ஹாலிவுட் படத்தின், 'ரீ-மேக்'கில், விஜய்!
தற்போது, வாரிசு படத்தில் நடித்து வரும், விஜய், அடுத்தபடியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். 'கேங்ஸ்டர்' கதையில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட்டில் வெளியான, ஏ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படத்தின் தமிழ், 'ரீ-மேக்' ஆகும். முழுக்க முழுக்க, 'ஆக் ஷன்' கதையில் உருவாகும் இந்த படத்தில், விஜயுடன் ஆறு அதிரடி வில்லன்கள் மோத உள்ளனர். அதோடு, ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில், பல ஹாலிவுட் டெக்னீஷியன்களும் பங்கெடுக்கின்றனர். இப்படி அதிரடி, 'ஆக் ஷன்' கதையில், விஜய் நடிக்கும் இப்படத்தில், ஒரு பாடல் கூட இல்லையாம். ஆனால், 'ஓப்பனிங்' காட்சியில், 'மாஸ்' ஆன, 'தீம் மியூசிக்'குடன், 'என்ட்ரி' கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார், விஜய்.சினிமா பொன்னையா
அதிக சம்பளம் கேட்கும், சமந்தா!
தற்போது, சமந்தாவின் மார்க்கெட் ஹிந்தி சினிமா வரை பறந்து விரிந்து, கதாநாயகி மட்டுமின்றி, கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கதையின் நாயகியாக படங்களில் நடிக்க, 2 முதல் 3 கோடி கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார். அதே சமயம், முன்னணி, 'ஹீரோ'களுடன் நடிப்பதற்கு, 3.5 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கேள்வி கேட்டால், 'கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில், என்னை சுற்றியே மொத்த கதையும் சொல்லும். இதனால், எனக்கு மனதளவில் திருப்தி கிடைக்கும். ஆனால், முன்னணி, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடிக்கும் போது, என்னை, 'கிளாமருக்கு' மட்டுமே பயன்படுத்தி, 'டம்மி' பண்ணி விடுகின்றனர்.'அப்படி நடிப்பதால், மனதளவில் எனக்கு எந்த திருப்தியும் இல்லை. அதன் காரணமாகவே, சம்பளம் விஷயத்திலாவது திருப்திகரமாக இருக்கட்டுமே என்று, இது போன்ற படங்களில் நடிப்பதற்கு படக்கூலியை உயர்த்துகிறேன்...' என்று கூறியிருக்கிறார்.எலீசா
'லிப்லாக்'கிற்கு தடை போடும், சிம்பு!
ஒரு காலத்தில், ரொமான்ஸ், 'லிப்லாக்' காட்சிகள் என்றால், புகுந்து விளையாடி வந்தவர் தான், சிம்பு. சமீபகாலமாக, ஆன்மிகத்திற்கு மாறிய பின், நடிகையருடன், 'லிமிட்' தாண்டி நடிப்பது, உதட்டு முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகளில், நடிக்க மறுக்கிறார்.அதோடு, 'என் படங்களை, குடும்பத்துடன் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கக் கூடாது...' என்று இயக்குனர்களை கேட்டுக் கொள்ளும் சிம்பு, கதை கேட்கும்போதே, பல காட்சிகளுக்கு கத்தரி போடுகிறார்.அசைவ நடிகராக வலம் வந்த, சிம்பு, இப்படி அநியாயத்துக்கு சைவத்துக்கு மாறியிருப்பது, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு, செம அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர், சினிமா வட்டாரத்தினர்.சினிமா பொன்னையா
அதிர விடும், நதியா!
கடந்த, 1980 - 90களில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நதியா. திருமணத்திற்கு பின், இளவட்ட நடிகையருடன் போட்டி போடும் அளவுக்கு, தன் அழகை பராமரித்து வருபவர், சில பாடல் காட்சிகளில், இளவட்ட நடிகையரை மிஞ்சும் அளவுக்கு, அதிரடி நடனமாடுகிறார்.அதிலும், இளவட்ட நடிகையர், பல, 'டேக்' வாங்கும் நிலையில், நதியாவோ, 'சிங்கிள் டேக்'கில் ஓ.கே., பண்ணி விடுகிறார். 55 வயதாகியும், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் நதியாவின், 'எனர்ஜி'யைப் பார்த்து, டோலிவுட்டில், அவரை விஜயசாந்தி பாணியில், 'ஆக் ஷன்' கதைகளில் நடிக்க வைக்கவும் தயாராகி வருகின்றனர்.— எலீசா
சந்தானத்தின் அடுத்த அவதாரம்!
தமிழ் சினிமாவில், முன்னணி காமெடியனாக இருந்து, 'ஹீரோ'வானவர், சந்தானம். தொடர் தோல்விகளை சந்தித்த போதும், விடாமுயற்சியுடன், 'ஹீரோ' பயணத்தை தொடர்ந்து வருகிறார்.சமீபகாலமாக, விஜய்,- தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், தங்களுக்கு தாங்களே பின்னணியும் பாடிக் கொள்வதால், இப்போது தான் நடிக்கும், கிக் படத்தில், பின்னணி பாடகராகவும் உருவெடுத்துள்ளார், சந்தானம்.'இந்த பாடலுக்கு, ரசிகர்கள் தியேட்டரில் இருக்கையை விட்டு எழுந்து ஆட்டம் போட்டு, வரவேற்பு கொடுத்தால், அதன் பிறகு நான், 'ஹீரோ'வாக நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், ஒரு பாடல் பாடுவேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்பு குறைந்து விட்டதால், 'வெப் சீரியல்'களில் நடிக்க துவங்கி விட்டார், நடிகை அஞ்சலி.* ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபுவை வைத்து, தன் புதிய படத்தை இயக்குகிறார், ராஜமவுலி. இந்த படத்தில், ஜுராசிக் பார்க், அயன்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள, சாமுவேல் எல்.ஜாக்சன் என்ற நடிகர், முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்.* இந்தியன் - 2 படத்திற்காக, தற்காப்பு கலை மற்றும் குதிரை ஏற்றம் பயிற்சி எடுத்திருக்கிறார், காஜல் அகர்வால். அதோடு, கதையின் நாயகியாக நடிப்பதற்கும், கதை கேட்டு வருகிறார்.அவ்ளோதான்!