில் அழைத்தார், சண்முகநாதன்.'தலைவர் வருவது உறுதி. தயாரா இருந்துக்குங்க. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டீங்க தானே?' என்றார்.'பண்ணிட்டேன்யா...' என்றேன்.'தலைவர் மகன், கனிமொழி அம்மா, உதயநிதி, கிருத்திகா எல்லாரும் வர்றாங்க...''என்னய்யா சொல்றீங்க!''ஆமா. வர்றாங்க. பார்த்துக்குங்க...'என் அருமையை குடும்பத்தினருக்கு உணர்த்திய, கருணாநிதி குடும்பத்துக்கு நான், என்றென்றும் நன்றிக்கடன் பட்டவன்.கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு அப்பாற்பட்டு, இப்படி கருணாநிதி குடும்பமே ஏதேனும் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனரா என்பதை, கழக கண்மணிகள் தான் எனக்கு சொல்ல வேண்டும்.வரவேற்பில் நம் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடித்த, 'கமென்ட்'டை, என்னால் மறக்கவே முடியாது.'உங்களையே நான் இன்னும் சின்னப் பையன்னு நெனச்சுக்கிட்டிருக்கேன். உங்களுக்குத் திருமண வயதில் மகனா?' என்றாரே பார்க்கலாம்.எனக்கு, 32 பற்களைத்தாண்டி ஏதேனும் சில பற்கள் இருந்திருந்தால் அவையும் தெரிந்திருக்கும். அப்படி ஒரு சிரிப்பு எனக்கு!சரத்குமார் - ராதிகாவுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தேன். பத்திரிகையாளர்களுக்கு நல்ல தோழர் சரத்குமார். நன்கு பழகுவார். ராதிகாவும் பந்தாவே தெரியாதவர். கருணாநிதிக்கும் - சரத்குமாருக்கும் அரசியல் இடைவெளி இருந்த காலம் அது. சரத்குமார் மெல்ல ஒதுங்க, 'எங்கே ஒதுங்குறீங்க? இங்க வாங்க...' என, கருணாநிதி, அவர்களை ஈர்க்க, பூரித்துப் போயினர்.'இருவரும், வீட்ல வந்து பாருங்க...' என்றார், கருணாநிதி. இது வெறும் அழைப்பு அல்ல! அரசியல் அழைப்பு!எங்கள் வீட்டு நிகழ்வில் நடந்த இந்த நிகழ்வு, இவர்களுக்குள் நல்ல அரசியல் பிணைப்பை ஏற்படுத்தியது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.கருணாநிதி இல்லத்து நிகழ்வுகள் எது என்றாலும், எனக்கு நிச்சயம் அழைப்பு வரும்.நம் துணை முதல்வர் உதயநிதியின் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய போது, மேல் உறையின் மீது, என் பெயரை, கருணாநிதியே கைப்பட எழுதியிருந்ததை, அவரது இதயத்தில் பெற்ற நல்லிடமாக நான் கருதுகிறேன்.உதயநிதியின் மாமனார் ராமசாமி, எங்கள் பகுதிக்காரர்.கருணாநிதியிடம், 'இரு தரப்பிலிருந்தும் எனக்கு அழைப்பு ஐயா...' என்றதும், 'தெரியும்! சம்பந்தி உங்க ஆளுல்ல அவர்...' என்றார், கருணாநிதி.கருணாநிதி என்ன சொல்கிறார் என்பது, உங்களுக்குப் புரிந்தது அல்லவா?இதன் அர்த்தமும், அழகும் எனக்கு நன்கு புரிந்தது!—தொடரும்.லேனா தமிழ்வாணன்