தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (8)
தடையுத்தரவைத் தவிர்க்க என்ன வழி? அப்பா என் மீது விதித்த தடை உத்தரவுகளிலேயே, 'லேனாவைத் தேடி இனி ஒரு பயல் வீட்டிற்கு வரக்கூடாது...' என்ற உத்தரவைத் தான், மிகக் கடுமையான ஒன்றாக நான் கருதினேன். இப்போது எனக்கு இரக்கமற்ற மனிதராகவே தோன்றினார், அப்பா. அவரை வெறுக்கத் தலைப்பட்ட அத்தியாயத்தின் முதல் பாராவை, நான் மனதால் எழுத ஆரம்பித்தேன்.அப்பாவைப் பற்றிய மதிப்பீடுகள், அவரது பெரும்பாலான மகன்களுக்கு மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அம்மா பற்றிய மதிப்பீடுகள் அப்படி அல்ல. இவை பெரும்பாலும் மாறுவது இல்லை.இள வயதில், அம்மாவிடம் சாதித்துக் கொள்ள முடியாத சவுகரியங்களை, அப்பாவிடம் தான் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு மனநிலை, அப்பாவைத் தாஜா பிடிக்கும் மன நிலையோடு தான், ஒரு மகனை வளரச் செய்கிறது.சற்றே விபரம் தெரிகிற வயதில், 'எங்கப்பா யாரு தெரியுமா? அவரு பெரிய... (பிஸ்தா)வாக்கும்...' என்கிற பாணியில், சக நண்பர்களிடம் ஒரு மகனைப் பெருமை பேச வைக்கிறது. அவனது வாலிபத்திலோ, அவன் கேட்டது கிடைக்காவிடில், அப்பா என்பவர், வில்லன் போல் தெரிகிறார்.இவன் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அல்லது திருமணமானதும், அப்பாவை மதியாத போக்கு இவனுக்குள் மெல்ல ஆரம்பிக்கிறது. அப்பா, இவனைச் சார்ந்து வாழ நேரும் காலம் வரும்போது, அவரைப் பற்றிய அலட்சிய மனோபாவம், இவனுக்குள் வளருகிறது.அவர் இறந்ததும், 'இப்ப நெனச்சுப் பார்க்கிறேன். எனக்காக அவர் எவ்வளவு தியாகங்களை செஞ்சிருக்காரு தெரியுமா... தெய்வம் தெரியுமா அவர்...' என்கிறான், அதே மகன். எனக்கோ, என் அப்பா இப்போது வில்லன் போல் தெரிய ஆரம்பித்தார்.இனி, இவரிடம் நற்பெயர் எடுத்து, அவரை நெருங்க, எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை. அப்பாவிடம் நற்பெயர் வாங்க முடியும் என்கிற நம்பிக்கையும் போய் விட்டது.படிப்பில், உயர் மதிப்பெண்கள் எடுத்து அவரிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்றால், வாய்ப்பே இல்லை. படிப்பு மீது வேப்பங்காய் அளவிற்கு வெறுப்பு.ஒற்றைப் பிள்ளையாக, பெரியம்மா வீட்டில் செல்வச் சூழலில் செல்லமாக வளர்ந்த விதம், என் நினைவலைகளில் வந்து நிழலாட, ஏக்கம் பெருகியது. கண்களில் நீர் மல்கவே, தேவகோட்டைக்குத் திருட்டு ரயில் பிடித்து ஓடி விடலாமா என்று கூட, வேகம் வந்தது.இந்த வேகமும், சலிப்புணர்வும் அந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வின், 'புராக்ரஸ் ரிப்போர்ட்'டில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. பெயர் தான், 'புராக்ரஸ் ரிப்போர்ட்!' புராகிரஸாவது, மண்ணாங் கட்டியாவது... மட்டமான மதிப்பெண்கள்!வகுப்பாசிரியர் பசுபதி சார், 'புராக்ரஸ் ரிப்போர்ட்'டை என் கையில் கொடுத்த போது, 'ஏண்டா இவ்வளவு மோசமா மார்க் வாங்கியிருக்கே? அப்பா பேரைக் கெடுத்திடுவே போலிருக்கே...' என்று சூடேற்றியதோடு, 'இந்த முறை அம்மாகிட்டே கையெழுத்து வாங்கிட்டு வந்தா உதைப்பேன். அப்பா கையெழுத்து வேணும், தெரிஞ்சுதா?' என்று மேலும் ஒரு குண்டைத் துாக்கிப் போட்டார்.சாதாரணமாகவே அப்பாவைப் பார்க்க எனக்குள் சலிப்பாக இருக்க, இந்தப் படு பாதாள மதிப்பெண்களை வேறு, எப்படிக் கொண்டு போய் நீட்டுவது? சிவப்பு அடிக்கோடிட்ட மதிப்பெண்கள், அப்பாவின் கண்களைச் சிவந்து போகச் செய்யாதா?எனவே, தவறான ஒரு முடிவை எடுத்தேன். நானே கையெழுத்தைப் போட்டு போய் நீட்டினேன். இதற்காக அப்பாவின் கையெழுத்தை, அவர் வாசகர்களுக்கு எழுதும் கடிதங்களைத் தேடி எடுத்து வைத்து, பலமுறை பயிற்சி செய்துதான் போட்டேன்.ஆனாலும், வந்தது வினை!பசுபதி சார், சரியாக கண்டுபிடித்து விட்டார்.'அயோக்கியப் பயலே! திருட்டுக் கையெழுத்தா போடுற... இப்படியே விட்டா, நீ பெரிய கே.டி.,யாகத்தான் வருவே...' என்று வகுப்பை அப்படியே நிறுத்தி விட்டு, கையைப் பிடித்துத் தரதரவென்று தலைமை ஆசிரியரின் அறைக்கே இழுத்துப் போனார்.இந்தத் தலைமை ஆசிரியர் என்றால், பள்ளியே நடுங்கும். துாய தும்பைப் பூ மஸ்லின் வேஷ்டி, அரைக்கை ஜிப்பா, நெற்றியில் சந்தனப் பொட்டு சகிதமாக அவர், பள்ளி வராண்டாவில் வந்து நின்றால், பயல்கள் கையெறி குண்டு வீசியது போல் சிதறி ஓடுவர். தங்கள் முகம் அவர் மனதில் பதிந்துவிடக் கூடாதே என்பதற்காக!அவர் என்றால் மாணவர்களுக்கு அப்படி ஒரு கெட்ட பயம்! மாணவர்கள் எவரேனும் அவரிடம் மாட்டிக் கொண்டால், அவர்களது டிராயர் அங்கேயே நனைந்து விடும். அப்படி ஒரு கிடுகிடுக்க வைக்கும் ஆசாமி, அவர்.'தமிழ்வாணன் புள்ள சார் இவன். பாருங்க சார் இவன் பண்ண காரியத்தை... 'புராக்ரஸ் ரிப்போர்ட்'ல இவனே கையெழுத்துப் போட்டிருக்கான்...''உம் பேரு?''லக்ஷ்மணன்...' (என் தாத்தாவின் பெயர் தான் எனக்கும்.)'உங்கப்பா எவ்வளவு பேமஸ் மேன்! இப்படிப் பண்ணலாமாடா நீ? சரியான, 'ரோகாக' இருக்கியேடா...'நானே குனிந்து, என் டிராயரைப் பார்த்துக் கொண்டேன். என்னையும் அறியாமல், 'அது' நிகழ்ந்து விடுமோ என்று. இல்லை. நல்ல வேளை! டிராயர் நனையவில்லை. என் துணிச்சலை (!) எண்ணி, நானே வியந்து கொண்டேன்.'இனி நீ சரிப்பட்டு வரமாட்டே. உங்கப்பாவை நாளைக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு. அவர் வரலேன்னா உனக்கு டி.சி., தான்...' என்றாரே பார்க்கலாம்!நீச்சல் வீரர்!'மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்...' என ஆன்மிகச் செல்வர், கிரிதாரி பிரசாத்தால் அழைக்கப்பட்ட தமிழ்வாணன், நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், காவிரியாற்றங்கரையில் வளர்ந்தவர். இதன் காரணமாக, காவிரியின் ஒரு கரையிலிருந்து மறுகரை வரை நீந்தக் கூடிய கலையைக் கற்றிருந்தார்.தன் தலைமுறையும் நீச்சல் கலையை அவசியம் அறிந்திருக்க வேண்டும் என்று, மெரினா நீச்சல் குளத்திற்கு, தன் பிள்ளைகளை அழைத்துச் சென்று, அக்கலையை கற்றுக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.— தொடரும்லேனா தமிழ்வாணன்