உள்ளூர் செய்திகள்

போலிச்சாமியார்களை நம்பாதீர்கள் ! தி.செல்லப்பா

நவ., 30 - மெய்ப்பொருளார் குருபூஜை!பக்தியைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை வளர்த்து, அவர்களை ஏமாற்றும் பித்தலாட்டக்காரர்கள் பெருகி விட்டனர். இந்த போலிகளிடம் சிக்கி, தங்கள் உயிர், பொருள், மானத்தை இழந்தவர்களும் உண்டு. இன்று நேற்றல்ல... புராணகாலத்திலேயே இவர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை, மெய்ப்பொருளார் என்ற மாமன்னரின் கதை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.திருக்கோவிலூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு, சேதி நாட்டை ஆட்சி செய்தவர் மெய்ப்பொருளார். இவர் கார்த்திகை மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்; சிறந்த சிவபக்தர். திருநீறு பூசிய யாரைப் பார்த்தாலும், அவரைச் சிவனடியாராகக் கருதுபவர். அவர்களுக்கு தகுந்த மரியாதை செய்து அனுப்புவார். இந்த பலவீனத்தைப் பயன்படுத்த நினைத்தான் முத்தநாதன் என்பவன். இவன் பக்கத்து நாட்டின் அரசன்; நாத்திகவாதி. மெய்ப்பொருளாரிடம் ஒரு காலத்தில் தோற்றவன். அவரது வீரத்தின் முன் தன் போர் நடவடிக்கைகள் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்ட அவன், வஞ்சகமாக அவரைக் கொல்ல முயற்சித்தான். உடல் முழுக்க திருநீறு பூசி, சாமியார் வேடத்தில் மெய்ப்பொருளாரின் அரண்மனைக்கு வந்தான். கையிலே ஏட்டுச்சுவடி கட்டு ஒன்று இருந்தது; கமண்டலம் வைத்திருந்தான்.   சிவனடியார்கள் யார் வந்தாலும், அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது மெய்ப்பொருளாரின் உத்தரவு. எனவே, காவலர்கள் அவரைத் தக்க மரியாதையுடன் உள்ளே அனுப்பினர். முத்தநாதன் இங்கிதம் தெரியாதவன். அந்நேரத்தில், மன்னர், அரசியுடன் அந்தப்புரத்தில் இருந்தார். அந்தப்புர வாசலை, தத்தன் என்ற மெய்க்காப்பாளன் காவல் புரிந்தான். அவன் மிகுந்த புத்திசாலி. வந்திருப்பது சாமியார் வேடமுள்ள வேறு யாராகவோ இருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டாலும், திருநீறு பூசிய எவரையும் தொடக்கூடாது என்ற மன்னரின் உத்தரவுப்படி, 'அடியவரே... மன்னர் அந்தப்புரத்தில் இருக்கிறார். சற்று பொறுங்கள்... அவர் வெளியே வந்ததும் சந்திக்கலாம்...' என்றான்.     'நீ யாரடா என்னைத் தடுப்பதற்கு... நான் உள்ளே போவேன்...' என, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். அங்கே மஞ்சத்தில் அமர்ந்திருந்த மன்னர் தம்பதிகள் திடுக்கிட்டு எழுந்தனர். தன் முன்னால், ஒரு சிவனடியார் நின்றதால், மன்னன் சுதாரித்துக் கொண்டு அவரை வரவேற்றான்.முத்தநாதன் அவரிடம்,'சிவபெருமான் எனக்களித்த சுவடி ஒன்று என்னிடம் உள்ளது. இதை வாசித்துக் காட்டி, உன்னை மோட்சமடைய செய்யவே இவ்வளவு அவசரமாக வந்தேன்...' என அவன் சொல்லவும், ராணியை அனுப்பி விட்டு மெய்ப்பொருளார் தரையில் அமர்ந்து முத்தநாதனின் கால்களில் விழுந்து பாதத்தைத் தொடும் வேளையில், சுவடிக்கட்டை அவிழ்த்த முத்தநாதன், அதில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தினான். இதைக் கவனித்து விட்ட தத்தன், உருவிய வாளுடன் வந்து முத்தநாதனைக் கொல்ல முயன்றபோது, 'திருநீறு பூசியவரை எதிரியாயினும் கொல்லக் கூடாது. அவரை பத்திரமாக வெளியே கொண்டு விட்டுவிடு...' என்றார். தத்தனும், அவரை அனுப்பி விட்டு ஓடி வந்தான். அவன் பத்திரமாகச் சென்று விட்டான் எனத்தெரிந்த பிறகே மெய்ப்பொருளாரின் உயிர் பிரிந்தது. ராணி அலறியடித்து ஓடிவந்து கதறினாள். அப்போது, சிவபெருமான் அங்கு தோன்றி, மன்னருக்கு உயிர் கொடுத்தார். திருநீறு பூசியதற்காக எதிரியையும் மன்னித்த மன்னரை வாழ்த்தினார். அதன்பின், மெய்ப்பொருளார் பலகாலம் சிவத்தொண்டு செய்து கைலாயம் அடைந்தார்.  போலிச்சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கொண்டு கணிக்காதீர்கள். உண்மைத் துறவிகளை அடையாளம் கண்டு, அவர்களையே குருவாக ஏற்கவேண்டும். படம்:  எம்.ஹரிஹர செல்வன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !