பேய் நகரம் செர்னோபில்!
கடந்த, 1986ல், சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்றிருந்த, உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு நகரம், செர்னோபில். இங்கு, பெரிய அளவில் அணு உலைகள் இயங்கி வந்தன. இதனால், 30 கி.மீ., சுற்றளவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.ஏப்., 26, 1986ல், அணு உலை வெடித்ததால், அணு கசிவு ஏற்பட்டது. அடுத்த, 30 மணி நேரத்தில், 30 கி.மீ., சுற்றளவில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்றும், 30 கி.மீ., சுற்றளவுக்கு, மக்கள் வசிக்க அனுமதியில்லை.ஆனால், இந்த தடையை அலட்சியம் செய்து, 150க்கும் மேற்பட்டோர், இங்கு வசித்து வருகின்றனர். அத்துடன், தாங்கள் வசித்த வீட்டின் வெளியே, 'வீட்டின் உரிமையாளர் இங்கு வாழ்கிறார்' என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். பசு மாடு, நாய் போன்றவற்றையும் வளர்க்கின்றனர்.இங்கு, வசிப்பவர்களில், 70 - 80 வயதுக்குட்பட்டோர் அதிகம். கேட்டால், 'எதையும் சந்திக்க தயார்; எங்கள் சொந்த வீட்டில் தான் உயிரை விடுவோம்...' என, கூறுகின்றனர்.இங்குள்ள, வீடுகளின் வெளி சுவரில், ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். மேலும், போர்ச்சுக்கல் நாட்டின் பிரபல ஓவிய கலைஞரான, பான் டோனியாவையும் அழைத்து வந்து, சுவர்களில் ஓவியம் வரைய வைத்துள்ளனர்.மக்களை வெளியேற்றிய போது, தங்களின் வளர்ப்பு பிராணிகள், கால்நடைகளை இங்கேயே விட்டுச் சென்றனர். அவற்றின் வழி வழி வந்தவை, இன்றும், இங்கு வாழ்கின்றன. கூடுதலாக, அக்கம் பக்கத்திலிருந்து, நரி மற்றும் கரடிகளும் இங்கு வந்து உலாவுகின்றன.அங்கு, பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை திறக்க இருந்தனர். ஆனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னே விபத்து நடந்து விட்டது.அதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த, 'ஜெயின்ட் வீல்' இன்றும் அப்படியே உள்ளது. இப்போது, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். கதிர்வீச்சு உள்ளதாக கருதப்படும் பகுதிகள் வழியாகவும் அவர்கள் பயணிக்கலாம். ஆனால், கட்டடங்களுக்குள் நுழைய அனுமதியில்லை. இங்கு, தற்போது, ஓட்டல் மற்றும் இரண்டு கடைகள் வந்துள்ளன.— ஜோன்னாபையன்